ஏகாதசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏகாதசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 மார்ச், 2018

ஷட்திலா ஏகாதசி (மாசி மாதம் கிருஷ்ண பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

மாசி மாதம் கிருஷ்ண‌ பட்சத்தில்(தேய்பிறை) வரும் ஏகாதசி திதியை ஷட்திலா ஏகாதசியாக கொண்டாடுவர். ஷட்திலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.


மனதிற்கு மிகவும் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் ஏகாதசி விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வாயிலாக கேட்டு மகிழ்ந்த அர்ஜூனன், பக்தியுடனும், சிரத்தையுடனும் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி "மதுசூதனா தாங்கள் கூறிய ஏகாதசி விரத மஹாத்மியக் கதைகள் என் மனதிற்கு அபார மகிழ்ச்சியும், சாந்தியும் தருகிறது. ஆகவே ஜகதீஸ்வரா, மற்ற ஏகாதசி விரத மஹாத்மியக் கதைகளையும் கேட்டு மகிழ என் மனம் விழைகிறது. தாங்கள் க்ருபை புரிய வேண்டும்." என்று வேண்டினான். 

இதைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் "பார்த்தா! இப்பொழுது மாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியக் கதையை உனக்குக் கூறுகிறேன் கேள்" என்று கூறலுற்றார். 

ஒரு சமயம் தாலப்ய ரிஷி, புலஸ்த்ய ரிஷியிடம் "முனிசிரேஷ்டரே! பூமியில் மனிதர்கள் மற்றவர்களின் செல்வத்தை திருடுதல், அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், பிரம்மஹத்யா போன்ற மாபாதகமான பாவச்செயல்களைச் செய்தல் ஆகியவற்றை, குரோதம், பொறாமை, உணர்ச்சியின் உத்வேகம் மற்றும் அறிவின்மையின் வசப்பட்டு செய்கின்றனர். பின்னர் "ஐயோ! நான் எத்தகைய மாபாதகத்தை செய்து விட்டேன்" என மனம் வருந்துகின்றனர். 

"முனிசிரேஷ்டரே அத்தகைய மனம் வருந்தும் மனிதர்கள் நரகம் செல்லுவதிலிருந்து விடுபட ஏதேனும் உபாயம் உள்ளதா? தான, தர்மம் மோட்சப்பிராப்தியை அளிக்கும் என்றால் எவ்வித தானத்தின் புண்ணிய பிரபாவத்தால் அவர்கள் நரகம் அடைவதிலிருந்து விடுபட முடியும்? தயவு கூர்ந்து நல்வழியைத் தாங்கள் தான், அவர்களுக்கு கூறி அருள வேண்டும்." என்றார்.

புலஸ்த்ய ரிஷி "மஹாபாகா! இவ்வுலக வாழ் மக்கள் அனைவருக்கும் பயனை அளிக்கும் முக்கியமான, அர்த்தமுள்ள, கம்பீரமான கேள்வியை கேட்டுள்ளாய். உன் கேள்விக்கு பதிலாக, இந்திரன் முதலான தேவர்களும் கூட இதுவரை அறிந்திராத ரகசியத்தை அவசியம் கூற வேண்டி உள்ளது. கவனத்துடன் கேள். மாசி மாதம் அதிகாலையில் ஸ்நானம் முதலியவற்றை முடித்து சுத்தமாக இருப்பதுடன், இந்திரியங்களை உள்ளடக்கி, காமம், குரோதம், லோபம், மோகம், பொறாமை, அகங்காரம் இவற்றை விட்டொழித்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவை த்யானம் செய்ய வேண்டும். 

பூச நட்சத்திர தினத்தன்று பசுவின் சாணம் பூமியில் விழும் முன்பே சேமித்து, அதனுடன் பஞ்சு மற்றும் எள் சேர்த்து 108 பந்து உருண்டைகளாக செய்து வைத்தல் வேண்டும். மூல நட்சத்திரமும், ஏகாதசி திதியும் சேர்ந்து வரும் நன்நாளில் புண்ணியம் அளிக்கும் நற்கருமங்களை செய்ய வேண்டும். தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாவிஷ்ணுவிற்கு விமரிசையாக அபிஷேக ஆராதனைகள் செய்து, நாள் முழுதும் கீர்த்தனை, நாமஸ்மரணம் என்று ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று இரவு கண் விழித்து முன்பு செய்து வைத்திருக்கும் 108 பந்து உருண்டைகளை கொண்டு யாகம் செய்ய வேண்டும்.. மறுநாள் தூப, தீபம், நைவேத்யத்துடன் பகவான் விஷ்ணுவின் பூஜை செய்து கிச்சடியை நைவேத்யமாக அர்ப்பணிக்க வேண்டும். அன்று மஹாவிஷ்ணுவிற்கு பால்பேடா, தேங்காய், சீதாப்பழம், கொய்யாப்பழம், பூசணி, (இவை கிடைக்காதபட்சத்தில் பாக்கு) இவற்றை கீழ்க்கண்ட பிரார்த்தனையுடன் அர்க்யம் கொடுத்தல் வேண்டும்.

அர்க்ய பிரார்த்தனை: "பகவான் தாங்கள் திக்கற்றவர்களுக்கு புகலிடம் அளிப்பவர். இவ்வுலக மாயையில் மூழ்கி இருப்பவர்களை மீட்பவர். புண்டரீகாக்ஷா, தாமரை மலரை ஒத்த கண்களை கொண்டவரே! விஸ்வவிதாதா (உலகைப் படைத்தவரே! சுப்ரமண்யா!! ) நீங்கள் தேவி லக்ஷ்மீ சகிதம் அடியேன் அளிக்கும் சிறிய அர்க்யத்தை ஏற்க வேண்டும்." அதற்குப் பிறகு பிராம்மணருக்கு ஜலம் நிரம்பிய கும்ப கலசம், குடை, காலணி, அங்கவஸ்திரத்துடன் உடை, எள் இவற்றை தானம் அளிக்க வேண்டும். முடிந்தால் பிராம்மணருக்கு பசுவுடன் எள் தானம் அளிப்பதும் மிகுந்த புண்ணியத்தை நல்கும். இப்படி எள் தானம் செய்ததின் அளவிற்கு ஏற்ப அத்தனை ஆயிரம் வருட காலம் ஸ்வர்க்கத்தில் வசிக்கும் பிராப்தியை பெறுவர். 

          01. எள் நிரம்பிய நீர் ஸ்நானம்  
          02. எள்ளினை உடம்பெங்கும் பூசிக் கொள்தல்
          03. எள் ஹோமம் (தில ஹோமம்)  
          04. எள்ளை உட்கொள்ளுதல்
          05. எள்ளை தானமாக பெறுதல் மற்றும்
          06. எள்ளை தானமாக அளித்தல் 

இப்படி ஆறு வகையான எள் பயன்பாடு சட்திலா (ஆறு வகையான எள்) என அழைக்கப்படுகிறது. இவ்வகை பயன்பாட்டால், அநேக பாபங்கள் விலகுகின்றன. என்று கூறிய புலஸ்திய ரிஷி, இப்பொழுது ஏகாதசி விரத கதையை கூறுகிறேன், கேள். என்றார். 

ஒரு நாள் நாரத முனி பகவான் விஷ்ணுவிடம் சட்திலா ஏகாதசியை பற்றி வினவினார், "பகவான்! தங்களுக்கு என்னுடைய அநேக கோடி நமஸ்காரங்கள். சட்திலா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணியம் என்ன? அதன் மஹிமை என்ன? தயவு செய்து கூறுங்கள்." என்றார்.

நாரத ரிஷியின் வேண்டுகோளைக் கேட்ட பகவான் ஸ்ரீ விஷ்ணு ஹே நாரதா! உண்மையில் நடந்த ஒரு சத்ய நிகழ்ச்சியை விவரிக்கிறேன். கவனத்துடன் கேள்.என்றார். பண்டைய காலத்தில் பூமியில் ஒரு பிராமண ஸ்திரீ வாழ்ந்து வந்தாள். அவள் எப்பொழுதும் விரதங்களை நியமத்துடனும், பக்தியுடனும் கடைபிடித்து வந்தாள். ஒரு சமயம் விரதத்தை ஒரு மாதம் வரை கடைபிடித்ததால், சரீரம் மிகவும் பலவீனமாயிற்று. அவள் பக்தியில் சிறந்து விளங்கினாள். பிராமணர்களுக்கும், கன்யைக‌ளுக்கும் தானங்களை, அவர்கள் மனமகிழ்ச்சி அடையும் அளவுக்குச் செய்தாள். சிறந்த புத்திமானாகவும் விளங்கினாள்.

தானம் பெற தகுதி வாய்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் வேண்டிய அளவு தானம் செய்தாலும், அவள் பக்தியின் ஒரு அம்சம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அது என்னவென்றால், தர்மங்களில் தலைசிறந்த அன்னதானத்தை பிராமணர்களுக்கோ அல்லது தேவர்களுக்கோ, அவள் ஒருபொழுதும் செய்ததில்லை. என் எண்ணமெல்லாம், பிராமண ஸ்திரீ சிரத்தையுடன் அனுஷ்டித்த விரதங்களின் பலனால் தன் சரீரத்தை பரிசுத்தமாக்கிக் கொண்டதால், அவளுக்கு விஷ்ணுலோகம் நிச்சயம் கிட்டும். ஆனால் அன்னதானத்தின் பலன் இல்லாமல் ஜீவிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அன்னதானம் ஆத்மாவிற்கு சாந்தியை அளிக்கக்கூடியது. ஆகவே அவள் வைகுண்ட வாழ்க்கையை எளிதாக்க இக்குறையை நீக்க எண்ணினேன். இந்த எண்ணத்துடன் பூலோகம் சென்று பிராமண ஸ்திரீயிடம் அன்னப்பிட்க்ஷை வேண்டி நின்றேன். 

பிராமண ஸ்திரீ "ஹே மஹாராஜரே! நீங்கள் எதற்காக வந்துள்ளீர்?" என்றாள். நானும் "பிட்க்ஷை வேண்டி வந்துள்ளேன்" என்றேன். அதைக் கேட்டு அவள் மணலால் ஆன ஒரு பிண்டத்தை தானமாக அளித்தாள். அதை வாங்கிக் கொண்டு நான் ஸ்வர்க்கத்திற்கு திரும்பி வந்து அவள் அளித்த மண் பிண்டத்தை வைத்து ஒரு அழகான வீடு அவளுக்காக அமைத்தேன். வீடு அழகாக அமைந்தது. ஆனால் வீட்டில் தான்யங்கள், இருக்கைகள், மற்ற எதுவும் இல்லாமல் அவள் அளித்த மண்னைப் போல் அமைந்து இருந்தது. சில காலம் கழித்து, அந்தப் பிராமண ஸ்திரீ மரணத்திற்குப் பிறகு ஸ்வர்க்கத்திற்கு வந்தாள். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவளுக்கு கிடைத்த இடத்தில் மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் அவ்வீட்டில் வேறு எதுவும் இல்லாமல் சூன்யத்துடன் இருந்தது. அதைக் கண்டு அவள் பயத்துடனும், கோபத்துடனும் என்னிடம் வந்து, "பகவான், அநேக விரதங்களை கடைப்பிடித்து உங்களுக்கு பூஜை செய்தேன். ஆனால் என் வீட்டில் வேறு எந்த வஸ்துக்களும் இல்லை. இதற்கு என்ன காரணம்.?" என்றாள்.

