ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
பாடல் எண் : 101
சலங்காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன்னூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே.
பொருளுரை:
சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்; இயமனுடைய போருக்கும் அஞ்சமாட்டார்கள்; இருண்ட நரகக் குழியை அடையமாட்டார்கள்; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள்; புலி கரடி யானை முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மனம் கலங்க மாட்டார்கள்; கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய கந்தரலங்காரத்தின் நூறு திருப்பாடல்களுள் ஒரு திருப்பாடலையேனும் கற்று அதன் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அவர்களாவர்.
பாடல் எண் : 102
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க் கண்களும்
குருவடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே.
பொருளுரை:
திருமுருகப்பெருமானுடைய திருவடிகளும் அவற்றில் விளங்கும் தண்டை அணிகலனும், உள்ளே மணிகள் ஒலிக்கும் சிலம்பும் கிரௌஞ்ச மலையைத் தொளைத்துப் போர் செய்த கூர்மையான வேலாயுதமும், கடப்ப மலர்மாலையும், அம்மாலைகளுடன் கூடிய விசாலமான பன்னிரண்டு புயங்களும் பொருந்திய அழகு மிக்க ஆறு திருமுகங்களும் குருமூர்த்தியாக எழுந்தருளி வந்து அடியேனுடைய மனம் குளிருமாறு ஆனந்தக் கூத்தாடின.
பாடல் எண் : 103
இராப் பகலற்ற இடங்காட்டி யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டையந் தாள் அருளாய் கரிகூப்பிட்ட நாள்
கராப்படக் கொன்ற கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்கிரம வேல நிருத சங்கார பயங்கரனே.
பொருளுரை:
இரவோ பகலோ இல்லாத அந்த இடத்தைக் காண்பித்து அடியேன் அங்கிருந்தே தேவரீரைத் துதிக்க வேண்டி, குரா மலரையும் தண்டை அணிகலனையும் அணிந்த அழகிய திருவடிகளைத் தந்தருள்வீராக! 'கஜேந்திரம்' என்னும் யானையானது 'ஆதிமூலமே' என்று அழைத்த அந்நாளில் அந்த யானையைப் பற்றிக் கொண்ட முதலையைக் கொன்று, அந்த யானை போற்றுமாறு அதன்முன் சென்று நின்று காட்சிதந்தருளிய திருமால் பாராட்டுகின்ற ஆற்றலை உடையவரே! வேலாயுதரே! அசுரர்களை அழித்தவரே! அந்த அசுரர்களுக்கு அச்சத்தை விளைவிப்பவரே!.
பாடல் எண் : 104
செங்கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிருதோளும் பதுமமலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.
பொருளுரை:
சிவந்த நிறமுடையதும் பகைவர் மீது சினம் பொருந்தியதும் கூர்மையானதுமான வேலாயுதமும் அழகிய ஆறு திருமுகங்களும் பக்கங்களில் வரிசையாக விளங்கி நலன்களைத் தரும் பன்னிரண்டு தோள்களையும் கொண்டு, தாமரை மலரானது நறுமணத்தினையும் முத்தினையும் சொரிகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானை, 'குமரக்கடவுளே' என்று எவ்விடத்தில் அடியேன் நினைத்தாலும் அவ்விடத்தில் அடியேன் முன் வந்து நின்று அருள்புரிபவராகத் திகழ்கின்றார்.
பாடல் எண் : 105
ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினைதீர்த்து அருளாய்
வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடையானே அமர சிகாமணியே.
பொருளுரை:
பிறவிநோய்க்கு காரணமான வினையின் விளைவே உயிருக்குக் கேடு செய்வதாக உள்ளது என்பதை அறிந்தபோதிலும் தேவரீருடைய திருவருளாகிய திருவடிகளை வணங்குவதை எக்காலமும் சிந்திக்கின்றேன் இல்லை. அடியேனுடைய வினையின் விளைவைத் தீர்த்து அருள்புரிவீராக, குளங்களும் பரந்த வயல்களும் சூழ்ந்துள்ள பெருமைக்குரிய திருத்தணி மலைமீது எழுந்தருளியுள்ள சேவற்கொடியை உடையவரே, தேவர்களுக்கு முடிமணியாகத் திகழ்பவரே!.
பாடல் எண் : 106
கொள்ளித் தலையில் எறும்புது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்து அருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.
பொருளுரை:
இருதலைக் கொள்ளியின் இடையில் அகப்பட்டுக் கொண்ட எறும்பைப் போல துன்புறுகின்ற அடியேனுடைய மனத் துயரை நீக்கி அருள்வீராக! ஒருகோடி முத்துக்களை தெள்ளிக் கொழிக்கும்படியான கடற்கரையில் அமைந்திருக்கும் திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் வீரரே! வள்ளியம்மையின் அன்புக் கணவராய் வாய்த்த தலைவரே! மயில்மீது ஏறிவரும் மாணிக்கமே!.
பாடல் எண் : 107
சூலம் பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்து வரும்
காலன் தனக்கு ஒருகாலும் அஞ்சேன் கடல்மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே.
பொருளுரை:
சூலாயுதத்தைக் கையிற்பிடித்துக் கொண்டும் இயமனுடைய பாசக் கயிற்றைச் சுழற்றிக் கொண்டும் உயிர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற இயமனின் அமைச்சரான காலன் என்பவனுக்கு அடியேன் ஒருபோதும் அஞ்சமாட்டேன், ஏனென்றால் சமுத்திரத்தில் உண்டாகிய ஆலகால விடத்தை உண்டருளிய சிவபெருமானின் திருக்குமாரனாகிய ஆறுமுகப்பெருமானுடைய வேலாயுதமும் திருக்கரமும் நமக்கு ஒப்பற்றதோர் உண்மைத் துணையாக உள்ளன!.
|| ----------- கந்தர் அலங்காரம் முற்றிட்டு ----------- ||
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||