அதற்கு நான் "நீ உன் இல்லத்திற்குச் செல்வாயாக‌. அங்கு உன்னைக் காண தேவ ஸ்திரீகள் வருவர். அவர்கள் வரும் பொழுது, அவர்களிடம் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியம் மற்றும் பூஜை விதியைப் பற்றி கேட்கவும். அவர்கள் சொல்லும் வரை வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம்." என்றேன். பகவானின் வார்த்தைகளைக் கேட்டு அவள் வீட்டிற்கு திரும்பினாள். தேவ ஸ்திரீகள் அவளைக் காண வந்து வீட்டின் கதவுகளை திறக்க முற்பட்ட பொழுது பிராமண ஸ்திரீ அவர்களிடம், "நீங்கள் என்னைக் காண வேண்டும் என்றால், முதலில் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை கூறவும்." என்றாள்.

அவர்களில் ஒரு தேவ ஸ்திரீ "இது தான் உன் விருப்பம் என்றால், நான் உனக்கு சட்திலா ஏகாதசி விரதம் மற்றும் அதன் மஹாத்மியம், பூஜை விதி ஆகியவற்றைப் பற்றி சொல்கிறேன், கவனத்துடன் கேள்" என்றாள். அவள் சட்திலா ஏகாதசி மஹாத்மியத்தை கேட்டு முடித்தவுடன், பிராமண ஸ்திரீ வீட்டின் கதவுகளை திறந்தாள்.

தேவ ஸ்திரீகள் தாங்கள் எதிர்ப்பார்த்தபடி இல்லாது ஒரு பிராமண ஸ்திரீயை கண்டு மிகவும் வியந்தனர். அவளை, மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவளாகவும் வித்தியாசமானவளாகவும் கண்டு வியந்து சென்றனர். பிராமண ஸ்திரீயும் அந்த தேவஸ்திரீ கூறியபடி சட்திலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தாள். அதன் புண்ணிய பலனால் அவள் வீடு தனம், தான்யங்களால் நிரம்பி வழிந்தது.

"ஹே அர்ஜூனா, மனிதர்கள் அறியாமையை விட்டொழித்து சட்திலா ஏகாதசி விரதத்தை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் மனிதர்களின் நிரந்தர ஆரோக்கியத்தை பெறுவர். இதனால் அனைத்து பாபங்களும் அழியும்" என்று கூறி முடித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கதாசாரம்: இந்த விரதத்தினால் நமக்கு சரீர சுத்தி, ஆரோக்கியம் மட்டுமல்லாமல், அன்னம், எள் முதலியவற்றை தானம் செய்வதால் தனம், தான்ய விருத்தியும் கிட்டுகிறது. இதனால் இங்கு எந்த பொருட்களை தானம் செய்கிறோமோ, அவை யாவும் மரணத்திற்குப் பிறகு நமக்கு மேலுலகத்திலும் கிட்டுகிறது என்பது புலனாகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், தார்மீக கார்யங்களை அவற்றின் விதிப்படி செய்யும் பொழுது, கூடவே தானங்களையும் அவசியம் செய்ய வேண்டும். தான, தர்மங்கள் இல்லாமல் எந்தவொரு தார்மீக கார்யங்களும் பூரணமடைவதில்லை என்று சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன்.

நன்றி : Kshetra Yaatra

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||


குறிப்பு: தங்கள் வருகைக்கு நன்றி...! மேலும் இப்பக்கத்தில் உருவாகும் பதிவுகள் எங்களது திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் குழும முயற்சியில் உருவானவை, இதனை பிரதி(Copy) எடுக்க அனுமதி கிடையாது.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

காமிகா ஏகாதசி (ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

சிராவண மாதம் கிருஷ்ண‌ பட்சத்தில்(தேய்பிறை) வரும் ஏகாதசி திதியை காமிகா ஏகாதசியாக கொண்டாடுவர். காமிகா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.


மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் "மேலான பரம்பொருளே! ஆஷாட மாத சுக்ல பட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன். இப்பொழுது சிராவண மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா! எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் "தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுப விளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தின் மகிமையை சொல்கிறேன். கவனமாக கேள்." என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறலாயினார்.

"ஒரு முறை நாரத ரிஷியும் பிரம்மாவிடம் இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை பற்றி எடுத்துச்சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் தனது தந்தையான பிரம்மாவை நோக்கி, "தண்ணீரில் பிறக்கும் தாமரை மலரின் மீது, அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை போல் காட்சி அளிப்பவரே, அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவரே" மைந்தனான எனக்கு சிராவண மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன,  அப்புண்ணிய தினத்தன்று வழிபட வேண்டிய கடவுளைப் பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விரத வழிமுறைகளையும், விரதத்தை மேற்கொள்ளுவதால் கிட்டும் நற்பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

பிரம்மா அதற்கு பதிலளிக்கையில், என் அருமை மகனே, நாரதா! இவ்வுலகத்தின் நலனுக்காக நீ தெரிந்து கொள்ள விரும்பிய அனைத்தை பற்றியும் உனக்கு விரிவாக எடுத்துச் சொல்லுகிறேன். கவனமாக கேள். சிராவண மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச ஏகாதசி காமிகா ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகவும் புண்ணியமானது. காமிகா ஏகாதசியின் மஹத்துவம் சொல்லில் அடங்காதது. இவ்ஏகாதசியின் மஹாத்மியத்தை வெறும் காதால் கேட்பவர்களே, அஸ்வமேதயாகம் நடத்திய பலனை பெறுவர் என்றால் இதன் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு திவ்ய ஆயுதங்களையும் தன் நான்கு திருக்கரங்களில் ஏந்தி கதாதாரன் என்னும் திருநாமத்தாலும், ஸ்ரீ தரன், ஸ்ரீ ஹரி, ஸ்ரீ விஷ்ணு, மாதவன், மதுசூதனன் என்னும் மற்ற திருநாமங்களாலும் போற்றப்படும் மஹாவிஷ்ணுவை வணங்குவோருக்கும், அவரது பாதாரவிந்தங்களே சரணாகதி என்று தியானிப்போருக்கும் நிச்சயமாக பெரும் நற்பலன்கள் கிட்டும். 

காமிகா ஏகாதசியன்று மஹாவிஷ்ணுவிற்கு செய்யப்படும் பூஜை, ஆராதனை ஆகியவை ஒருவருக்கு, புண்ணிய க்ஷேத்ரமான காசியின் கங்கையில் நீராடுதல், நைமிசாரண்ய வனத்தில் நீராடி வழிபடுதல் அல்லது புவியில் என்னை மூலவராக கொண்ட புஷ்கர திருத்தலத்தில் நீராடி வழிபடுதல் ஆகியவற்றினால் கிடைக்கக்கூடிய அருளாசிகளை விட பன்மடங்கு மேலான புண்ணியத்தையும், அருளையும் பெற்றுத் தரக்கூடியது.

பனி சூழ் இமாலயத்தில் அமைந்துள்ள கேதார்நாத் சென்று, பிரபு கேதாரநாதரின் தரிசனம் அல்லது சூரிய கிரகணத்தின் போது குருக்ஷேத்ரத்தில் புண்ணிய நீராடுதல் அல்லது பூமியைத் தானமாக அளிப்பதால் கிட்டும் புண்ணிய பலன், அல்லது பூஜைக்குரிய விஷ்ணு மூர்த்திகளாக கருதப்படும் சாளிக்கிரமங்களை தன்னகத்தே கொண்ட தெய்வீக நதியான கண்டகீ நதியில் நீராடுதல், அல்ல‌து சிம்மராசியில் குரு பகவான் கோட்சாரம் செய்யும் காலம், சோமவார பூர்ணிமா தினத்தன்று கோதாவரி நதியில் நீராடுதல், இவை அனைத்தையும் செய்வதால் கிட்டும் நற்பலனை விட சிராவண மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் காமிகா ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைப்படி மேற்கொள்ளுவதுடன், அன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை ஆராதனையுடன் வழிபடுவது மிக அதிக நற்பலன்களை அருளும்.

காமிகா ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் நற்பலனானது, பால் சுரக்கும் பசுவை கன்றுடனும், தீவனங்களுடனும் தானமாக அளிப்பதால் கிடைக்கும் நற்பலனுக்கு சமமானது. சுபமான காமிகா ஏகாதசி தினத்தன்று ஸ்ரீ தரன் என்னும் திருநாமத்தைக் கொண்ட மஹாவிஷ்ணுவை வணங்குபவரின் பக்தியை தேவர்களும், கந்தர்வர்களும், நாகர்களும், பந்நாகர்களும் மெச்சுவர்.

கடந்த பிறவியின் பாபங்களைக் கண்டு அஞ்சுபவரும், இப்பிறவியில் பாபங்களை விளைவிக்கும் ஆதாயகரமான வாழ்க்கையில் மூழ்கி இருப்பவரும், தங்களால் இயன்ற அளவிற்கு இந்த காமிகா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து தம் பாபங்களிலிருந்து விடுதலை பெறலாம். காமிகா ஏகாதசி தினமானது அனைத்து தினங்களையும் விட மிகவும் பவித்ரமான நாளாகும். ஆகையால் அன்று விரதம் மேற்கொள்ளுதல் அனைத்து பாபங்களையும் அழிக்கும் சக்தி கொண்டதாக உள்ளது.

நாரதா! ஸ்ரீ ஹரியே இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி கூறும் போது "காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிட்டும் புண்ணியம், பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானது" என்று அருளியுள்ளார். காமிகா ஏகாதசியன்று விரத வழிமுறைகளின் படி உபவாசம் இருந்து, இரவில் கண் விழித்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மகிமையை விளக்கும் புராணங்களை பாராயணம் செய்பவர் யமதர்மராஜனின் கோபத்துக்கு ஒரு போதும் ஆளாக மாட்டார்.

பவித்ரமான காமிகா ஏகாதசி தினத்தன்று உபவாசத்துடன் விரதத்தை கடைப்பிடிப்பவர் தன் பிறப்பு இறப்பு என்னும் மாயசக்ரத்திலிருந்து விடுபட்டு மறுபிறப்பில்லா நிலையை அடைவர் என்பது நிச்சயம். கடந்த காலத்திலும், நிறைய தவசிகளும், யோகிகளும் இந்த காமிகா ஏகாதசி தினத்தன்று விரதம் மேற்கொண்டு மிக உயர்ந்த ஆன்மீக நிலையினை அடைந்துள்ளனர். ஆகவே, அவர்கள் காட்டிய நல்ல வழியை பின்பற்றி நாமும் அன்று உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பது மிக நல்லது.

அன்று ஸ்ரீ ஹரியை துளசி தளங்களுடன் (இலைகளால்) வணங்குவோர் த‌ம் பாபத்தின் விளைவுகளிலிருந்து விடுபடுவர். மேலும் எப்படி தாமரை இலையானது தண்ணீரில் இருந்தாலும் தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறதோ, அதே போல் அவர்க‌ள் பாபங்கள் தீண்டாமல் வாழ்வார். ஸ்ரீ ஹரிக்கு அன்று பவித்ரமான ஒரு துளசி தளத்தை (இலையை) சமர்ப்பித்து பூஜிப்பவர் அடையும் புண்ணியமானது, ஒருவர் இருநூறு கிராம் தங்கம் மற்றும் எண்ணூறு கிராம் வெள்ளியை தானம் செய்வதால் அடையும் புண்ணியத்திற்கு சமமானது.

முத்து, பவளம், மாணிக்கம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், கோமேதகம் போன்ற விலை மதிப்பில்லாத கற்களினால் செய்யப்படும் பூஜையை விட, பவித்ரமான துளசி இலைகளால் செய்யப்படும் பூஜையானது பகவான் மஹாவிஷ்ணுவிற்கு மிகுந்த ப்ரீதியை அளிக்கிறது. புதிதாக தோன்றிய மலர்களுடன் (மஞ்சரி மொட்டுகள்) கூடிய துளசியை பகவான் கேசவனுக்கு சமர்ப்பிப்பவர் இப்பிறவி மட்டுமல்லாது, தன் முந்தைய  பிறவியின் பாபங்களும் நீங்கப் பெறுவர்.

மேலும், காமிகா ஏகாதசியன்று துளசி தேவியை தரிசனம் செய்பவர் தம் பாபங்கள் அழியப் பெறுவர். அன்று துளசி தேவி இருப்பிடமான துளசி செடியை தொட்டு வணங்குதல், பிரார்த்தனை செய்தல் ஆகியவை ஒருவருடைய நோய் நொடிகளிலிருந்து அவருக்கு நிவர்த்தி அளிக்கும். அன்று, துளசி செடிக்கு நீர் ஊற்றுபவர் எக்காலத்திலும் யமதர்ம ராஜனைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அன்று துளசி செடியின் சிறிய நாற்றினை நடுபவர் அல்லது மாற்று நாற்று (பதியன்) செய்பவர், தம் வாழ்நாள் முடிவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்தை அடைவர். தினமும் துளசி தேவியை பூஜித்து ஆராதித்தால் நமது பக்தியின் சேவையினால் மோட்சப் பிராப்தியை அடையலாம்.

துளசி தேவிக்கு தினம் அணையாமல் எரியும் நெய் விளக்கேற்றி பூஜிப்பவரின் புண்ணியக் கணக்கை யமதர்ம ராஜனின் சித்ர குப்தனாலும் கணக்கிட இயலாது. பவித்ரமான இந்த காமிகா ஏகாதசி தினமானது பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும். ஆகையால் அன்று முன்னோர்கள் அனைவரும் நெய் விளக்கேற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு ஸ்வர்க்கத்தை அடைந்து அமிர்தத்தை அருந்தும் பாக்கியம் பெற்றனர். அன்று எவரொருவர் நெய் அல்லது எள் எண்ணையினால் (நல்லெண்ணை) விளக்கேற்றி ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கிறாரோ, அவர் தன் பாபங்களிலிருந்து விடுதலை பெற்று, முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரியமண்டலத்தை பத்து மில்லியன் விளக்குகளின் பிரகாசத்திற்கு சமமான பிரகாசமான உடலுடன் அடைவர்.

இந்த ஏகாதசியானது மிகவும் பவித்ரமானது மட்டுமல்லாமல் மிகவும் சக்தி பெற்ற நாளும் ஆகும். இந்நாளில் உபவாசம் இருக்க் இயலாதோர், இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தங்கள் முன்னோர்களுடன் ஸ்வர்க்கம் அடைவர், "இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்". இதைக் கூறிய‌ ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் "யுதிஷ்டிரா, மஹாராஜனே, பாவங்களை நீக்கி, எண்ணில்லாத பலன்களை வழங்கும் காமிகா ஏகாதசியின் பெருமைகளை, பிரஜாபதி பிரம்மா தனது புதல்வன் நாரதருக்கு உரைத்ததை அப்படியே நான் உனக்கு உரைத்துள்ளேன்..

இப்புனித காமிகா ஏகாதசி விரதமானது பிராமணனை கொன்றதால் உண்டான பாவம் (பிரம்மஹத்தி), கருவில் வளரும் குழந்தையை அழித்த பாவம் போன்ற கொடிய பாவங்களிலிருந்து நிவர்த்தி அளிக்கும் பேறு பெற்றது. இவ்விரதம் அதிக புண்ணியத்தை அளிக்க வல்லது. எனவே, இவ்விரதத்தைக் கடைபிடிப்போர் பக்தி யோகத்தில் சிறந்து விளங்குவர்.

அப்பாவிகளை கொல்வதால் உண்டாகும் பாவங்கள் அதாவது பிரம்மஹத்தி தோஷம், சிசு ஹத்தி தோஷம், பக்திமான் மற்றும் களங்கமில்லாத பெண்ணைக் கொன்ற பாவங்களின் விளைவுகளிலிருந்து காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தை கேட்பதால் நிவர்த்தி பெறலாம். ஆனால் இதைக் கொண்டு ஒருவர் முதலில் கொலைப் பாதகம் புரிந்து விட்டு பின்னர் காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தை கேட்பதால் நிவர்த்தி பெறலாம் என்று நினைக்கக் கூடாது. அது தவறானது. அறிந்தே கொலை பாதகம் போன்ற கொடிய பாவங்களைப் புரிவதற்கு எந்த் சாஸ்திரத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதை ஞாபகத்தில் இருத்தவும். என்றார்.

எவரொருவர் பவித்ரமான இந்த காமிகா ஏகாதசியின் பெருமையை விவரிக்கும் மஹாத்மியத்தை பக்தியுடனும், சிரத்தையுடனும, நம்பிக்கையுடனும் கேட்கிறாரோ, அவர் தன் பாபங்களிலிருந்து விடுபட்டு மஹாவிஷ்ணுவின் வாசஸ்தலமான விஷ்ணுலோகம் எனப்படும் வைகுந்தத்தை அடைவர். ப்ரம்ஹ வைவர்த்த புராணம், சிராவண மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அதாவது காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

நன்றி : Kshetra Yaatra

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள்

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.


01 சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, "காமதா ஏகாதசி" என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி "பாப மோகினி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

02 வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி "மோகினி ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "வருதித் ஏகாதசி" என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
        
03 ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "நிர்ஜலா ஏகாதசி" என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி "அபார ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

04 ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி "சயனி ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "யோகினி ஏகாதசி" என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

05 ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது "புத்ரஜா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசியானது "காமிகா ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.
        
06 புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "அஜா ஏகாதசி" என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

07 ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "பாபாங்குசா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "இந்திரா ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

08 கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி "பிரபோதின ஏகாதசி" எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான "ரமா ஏகாதசி" தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
        
09 மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி" என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி ஏகாதசி" எனப்படுகிறது.

10 தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரதா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "சுபலா ஏகாதசி" என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

11 மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜெயா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா ஏகாதசி" என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
        
12 பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி "விஜயா ஏகாதசி" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி "ஆமல கிஏகாதசி" எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.

"ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "கமலா ஏகாதசி" எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

புதன், 2 ஆகஸ்ட், 2017

தேவ சயனி (பத்ம) ஏகாதசி (ஆடி மாதம் சுக்ல பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.


ஆஷாட மாதம், சுக்ல பட்சத்தில் (வளர்பிறையில் வரும் ஏகாதசி திதியை தேவ சயனி (பத்ம) ஏகாதசியாக கொண்டாடுவர். தேவசயனி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.

தர்மத்தை எந்த சூழ்நிலையிலும் விடாது காக்கும் மஹாராஜா யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ணரிடம் - "கேசவா, ஆஷாட மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், அன்றைய சுபதினத்தில் வழிபட வேண்டிய கடவுளர் யார். அன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றி விரிவாக சொல்லுங்கள்" என்று கூறினார்.

பிரபு ஸ்ரீ கிருஷ்ணர் பின் வருமாறு கூறத் தொடங்கினார். "பூமியின் பாதுகாவலரே, ஒரு முறை பிரம்மதேவர் தன்னுடைய மகனான நாரதருக்கு விவரித்துச் சொன்ன ஒரு அதிசய புராண வரலாற்று நிகழ்ச்சியை உனக்குச் சொல்லுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." ஒரு நாள் நாரதர் பிரம்ம தேவரிடம் - "தந்தையே! ஆஷாட மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் என்ன? அன்று தாங்கள் என்ன செய்வீர், அந்த ஏகாதசி விரதத்தை நான் எப்படி கடைபிடித்து பரந்தாமன் மஹாவிஷ்ணுவின் அருளுக்கு பாத்திரமாகலாம் என்பதை விவரமாக சொல்ல வேண்டும்". என்று வேண்டி நின்றார்.

அதற்கு பிரம்மதேவர் - "சிறந்த ஞானியும், பேசுவதில் வல்லமையும் பெற்றவரே, ரிஷிகளில் சிறந்தவரே, பிரபு மஹாவிஷ்ணுவின் மீது தூய்மையான பக்தி பூண்டவரே, தங்கள் கேள்வி, வழக்கம் போல் மனித நலத்திற்கு பயன்படும் வகையில் சிறப்பானதொரு கேள்வி ஆகும் பகவான் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த நாளான ஏகாதசியை விட சிறந்தது வேறு எதுவும் இவ்வுலகில் மட்டும் அல்லாது எவ்வுலகிலும் இல்லை. விதிக்கப்பட்ட வழிமுறைகளின் படி விரதத்தை கடைப்பிடித்தால், மிக மோசமான பாபங்களும் அழியப் பெறும். பாபங்களிலிருந்து மீண்டு நற்கதி அடைவதற்கு ஏதுவான ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசியை பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேட்பீர்களாக!." என்று கூறத் துவங்கினார்..

"ஏகாதசி நன்னாளில் உபவாசம் இருந்து விரதத்தைக் கடைப்பிடிப்போரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறுவதோடு அல்லாமல் அவரவது அபிலாஷைகளும் பூர்த்தி அடையப் பெறுவர். ஆகவே எவரொருவர் இதை அலட்சியம் செய்து விரதத்தை கடைப்பிடிக்காமல் விடுகிறாரோ, அவர்கள் நரகத்திற்குள் நுழையத் தக்கவர் ஆகி விடுகிறார்.

ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசியை "பத்ம ஏகாதசி" என்றும் பிரபலமாக அழைப்பர். ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது பஞ்சேந்திரியங்களின் தலைவனான பகவான் ரிஷிகேசருக்கு மகிழ்ச்சியை அளித்து அவரின் அருளாசி பெற்றுத் தரும். நாரதா, புராணங்களில் இடம் பெற்றுள்ள வியப்பானதொரு வரலாற்று நிகழ்வினை நான் உனக்கு சொல்கிறேன். இப்புராண நிகழ்வினை கேட்பவரின் பாவங்கள் அனைத்தும் அழிவதோடு அல்லாமல் ஆன்மிகப் பாதையில் ஏற்படும் தடங்கல்களையும் நீக்கி உயர்வான நிலையை அடையச் செய்யும். 

மைந்தனே கேள் – “சூரிய வம்சத்தில் மாந்தாதா என்னும் புண்ணியசீலன் அரசனாக இருந்தார். சத்தியத்தின் பக்கம் எப்பொழுதும் நின்று நீதி வழுவாமல் இருந்ததால் அவர் சக்ரவர்த்தியாக நியமிக்கப்பட்டார். தன் அரசின் பிரஜைகளை தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் போலக் கவனத்துடன் பாதுகாத்து வந்தார். அவருடைய தெய்வ பக்தி மற்றும் நம்பிக்கையின் விளைவாக, நாட்டில் வறட்சி, பஞ்சம், தொற்று மற்றும் இதர நோய் நொடிகளின் தொல்லை இல்லாமல் இருந்தது. பிரஜைகள் அனைவரும் எவ்விதமான தொந்தரவும் இல்லாமல் மிகவும் சுபிக்க்ஷத்துடன் வாழ்ந்து வந்தனர். அரசாங்க கருவூலத்தின் வரவு மற்றும் சொத்துக்கள் அனைத்தும் நல்வழியில் ஈட்டப்பட்டதால் நிறைந்து வழிந்தது. அதனால், மாந்தாதா சந்தோஷமாகப் பல ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார்." 

ஒரு முறை, யார் செய்த பாவத்தாலோ, மாந்தாதாவின் நாடு மழை காணாமல் வறட்சியால் மூன்று ஆண்டுகள் மிகவும் அவதிப்பட்டது. பஞ்சத்தால் பிரஜைகள் மிகவும் கஷ்டப்பட்டனர். உணவு தான்யங்களின் தட்டுப்பாட்டின் காரணமாக வேள்வித்தீயில் சமர்ப்பிக்கப்படும் ஆகுதிகள் தர இயலாமல் இருந்தது.  மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நெய் ஆகுதி வழங்குதல், விதிமுறைகளின் படியான வழிபாடு, வேதம் ஒதுதல் ஆகியவையும் சாத்தியமில்லாமல் போனது. 

முடிவாக, மக்கள் அனைவரும் அரசரவைக்கு வந்து மன்னரிடம் - "அரசே! நீங்கள் எப்பொழுதும் எங்கள் நல வாழ்வில் அக்கறை கொண்டவர். ஆதலால் நாங்கள் பணிவன்புடன் உங்கள் உதவியை வேண்டி நிற்கிறோம். தாங்கள் அறியாததல்ல... இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவசியமானது நீர். நீரில்லாமல் எதுவும் செய்ய இயலாது. நீரின்றி எதுவும் பயன் இல்லாது போகும் அல்லது உயிரில்லாத ஜீவனுக்கு சமமாகும். மறைநூல்கள் நீரை "நாரா" என்னும் நாமத்தால் குறிப்பிடுகின்றன. பரம்பொருளான பரந்தாமன் நீரின் மீது நித்திரை கொண்டுள்ளதால், "நாராயணா" என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பரந்தாமன் நீரைத் தன்னுடைய உறைவிடமாக கொண்டு அதில் அறிதுயில் கொள்கிறார்."

மூன்று விஷயங்கள் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அவை முத்து, மனிதர் மற்றும் மாவு. முத்து அதன் "காந்தி" அதாவது பளபளப்பான ஒளிரும் தன்மையை கொண்டு  நல்முத்து என தரம் பிரிக்கப்படுகிறது. அதன் பளபளப்பு தன்மை நீரிலிருந்து வருவது ஆகும். அதே போல் மனிதனுக்கு முக்கியமானது அவனது ஜீவசக்தி. நீர் அதில் முக்கிய பங்காக அமைந்துள்ளது. அதே போல், நீரில்லாமல் மாவினை பிசைந்து ரொட்டியின் பல்வேறு வகைகளாக சமைக்கவும், பிறருக்கு வழங்கவும், சாப்பிடவும் இயலாது. ஜீவன் நிலைத்திருக்க உதவும் முதன்மையான, ஸ்தூல வடிவில் உள்ள பரம்பொருள் எனும் அர்த்தத்தில் சில நேரங்களில் நீரானது ஜல நாராயணா என்றும் அழைக்கப்படுகிறது. மேகங்கள் வடிவில் பரம்பொருளான இறைவன் வானமெங்கும் பரவி நிறைந்துள்ளார். மேகங்கள் மழை பொழிய, அதன் விளைவாக பயிர்கள் செழிக்க, அதிலிருந்து விளையும் உணவு தான்யங்கள், அனைத்து ஜீவராசிகளையும் உயிர் வாழ வைக்கிறது. 

"அரசே! நிலவும் கடுமையான வறட்சியால் தாங்க  இயலாத அளவு உணவு தானிய இருப்பில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பசியாலும், பட்டினியாலும் மிகவும் அவதிப்படுகிறோம். பசியாலும், பட்டினியாலும் சிலர் இறந்து போக, சிலர் நாடு விட்டு நாடு செல்ல, நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்பூமியில் சிறந்த அரசாட்சி செய்து வரும் அரசே, நாட்டை பீடித்துள்ள இப்பிரச்னைக்கு தயவு செய்து ஒரு நல்ல தீர்வை கண்டுபிடித்து, அனைவரும் அமைதியுடனும், சுபிக்க்ஷத்துடனும் மீண்டும் வாழ வகை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறாம்." என்று பணிவோடு தெரிவித்தனர்.

அரசன் மாந்தாதா அதற்கு பதிலளிக்கையில் - "நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. சத்தியமானது. தான்யங்கள் கடவுளரைப் போன்றது. சத்தியத்தின் வடிவான இறைவன் அந்த தான்யங்களின் வடிவில் வசித்து சகல ஜீவராசிகளும் வாழ்வ‌தற்கு ஏதுவாகிறார். இவ்வுலகமே தானியங்களால் தான் உயிர் வாழ்கிறது என்றால் அது மிகையாகது. இப்போது, ஏன் நம் நாட்டை இத்தகைய கொடிய வறட்சி பீடித்துள்ளது என்பதை நாம் அறிய வேண்டும். புனித மறை நூல்கள் இத்தகைய சூழ்நிலைகளை அலசி ஆராய்ந்து அதற்கான காரண, காரியங்களை விவரமாக குறிப்பிட்டுள்ளது. அதன்படி ஒரு நாட்டின் அரசன் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அரசனும், நாட்டின் பிரஜைகளும் அவதிப்படுவர் என்று கூறுகிறது. இந்த விஷயத்தில் நான் தியானத்தின் மூலம் இப்பிரச்னை வந்த காரணத்தை அறியும் முயற்சியில் நான் நெடுநாட்கள் தியானத்தில் இருந்திருக்கிறேன். என்னுடைய கடந்த கால மற்றும் தற்போதைய நடவடிக்கைகளை ஆராய்ந்ததில், நான் எவ்வித பாவச் செயல்களும் புரியவில்லை என்பது சத்தியமான உண்மை. இருந்தாலும், நாட்டின் பிரஜைகளின் நன்மையைக் கருதி இப்பிரச்னையை தீர்க்க வழி காணுகிறேன்" என்றான்.

பின்னர் அரசன் மாந்தாதா தன்னுடைய இராணுவம் மற்றும் பரிவாரங்களை கூட்டிக் கலந்து ஆலோசித்தான். அதன்படி, தவத்தில் சிறந்த ரிஷிகள், முனிவர்கள் வசிக்கும் வனத்திற்கு சென்று அவர்களிடம் இதற்கு விடை காணலாம் என்று முடிவு செய்தான். ஆகையால் இறைவணக்கத்துடன் பூஜையை முடித்துவிட்டு,  இராணுவம் மற்றும் பரிவாரங்கள் புடைசூழ வனம் புகுந்தான். காட்டில் அங்குமிங்கும் அலைந்து, அங்கு ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கும் ரிஷிகளிடத்தில் தன் நாட்டின், நிலைமையை கூறி அதை தீர்ப்பதற்கான மார்க்கத்தை அருளுமாறு வேண்டி நின்றான். ஆனால் அரசனுக்கு தீர்வு கிட்டவில்லை. கடைசியில் என்(பிரம்மாவின்) மற்றொரு புதல்வனான ஆங்கிர முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். அவருடைய தவவலிமையின் பேரொளி அனைத்து திசைகளிலும் பரவி ஆசிரமத்தை பிரகாசிக்க வைத்துக் கொண்டிருந்தது. ஆங்கிர முனி தன்னுடைய ஆசனத்தில் தவத்தில் அமர்ந்து இருந்த கோலம், அவருக்கு மற்றுமொரு பிரம்மதேவனைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. இடைவிடாத தவத்தின் பயனாக பஞ்சேந்திரியங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேன்மைமிகு ரிஷியவ‌ர்களைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான் அரசன் மாந்தாதா. 

உடனடியாக  தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி, ஆசிரமத்தினுள் சென்று ஆங்கிர முனிவருக்குத் தன்னுடைய மரியாதையையும், வணக்கத்தையும் பணிவுடன் அவரின் பத்ம பாதங்களில் சமர்ப்பித்தான். பிறகு இருகரங்களையும் கூப்பி முனிவரின் அருளாசி வேண்டிப் பிரார்த்தித்தான். வேத மந்திரங்களால் மஹானான ஆங்கிர முனிவரும் அரசனை ஆசீர்வதித்தார். பின்னர் அரசின் ஏழு (7) அங்கங்களின் நலத்தை பற்றி விசாரித்தார். 

(1). அரசன், (2). மந்திரிமார்கள், (3). கருவூலம், (4). ராணுவம், (5). தோழமை அரசுகள், (6). பிராம்மணர்கள், (7). நாட்டில் நடக்கும் வேள்வியில் இடப்படும் பலி, தானங்கள் மற்றும் அரசின் கவனிப்பில் இருக்கும் பிரஜைகளின் தேவைகள், இவை ஒரு அரசின் 7 அங்கங்களாக கருதப்படுகின்றன. பின்னர் அரசன் முனிவரின் ஆசிரமத்தைப் பற்றியும், அவர்கள் எக்குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றும் வினவினான். பின் ஆங்கிர முனிவர் அரசனிடம் - "ஏன் காட்டில் இக்கடினமான பயணத்தை மேற்கொண்டீர்கள்" என்று கேட்க, அதற்கு அரசன் தன் நாட்டின் வறட்சி நிலைமையைப் பற்றியும், அதனால் குடிமக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்றும், ஒன்றும் செய்ய இயலாத நிலைமையும் விரிவாக எடுத்துரைத்தான்.

"மஹரிஷி அவர்களே, வேதங்கள் காட்டிய வழியில் தான் என் நாட்டை ஆட்சி செய்தும், பராமரித்தும் வருகிறேன். அப்படியிருக்க இந்த வறட்சி நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் புரியாமல் தவிக்கிறேன். இந்த புரியாத புதிரின் விடை காணவே காட்டில் இக்கடின பிராயணத்தை மேற்கொண்டேன். இப்பொழுது தங்கள் முன்னால் உதவி கோரி நிற்கிறேன். தாங்கள் தயைகூர்ந்து என் நாட்டின் குடிமக்கள் படும் அவதியை தீர்க்க எனக்கு உதவி புரியுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தான்.  

ஆங்கிர ரிஷி மன்னரிடம் - "மன்னா! யுகங்களில் மிகவும் சிறந்த யுகமான சத்ய யுகம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்த யுகத்தில் தர்மம் தனது நான்கு கால்களில் நின்றுள்ளது. வாய்மை அதாவது உண்மை, சிக்கனம், காருண்யம், தூய்மை ஆகிய நான்கும் தர்மத்தின் நான்கு கால்களாகும். இந்த யுகத்தில் பிராமணர்கள் சமூகத்தின் உயர் குடிமக்களாக மதிக்கப்படுவர். அனைவரும் தங்களது தொழில் தர்மத்தையும் கடமையையும் தவறாது பூர்த்தி செய்வர். இரண்டு முறை பிறப்பவர், அதாவது அந்தணர்கள் (அந்தணர்கள், பூமியில் பிறக்கும் போது ஒருமுறையும், பிரம்மோபதேசம் நடைபெறும்போது மறுமுறையும் பிறப்பதாகக் கருதப்படுவர். ஆகவே அவர்கள் இருமுறை பிறப்பவர்கள் என்று அறியப்படுகின்றார்கள்) மட்டுமே வேத கர்மங்களையும் தவத்தினையும் செய்ய அனுமதிக்கப்படுவர்.  

இது மரபு வழக்கமாக இருந்தாலும், அரசர்களில் சிம்ஹத்தை போன்றவனே!  உன் நாட்டில் பயிற்சி இல்லாதவன், குரு உபதேசம் பெறாதவன் ஒருவன், அவனுக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை விட்டுவிட்டு, மரபு வழியாக இருந்து வரும் வழக்கத்தை மீறி சட்டவிரோதமாக வேத கர்மாக்களையும், தவத்தையும் செய்து வருகிறான். உனது நாட்டில் மழை இல்லாமல் வறட்சி நிலவுவதற்கு இது தான் காரணமாகும். ஆகையால் நீ, அவன் செய்த செயலுக்கு தண்டனையாக மரண தண்டனை அளித்தால், அவன் செயல்களால் நாட்டில் விளைந்துள்ள மாசுக்கள் நீங்கி அமைதியும் சுபிக்க்ஷமும் மீண்டும் தாண்டவமாடும்." என்று கூறினார்.

அரசன் முனிவரின் வார்த்தையைக் கேட்டு அதிர்ந்து போனான். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு முனிவரிடம் "தவசிரேஷ்டரே! யாருக்கும் எவ்வித குற்றமும் விளைவிக்காமல், அமைதியாக வேத கர்மாக்களையும், பலி தானங்களையும் செய்யும் ஒருவனை எப்படி நான் கொல்லுவேன்?. அது பாபம். ஆகவே தயைகூர்ந்து சில ஆன்மீகத் தீர்வினைச் சொல்லுங்கள்." என்று வேண்டினான்.

மஹாதபஸ்வியான ஆங்கிரஸ முனிவர் - மன்னா! நீ கேட்டபடி மற்றொரு உபாயத்தை சொல்லுகிறேன் கேள். ஆஷாட மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பத்ம ஏகாதசி என்று அழைப்பர். அந்த ஏகாதசி சுபதினத்தில் விரதத்தை விதிமுறைப்படி வழுவாது கடைபிடித்தால், அந்த சக்தி வாய்ந்த விரதத்தின் பயனாக பெய்யும் மழையினால் பயிர்கள் செழித்து வளர்ந்து அள்ள அள்ள குறையாத தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களும் கிட்டும். நாடு மறுபடியும் சுபிக்க்ஷமடையும். 

இந்த ஏகாதசி விரதத்தை நம்பிக்கையுடன் கடைபிடிப்பவர்கள் குறைகள் அகலப்பெறுவர், தீய சக்திகள் அண்டாமல் பாதுகாக்கப்படுவர். குற்றம் குறை இல்லாதவர்களாக ஆவதற்கான பாதையில் வரும் தடைகளை நீக்குகிறது இந்த விரதம். அரசே, நீ, உன் சுற்றத்தார் மற்றும் நாட்டின் பிரஜைகள் அனைவரும் அன்று தவறாது இந்தத் தெய்வீகமான விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால், சந்தேகமில்லாமல், உன் நாட்டில் சுபிக்க்ஷம் மீண்டும் தாண்டவமாடும். என்றார்.

முனிவரின் அறிவுரைக் கேட்டதும் அரசன் மகிழ்ச்சியுடன் முனிவருக்கு தன்னுடைய வந்தனங்களை சமர்ப்பித்து, விடைபெற்று, தன்னுடைய மாளிகைக்கு திரும்பினான். பத்ம ஏகாதசி திதி தினத்தன்று, மன்னன் மாந்தாதா தன் சுற்றத்தார், மக்கள் அனைவரையும் ஒரு சேரக் கூட்டி, அன்று விரதம் அனுஷ்டிக்கும்படி அறிவித்தான். அனைவரும் மன்னரின் ஆணைப்படி விரதம் அனுஷ்டிக்க, முனிவர் கூறியபடி மழை பெய்து, பயிர்கள் அமோக விளைச்சலை அள்ளித் தந்தன. பஞ்சேந்திரியங்களையும் அடக்கி ஆளும் வல்லமை கொண்ட பரம்பொருளான ரிஷிகேசனின் கருணையால், நாட்டின் குடிமக்கள் அனைவரும் வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

எனவே நாரதா, முக்கியமான இந்த பத்ம சயனி ஏகாதசி விரதத்தை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நம்பிக்கையுடன் விரதத்தை அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு இது அனைத்து வித மகிழ்ச்சியையும் அளித்து இறுதியில் மோட்சத்தையும் அளிக்கும் சக்தி வாய்ந்தது' என்று பிரம்மதேவர் நாரதரிடம் கூறினார். இந்தக் கதையை யுதிஷ்டிரருக்குத் தெரிவித்த ஸ்ரீ கிருஷ்ணர் - "பிரியமான யுதிஷ்டிரா, பத்ம ஏகாதசி, சகல பாவங்களையும் முற்றிலும் நீக்கி விடுதலை அளிக்கும் வலிமை பெற்ற சுப நாளாகும். இந்த விரதக் கதையைப் படித்தாலோ, அல்லது கேட்டாலோ, அனைத்து பாவங்களும் நீங்கும். பாண்டவா, என்னை மகிழ்விக்க விரும்பும் பக்தர்கள் தேவசயனி ஏகாதசி என்ற அழைக்கப்படும் இந்த பத்ம ஏகாதசி விரதத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

தேவசயனி அல்லது விஷ்ணு சயனி என்னும் நாள் பகவான் மஹாவிஷ்ணு மற்றும் அனைத்து தேவர்களும் நித்திரையில் ஆழ்ந்து போகும் தினமாகும். இந்நாளுக்கு பிறகு தேவாட்தானி ஏகாதசி (ஹரிபோதினி (பிரபோதினி) தேவோத்தானி (உத்தான) ஏகாதசி, கார்த்திகை (அக்டோபர் - நவம்பர்) மாதத்தில் வரும் ஏகாதசி வரை, எந்தவிதமான சுப சடங்குகளையும் செய்யக் கூடாது என்று கூறுவர். சூரிய பகவான் தன் தென்திசை கோள்சார பிரயாணத்தை (தட்சிணாயனம்) தொடங்குவதாலும், தேவர்கள் அனைவரும் நித்திரையில் ஆழ்ந்திருப்பதாலும், அவர்களை வேள்வியின் ஆகுதிகளை ஏற்றுக்கொள்ள அழைக்க இயலாது...

அரசர்களில் சிம்மத்தை போன்ற மஹாராஜனே யுதிஷ்டிரா! இவ்வுலக இகபர சுகங்களிலிருந்து விடுதலை பெற்று முக்தியை அடைய விரும்புவோர் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கும் இந்த ஏகாதசி நன்னாளில் வழிமுறைகளில் கூறியுள்ளபடி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்" என்று அருளினார். பிரம்ஹ வைவர்த்தன புராணம் ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசி அதாவது தேவசயனி (பத்ம) ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

கதையின் சாரம்: நாம் நம்முடைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்காக மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது. கடவுளின் மீது முழு நம்பிக்கையுடனும், சிரத்தையுடனும் மஹான்கள் கதையில் கூறியுள்ளபடி நம் சக்திக்கு ஏற்றாற்போல் நற்கருமங்களை செய்து வருவதால் பெரிய இடையூறுகளிலிருந்தும் கடவுள் அருளால் விடுபட முடியும்.

நன்றி : Kshetra Yaatra


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

செவ்வாய், 18 ஜூலை, 2017

யோகினி ஏகாதசி (ஆடி மாதம் கிருஷ்ண‌ பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.


ஆஷாட(ஆடி) மாதம் கிருஷ்ண‌ பட்சத்தில்(தேய்பிறையில்) வரும் ஏகாதசி திதியை யோகினி ஏகாதசியாக கொண்டாடுவர். யோகினி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். 

மஹாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி, ‍"பரம்பொருளே, ஜேஷ்ட (ஆனி) மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் நிர்ஜலா ஏகாதசியின் அபார மகிமையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆடி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் சுத்த ஏகாதசியைப் பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன். ஆகையால், மது என்னும் பெயர் கொண்ட அரக்கனை அழித்ததால் மதுசூதனன் என்னும் திருநாமம் பெற்ற கிருஷ்ணா, தயைகூர்ந்து விவரமாக சொல்லவும்" என்று கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரை நோக்கி "ஹே மஹாராஜா உபவாசம் இருக்கக்கூடிய நாட்களிலேயே மிகச்சிறப்பான நாள் ஏகாதசி திருநாள். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் சிறப்பானது ஆஷாட மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் சுத்த ஏகாதசி. இதை யோகினி ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் பலனாக அவரவரது பாவத்தின் பிரதிபலன்கள் அழிந்து மேலான முக்தியை பெறுவர்.

அரசர்களில் மேலானவனே, இந்த ஏகாதசியானது, இந்த உலகில் அழியும் பொருட்களின் மீது பற்று கொண்டு மாயை என்னும் உலகாயத சமுத்திரத்தின் பாதாளத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை மீட்டு, ஆன்மீகம் (பக்தி) என்னும் கரையின்பால் கொண்டு சேர்க்கும் நன்னாளாகும். மூவுலகிலும், உபவாசம் இருக்கக்கூடிய விரத நாட்களில் இந்நாளே முதன்மையானதாகும். புராணத்திலிருந்து உனக்கு ஒரு உண்மைக் கதையை சொல்லுகிறேன் கேள். என்று கூறி, சொல்லலுற்றார்.

"தேவர்களின் செல்வத்தைக் காத்து வருப‌வரும், அளகாபுரி பட்டணத்தை ஆண்டு வருபவரும் ராஜா குபேரர், சிவபெருமானிடம் ஆழ்ந்த ஈடுபாடும், பக்தியும் பூண்டவர். அவர் ஹேமமாலி என்னும் யக்ஷனைத் தன்னுடைய தோட்டத்தைக் கவனித்து கொள்ளும் பணியில் அமர்த்தினார். ஹேமமாலி மயக்கும் பெரிய கண்களையுடைய தன்னுடைய மனைவி ஸ்வரூபவதீ மீது தீரா காம வசப்பட்ட காதல் மயக்கத்தில் இருந்தான். 

ஹேமமாலி, அன்றாடம் குபேரனின் பூஜைக்காக, மானஸசரோவர் ஏரிக்குச் சென்று ஏரியைச் சுற்றிலும் மலர்ந்துள்ள மலர்களை பறித்து வந்து சேர்ப்பிக்க வேண்டும். குபேரன் அம்மலர்களைக் கொண்டு நித்தமும் சிவபூஜை செய்வது வழக்கம். ஒரு நாள், வழக்கத்திற்கு மாறாக ஹேமமாலி மலர்களை பறித்து முடித்தவுடன் குபேரனது அரண்மனைக்குச் செல்லாமல், நேராக தன்னுடைய மனைவியைக் காணச் சென்றுவிட்டான். மனைவியின் மீதான காதலில், பூஜைக்கு மலர்களை சேர்ப்பிக்கும் பணியை மறந்தே போனான்.

ராஜனே கேள்! இங்கு ஹேமமாலி தன்னுடைய இல்லாளுடன் இல்லற சுகத்தில் மோகித்து தன்னை மறந்து கிடக்க, அங்கு குபேரன் ஹேமமாலியின் வருகைக்காக வெகு நேரம் காத்திருந்து விட்டு, பின் சிவபூஜையில் தடங்கல் ஏற்படுவதை பொறுக்காமல் கோபம் கொண்டு, த‌ன் காவலாளியிடம் "நீ சென்று ஏன் இந்த கெட்ட உள்ளம் கொண்ட ஹேமமாலி இன்னும் தினசரி பூஜை மலர்களைக் கொண்டு வரவில்லை என்று அறிந்து வா" என்று பணித்தான். காவலாளியும் சென்று உண்மை நிலவரத்தை அறிந்து வந்து அரசர் குபேரனிடம், "எங்களுக்கு பிரியமான பிரபுவே, ஹேமமாலி இல்லற சுகத்தில் தன்னை மறந்து கிடக்கிறான்" என்று மொழிந்தான். 

அதைக்கேட்ட குபேரன் மிகவும் சினம் கொண்டு "உடனே மதியீன ஹேமமாலியை அழைத்து வந்து தன் முன்னால் நிறுத்தும் படி" கட்டளையிட்டான். தன‌க்கிட்ட பணியைச் செய்ய மறந்த தவறை உணர்ந்ததோடு அல்லாமல், காம வசப்பட்டு மனைவியுடன் காதலில் ஈடுபட்டதும் வெளியில் தெரிந்ததால், ஹேமமாலி குபேரன் முன் மிகவும் பயத்துடனும், நடுக்கத்துடனும் நின்று முதலில் தன்னுடைய வணக்கங்களைத் தெரிவித்தான். 

கோபத்தால் கண்கள் சிவக்க, ஆவேசத்தால் உதடுகள் துடிக்க, மிகுந்த கோபத்துடன் குபேரன் ஹேமமாலியை நோக்கி "பாபி, மஹா பாதகம் புரிந்தவனே, நீசனே, காமாந்தகாரகா(காமி), பக்தியின் மேன்மையை உணராதவனே, தேவர்களுக்கு குற்றம் விளைவிக்கும் நடமாடும் அவமானச் சின்னமே, தேவர்களுக்கெல்லாம் தேவரான சிவபெருமானின் பூஜைக்கு பங்கம் விளைவித்த நீ உன் மனைவியைப் பிரிந்து, வெண்குஷ்ட ரோகத்துடன் மிருத்யுலோகத்தில் பிறந்து அல்லல்பட்டு அவதிப்படுவாய். நீ செய்த பாவச்செயலுக்கு அதுவே சரியான தண்டனையும் ஆகும்" என்று சபித்தான்.

சாபத்தின் விளைவாக ஹேமமாலி அள‌காபுரியை விட்டு உடலெங்கும் வெண்குஷ்ட ரோகம் பீடிக்க அவமானத்துடன் பூவுலகில் வீழ்ந்தான். உண்பதற்கும், குடிப்பதற்கு எதுவும் கிடைக்காத அடர்ந்த பயத்தைக் கொடுக்கும் வனாந்தரத்தில் கண் விழித்தான். நெடு நாட்கள் இப்படியே துன்பத்தில் சென்றன. இரவுப் பொழுதிலும் வலியால் உறக்கம் வராமல் அல்லலுற்றான். கோடையின் கடுமையான உஷ்ணத்திலும், பனியின் கடுமையான குளிரிலும் தாங்கவொண்ணா இன்னலுற்றான். இத்தனை துன்பம் அனுபவித்தாலும், சிவபெருமானின் மீதான பக்தி குறையாமல் இடைவிடாது தொழுது வந்தான். அதனால் அவனது புத்தி தடுமாறாமல், செய்யும் காரியத்தில் நிலைத்து இருந்தது. செய்த பாப கர்மத்தினால் விளைந்த சாபத்தின் காரணமாக இன்னலுற்றாலும், சிவபெருமானிடம் கொண்ட பக்தியால், தன் முந்தைய பிறவியை பற்றிய நினைவு மாறாமல் இருந்தது. 

இப்படியே பல நாட்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து மலை, வனாந்தரம், சமவெளி ஆகியவற்றை கடந்து, ஹேமமாலி பிரம்மாண்டமாகப் பரவி நிற்கும் இமாலய பர்வதத்தை அடைந்தான். அங்கு அதிர்ஷ்டவசமாய் அவனுடைய சிவபக்தியின் பலனாக, மஹாதபஸ்வியான ரிஷி மார்க்கண்டேயரின் ஆசிரமத்தைக் கண்டான். ரிஷி மார்க்கண்டேயரை பிரம்மாவின் பிரதிபிம்பம் என்றே கூறுவர். அவரது ஆசிரமமானது பிரம்மசபை போன்று அழகுற விளங்கியது. 

ஆசிரமத்தில் ரிஷி மார்க்கண்டேயர் த‌ன் ஆசனத்தில் மிகவும் பொலிவுடனும், தேஜஸூடனும் மற்றுமொரு பிரம்ம தேவன் போல் அமர்ந்திருக்க, ஹேமமாலி பாவம் செய்த குற்ற உணர்ச்சியால் வெட்கப்பட்டு தூரத்தில் நின்றுகொண்டு, ரிஷிக்கு தன்னுடைய பணிவான வணக்கத்தையும், வந்தனத்தையும் செலுத்தினான். பிறர் நலனில் அக்கறை கொண்டு, அவர் துயர் துடைக்கும் மனிதாபிமானம் மிக்க ரிஷி மார்க்கண்டேயர், குஷ்டரோகியாக தோற்றத்தில் இருக்கும் ஹேமமாலியைக் கண்டார். அவனை அருகில் அழைத்து "நீ என்ன பாவம் செய்து, இத்தகைய கொடிய துன்பத்தை அடைந்தாய்" என்று வினவினார்.

இதைக் கேட்டவுடன் ஹேமமாலி, வேதனையுடனும் வெட்கத்துடனும் பதிலளித்தான். "முனி ஸ்ரேஷ்டரே நான் குபேரபுரியை ஆட்சி செய்யும் யக்ஷ ராஜன் குபேரனின் பணியாள். என் பெயர் ஹேமமாலி. என் எஜமான் குபேரனின் அன்றாட சிவபூஜைக்காக மானசரோவர் ஏரிக்கரையிலிருந்து பூஜைக்கான மலர்களை தினமும் பறித்து வந்து சேர்ப்பது எனக்கு இட்ட பணியாகும். ஒரு நாள் காமம் தலைக்கேற எனக்கிட்ட பணியை மறந்து மனைவியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு தாமதமாக மலர்களை கொண்டு சேர்ப்பித்தேன். தாமதத்தின் காரணத்தை அறிந்த என் எஜமானன் குபேரன், மிகுந்த சினத்துடன் சிவபூஜைக்கு பங்கம் விளைவித்த என்னை சபித்தார். 

அவரது சாபத்தின் விளைவால் நான் இந்தத் தோற்றத்தில் தங்கள் முன் நிற்கிறேன். சாபத்தின் விளைவால் என் வேலை, வீடு, மனைவி அனைத்தையும் இழந்து மீளும் வழி தெரியாது அலைந்து கொண்டிருக்கிறேன். ஏதோ என் முன் ஜென்ம நல்வினைப் பயன் காரணமாக தவசிரேஷ்டரான தங்களைக் காணும் பேறு பெற்றேன். தங்களை கண்டதும் நல்வழி பிறக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் துயர் தாளாது கருணையுடன் அவர்களது துயரை துடைக்கும் பக்தவத்சலா, மற்றவர்களின் நலத்தையே குறிக்கோளாக மனதில் கொண்ட புண்ணியசீலரே, தயைகூர்ந்து நான் இந்த சாபத்திலிருந்து மீளும் வழியை அருளி உதவுங்கள்! என்று வேண்டி நின்றான்.

கருணை மிகுந்த மார்க்கண்டேயர் இதைக் கேட்டவுடன் "ஹேமமாலி வருத்தப்படாதே, நீ மறைக்காமல் உண்மை உரைத்ததால், உனக்கு மிகுந்த நல்பலனை அளிக்கும் ஏகாதசி விரத நாளை பற்றி கூறுகிறேன் கேள். நீ ஆஷாட மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியன்று அதன் விதிமுறைப்படி உபவாசம் இருந்து விரதத்தை கடைபிடித்தால் பகவான் மஹாவிஷ்ணுவின் அருளுக்குப் பாத்திரமாகி உன்னுடைய சாபத்திலிருந்து விடுபடலாம்"  என்றார். 

இதைக் கேட்டதும் நன்றி உணர்ச்சியுடன் ரிஷி மார்க்கண்டேயரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்து நன்றியையும், வணக்கத்தை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான் ஹேமமாலி. ரிஷி, தன்னை நமஸ்கரிக்கும் ஹேமமாலியை கைதூக்கி எழுப்பி, அவனுக்கு அருளாசி வழங்கி அனுப்பினார். ஹேமமாலி விவரிக்க இயலாத ஆனந்தம் ததும்ப ஆசிரமத்திலிருந்து வெளியேறினான். 

ரிஷி மார்க்கண்டேயர் சொல்லியபடி ஹேமமாலியும் ஆஷாட மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைகளின்படி கடைபிடித்தான். அதன் பலனாக சாபம் விலகி, தன் அழகான யக்ஷ தோற்றத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று வீடு திரும்பி, தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழலானான். 

தர்மத்தை தவறாது கடைபிடிக்கும் யுதிஷ்டிரா, யோகினி ஏகாதசி விரதத்தின் மஹிமையும், அதன் சுப பலன்களையும் பற்றி அறிந்து கொண்டாய். யோகினி ஏகாதசி விரத உபவாசம், எண்பத்தெட்டு ஆயிரம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது. எவரொருவர் இப்புண்ணிய நாளில் விதிமுறைப்படி விஷ்ணு பூஜை செய்து, உபவாச விரதத்தைக் கடைபிடிக்கிறாரோ, அவர் ஏகாதசி தேவியின் அருளால் தங்களுடைய பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று புண்ணிய பக்திமான் ஆவார். மஹாராஜனே நீ கேட்டபடி ஆஷாட மாத கிருஷ்ணபட்ச ஏகாதசியின் புண்ணிய மஹிமையை விவரித்துள்ளேன்" என்று முடித்தார்

கதையின் சாரம்: எடுத்த பணியை சிரத்தையுடனும் கவனத்துடனும் செய்ய வேண்டும். பூஜை முதலான தெய்வ காரியங்களில், சோம்பேறித்தனத்தையும் அக்கறையின்மையும் விட்டுவிட்டு, மனதில் எப்பொழுதும் கட்டுப்பாட்டுடன் சதாசர்வ காலமும் ஈஸ்வர சிந்தனையுடன் இருக்கவேண்டும். கலியுகத்தில் கர்ம வினையினால் ஏற்படும் வெண்குஷ்டம் போன்ற கொடிய  ரோகங்களிலிருந்து விடுபட, யோகினி ஏகாதசி அன்று பக்தி சிரத்தையுடன் பகவானின் நாமகரத்துடன் உபவாசம் இருந்து விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

நன்றி : Kshetra Yaatra


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||


திங்கள், 19 ஜூன், 2017

வரூதினீ ஏகாதசி

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன


வைகாசி மாதம் - கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரும் ஏகாதசி திதியை வரூதினீ ஏகாதசியாக ‌கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். அர்ஜூனன் கிருஷ்ண பரமாத்மாவிடம் "பிரபு! தாங்கள் தயைகூர்ந்து வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியம், அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், விரத விதிமுறைகள், விரதத்தை அனுஷ்டிப்பதால் விளையும் நற்பலன்கள் ஆகியவற்றைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்க வேண்டுகிறேன்." என்றான்.

ஸ்ரீ கிருஷ்ணர், ஹே குந்தி நந்தனா! வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி வரூதினீ ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அளவில்லா செளபாக்கியம் கிடைக்கும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதர்களின் சர்வ பாவங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினை பெறுவர். வரூதினீ ஏகாதசியின் புண்ணிய பலனின் பிரபாவத்தால் ராஜா மாந்தாதா ஸ்வர்க்கலோகப் பிராப்தியை பெற்றார். இஷ்வாகு அரச பரம்பரையில் வந்த மஹாராஜா தந்துமாரா, சிவபெருமானின் சாபத்தால் தான் பெற்ற குஷ்ட ரோகத்திலிருந்து விடுதலை பெற்று, இவ்விரத மேன்மையால் ஸ்வர்க்கலோகப் பிராப்தியும் பெற்றார்.

வரூதினீ ஏகாதசி விரத புண்ணிய பலன் பத்தாயிரம் (10,000) வருடங்கள் தவம் செய்வதால் கிடைக்கப்பெறும் புண்ணியத்திற்கு இணையானதாகும். இவ்ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலன், குருக்ஷேத்ர பூமியில் சூரிய கிரஹண காலத்தில் சொர்ண (தங்கம்) தானம் ஒரு முறையாவது செய்வதால் கிடைக்கப்பெறும் புண்ணியத்திற்கு சமமானதாகும். உத்தமமான இவ்ஏகாதசி விரதத்தின் புண்ணிய மஹிமையால், மனிதர்கள் இவ்வுலகில் அல்லாது பரலோகத்திலும் சுகபோகங்களை அனுபவித்துடன்,முடிவில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர். 

"ராஜன்! இவ்ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், இவ்வுலகில் சுக போகங்களுடன் வாழ்வதுட‌ன், இறுதியில் முக்தியும் பெறுவர். சாஸ்திரங்களில், குதிரை(அஸ்வ) தானத்தை விட யானை(கஜ) தானம் மேலானது எனவும், யானை தானத்தை விட, பூமி தானம் மேலானது எனவும், பூமி தானத்தை விட,  தில(எள்) தானம், மேலானது எனவும், தில தானத்தை விட சொர்ண தானம் பன்மடங்கு மேலானது எனவும், தான தர்மங்களைப் பற்றி குறிப்பிடும் போது கூறியுள்ளனர். மேலும், சொர்ண தானத்தை விட அன்னதானம்  மேன்மையானதும், சிரேஷ்டமானதும் ஆகும் என்றும் கூறியுள்ளனர். இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை. அன்னதானம் பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

தகுதியானவருக்கு கன்யா தானம் செய்து கொடுப்பது, அன்னதானம் செய்வதற்கு இணையானது என்றும், அறியாமையில் உழல்பவருக்கு ஜீவன் முக்திக்கு வழிகோலும் ஆன்மீக அறிவினைப் புகட்டுவது அதை விட மேலானது என்றும் சாஸ்திரம் அறிந்த சான்றோர் கூறியுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், கோதானம் அன்னதானத்திற்கு இணையானது என்று கூறியுள்ளார். கன்யாதானம், அன்னதானம், கோதானம் மற்றும் ஆன்மீக அறிவு புகட்டுதல் முதலிய உத்தமமான நற்கர்மங்களால் கிட்டும் ஒருங்கிணைந்த புண்ணிய பலனை, ஒருவர் வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதின் மூலம் பெறுவர்.

பேராசை, சோம்பல், வேலை செய்ய உடல் வணங்காமை இவை காரணமாக, தன் மகளின் செல்வத்தில் வாழ்பவர், செல்வத்தை அனுபவிப்பவர் பிரளய காலம் வரை நரகத்தில் தண்டனை அனுபவிப்பதுடன், மறு ஜென்மத்தில் இழி பிறப்பெடுத்து கஷ்டமும், துக்கமும் அனுபவிப்பர். ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் ஹோம அக்னி வளர்த்து, இறை வணக்கத்துடன், மந்திரங்கள் ஒலிக்க, அணி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கன்னியை தகுதியானவருக்கு கன்யாதானம் செய்வதனால் கிட்டும் புண்ணியத்தைக் கணக்கிட சித்ரகுப்தனாலும் இயலாது. அத்தகைய மேன்மையான கன்யாதான புண்ணிய பலனை, வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் எளிதில் பெறலாம்.  

இரவு முழுவதும் கண் விழித்து, பாகவதம், புராணங்கள் ஸ்ரவணம் செய்தல், பஜனை, கீர்த்தனை என்று இருத்தல் வேண்டும். பிறரை நிந்தனை செய்தல்,  சூதாட்டம், கேளிக்கை, பகல் உறக்கம், வெற்றிலை பாக்கு, எண்ணெய் மற்றும் உணவு உண்ணுதலும் தவிர்க்கப்பட வேண்டும். துஷ்டர் மற்றும் பாவம் புரிந்தோரிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும். கோபம் கொள்வதும், பொய் பேசுதலும் கூடாது.

ராஜன்!, எவர் ஒருவர் ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாக கடைப்பிடிக்கிறாரோ, அவருக்கு ஸ்வர்க்கலோகப் பிராப்தி கிட்டும். மனிதர்கள் பாவவினைகளைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். வருதினீ ஏகாதசி விரத மஹாத்மியத்தை ஸ்ரவணம் செய்வதால் ஒரு ஆயிரம் கோதானம் (பசு) செய்த புண்ணியம் கிட்டப் பெறும். இவ்ஏகாதசி விரத புண்ணியமானது புனித நதியான கங்கையில் நீராடுவதால் கிட்டப் பெறும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானதாகும்.

கதாசாரம்: தன் உணர்ச்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் ஆதாரமாகும். அனைத்துவித நடவடிக்கைகளிலும் சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல், சுகத்திற்கும் சௌபாக்கியத்திற்கும் வளர்ச்சியை கொடுக்கும். சுயக்கட்டுப்பாடு இல்லையெனில் அவர் மூலம் செய்யப்படும் தவம், தியாகம், பக்தி, பூஜை இவை யாவும் சக்தியை இழக்கும்

நன்றி : Kshetra Yaatra


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

வெள்ளி, 5 மே, 2017

காமதா ஏகாதசி

காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.

மாதம்தோறும் வரும் ஏகாதசிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பெயரும், சிறப்பும் உண்டு. சித்திரை மாதம் - சுக்ல (வளர் பிறையில்) பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். 


பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புக்குரிய தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம் "மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு தாங்கள் தயைகூர்ந்து சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் விஸ்தாரமாக வர்ணித்துக் கூற வேண்டுகிறேன்." என்றான்.

ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு "பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை (உரையாடல்) உனக்கு அப்படியே சொல்கிறேன் கேள்." என்றார். ராஜா திலீபன் குரு வசிஷ்டரிடம், "குருதேவா, சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன? அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், பூஜை விதிகள் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் அனைத்தையும் தாங்கள் கிருபை கூர்ந்து விவரமாக கூற வேண்டும்." என்றான்.

அதற்கு பதிலளிக்கையில் மஹரிஷி வசிஷ்டர் "ராஜன்! சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி, காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இவ்ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகல விதமான பாவங்களையும் நீக்கி மோட்சப் பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ, அதே போல் காமதா ஏகாதசி விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம், சகல வித பாபங்களையும் நீக்குவதோடு, புத்ர பிராப்தியையும் அளிக்கிறது. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கர்ம வினையின் காரணமாக இழிநிலை பிறவி எடுத்தவர் அதிலிருந்து விடுதலை பெறுவதுடன், இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர். இப்போது உனக்கு, இவ்ஏகாதசியின் மஹாத்மிய கதையை கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.

பழங்காலத்தில் போகீபுர் என்னும் நகரை புண்டரீகன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் நகரானது அனைத்து வளங்களும் பெற்று ஐஸ்வர்யத்துடன் விளங்கியது. அந்நகரில் அநேக அப்சரஸ், கந்தர்வர், கின்னரர் வசித்து வந்தனர். அதில் சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற லலித் மற்றும் லலிதா என்னும் கந்தர்வ தம்பதியினர் அழகான மாளிகையில் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையில் கற்பனையில் கூட பிரிவு என்பதை ஏற்க இயலாத அளவு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் ப்ரேமையும், காதலும் கொண்டிருந்தனர்.

ஒரு முறை அரசன் புண்டரீகன் இசையரங்கத்தில் கந்தர்வர்களுடன் அமர்ந்து சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அங்கு மற்ற கந்தர்வர்களுடன் சேர்ந்து கந்தர்வனான லலித்தும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அவனுடைய காதல் மனைவியான லலிதா அங்கு இருக்கவில்லை. பாடிக் கொண்டிருந்த லலித்துக்கு திடீரென்று அவளது நினைவு எழ, அதன் காரணமாக சுருதி விலகி பாடலை தவறாக பாட நேர்ந்தது. அதைக் கண்ட நாகராஜனான கார்கோடகன் அரசன் புண்டரீகனிடம் அவனைப் பற்றி புகார் செய்தான். அதை விசாரித்த அரசன் புண்டரீகன், லலித் மீது மிகுந்த கோபம் கொண்டு "துஷ்டனே! துர்மதி பெற்றவனே! என் முன்னிலையில் பாடல் பாடும் பொழுது கூட உன் மனைவியை நினைத்துக் (ஸ்மரணம்) கொண்டிருந்து சங்கீதத்திற்கு அவமரியாதை செய்துள்ளாய். ஆதலால் உன்னுடைய இந்த பாபவினையின் தண்டனையாக, நீ நரமாமிசம் தின்னும் ராட்சஸான ஆக மாறுவாய்" என்று சாபம் இட்டான்.

அரசனின் சாபம் பெற்ற கந்தர்வன் லலித் அக்கணமே கோர வடிவுடைய ராட்சஸனாக மாறினான். அவனுடைய முகம் காண்பவர்களுக்கு அச்சத்தையும், பயத்தையும் அளிக்கக் கூடிய பயங்கர ரூபத்தை பெற்றது. கண்கள் இரண்டும் சூரிய, சந்திரனைப் போன்று கனன்று ஒளியை உமிழ்ந்து கொண்டு இருந்தன.   வாயிலிருந்து அக்னி பிழம்புகள் வெளி வந்து கொண்டிருந்தது. அவனது மூக்கு மலையின் கீழ் உள்ள குகையைப் போன்றும், கழுத்து மலையைப் போன்றும் விளங்கியது. ராட்சஸனாக மாறி  கந்தர்வன் லலித் மிகுந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது.

ப்ரியத்துக்கு உரிய தன் நேசனுக்கு நேர்ந்ததைக் கேட்ட லலிதா மிகுந்த துக்கமும், மனவேதனையும் கொண்டு, தன் கணவரை இந்நிலையிலிருந்து விடுவிக்க எங்கு செல்வது, என்ன செய்வது என்று அறியாது திகைத்தாள். எப்படி தன் கணவரை இந்த நரகத்திலிருந்து மீட்பது என்று யோசித்தாள். ராட்சஸனாக மாறிய கந்தர்வன் லலித் காட்டில் இருந்துக் கொண்டு அநேக பாபங்களை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய மனைவி லலிதை அவன் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து அவனுடைய நிலையை எண்ணி வருந்தினாள். இப்படியாக தன் கணவனை பின் தொடர்ந்து இறுதியில் விந்தியாசல் பர்வதத்தை அடைந்தாள். 

அங்கு அவள் சிருங்கி முனிவருடைய ஆசிரமத்தைக் கண்டாள். ஆசிரமத்தைக் கண்டதும் உடனடியாக அதனுள் சென்று முனிவரை நமஸ்கரித்து பின் வினயத்துடன் அவரிடம் "முனிவரே!, நான் வீர்தன்வா என்னும் கந்தர்வனின் மகள். என் பெயர் லலிதா. என் கணவர் அரசன் புண்டரீகனின் சாபத்தால் கோர ராட்சஸனாக மாறிவிட்டார். அவருக்கு நேர்ந்த இந்த துர்பாக்கிய நிலைமை எனக்கு மிகுந்த துக்கத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் நித்தமும் அவர் படும் பாட்டைக் கண்டு நான் சொல்லவொண்ணா வேதனையை தவித்துக் கொண்டு இருக்கிறேன். முனி சிரேஷ்டரே! தாங்கள் தான் கருணையுடன் என் கணவர் இந்நிலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது சிறந்த உபாயத்தை கூற வேண்டும்." என்று பிரார்த்தித்தாள்.

லலிதையின் கதையைக் கேட்ட சிருங்கி முனிவர் "கந்தர்வ கன்னிகையே! சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை காமதா ஏகாதசி என்று அழைப்பர். அன்று ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வத்துடன் உபவாசம் இருந்து அனுஷ்டித்தால் மனிதர்களின் அனைத்து காரியங்களும் சீக்கிரமே சித்தி அடையப் பெறும். அன்று நீ விரதம் அனுஷ்டித்து அவ்விரத புண்ணிய பலனை உன் கணவருக்கு அளித்தால், அரசனின் சாபத்தால் ராட்சஸ ரூபத்தை அடைந்த உன் கணவன் அதிலிருந்து விமோசனம் பெறுவான்." என்று ஆசீர்வதித்தார்.

முனிவரின் வார்த்தைகளின் படி லலிதா ஆனந்தத்துடன் காமதா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டித்தாள். மறுநாள் துவாதசியன்று பிராம்மணர் முன்னிலையில் தான் பெற்ற விரத புண்ணிய பலனை கணவருக்கு அர்ப்பணித்தாள்  பகவான் மஹாவிஷ்ணுவை வணங்கி "பிரபோ வாசுதேவா, ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நான் பெற்ற புண்ணிய பலன் அவரை சேர்ந்தது, அதன் பிரபாவத்தால் அவர் சாபத்திலிருந்து விடுதலை அடைய தங்களை பிரார்த்திக்கிறேன்." என்று வேண்டிக் கொண்டாள்.

ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலனால் அவள் கணவன் லலித் ராட்சஸ ரூபத்திலிருந்து விடுதலை பெற்று தன் பழைய கந்தர்வ சொரூபத்தை அடைந்தான். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் தன் மனைவி லலிதாவுடன் மீண்டும் ஆனந்தமாக வாழத் தொடங்கினான். காமதா ஏகாதசியின் பிரபாவத்தால் முன்பை விட மிகவும் செழிப்புடன் இருவரும் வாழ்ந்தனர். இறுதியில் இருவரும் புஷ்பக விமானத்தில் அமர்ந்து ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெற்றனர்.

பார்த்தா!  விதிப்பூர்வத்துடன் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் அனைத்து பாபங்களும் நீங்குகிறது. இவ்விரதத்தின் புண்ணிய பலனானது பிரம்மஹத்தி போன்ற கொடிய பாபங்களிலிருந்தும், மனித சொரூப இல்லா இதர யோனி பிறவிகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது. உலகத்தில் இவ்விரதத்திற்கு நிகரான விரதம் வேறெதுவும் இல்லை. காமதா ஏகாதசி விரத கதை (அ) மஹாத்மியம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அத்யந்த பலனை அளிக்கக் கூடியது.

கதாசாரம்: மனிதர்கள் எப்பொழுதும் தன் சுகத்தைப் பற்றிய சிந்தனையில் உழல்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை எனினும் சதா சர்வகாலமும் அது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று இருந்தால், அது நம் கடமைகளை மறக்கச் செய்து, அதனால் விளையும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது. கந்தர்வன் லலித்தும் கடமையை மறந்ததால், கோர ராட்சஸனாக மாறி வெறுக்கத்தக்க காரியங்களை செய்ததுடன், கஷ்டத்தையும் அனுபவிக்க நேர்ந்தது. பகவான் மஹாவிஷ்ணு தன் பக்தர்களின் மீது அளவில்லா க்ருபா கடாக்ஷத்தை அருள்பவர். பக்தர்கள் மனம் விரும்பிய வரத்தை அருள்பவர். தான் பெற்ற புண்ணிய பலனை மற்றவரின் நலம் கருதி அர்ப்பணிப்பதால், அந்நற்கர்மாவானது பன்மடங்கு பெருகி மிகுந்த சக்தி வாய்ந்ததாகிறது. அத்தகைய மேன்மையான தானத்தை செய்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவராகிறார்.

நன்றி : Kshetra Yaatra


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||