ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கந்தர் அலங்காரம் 71 - 80

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்



பாடல் எண் : 71
துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்து
அருத்தி உடம்பை ஒருக்கில் என்னாம் சிவயோகம் என்னும்
குருத்தை அறிந்து முகம் ஆறு உடை குருநாதன் சொன்ன
கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர் முக்தி கைகண்டதே.

பொருளுரை‬: 
தோலால் செய்யப்பட்ட துருத்தி என்று சொல்லும்படி கும்பகம் செய்து பிராண வாயுவைச் சுழற்றி முறியச் செய்து அவ்வாயுவையே உணவாக உண்பித்து இந்த உடலைத் துன்புறுத்துவதனால் விளையும் பயன் யாது? "சிவயோகம்" என்னும் முளையைத் தெரிந்து ஆறு திருமுகங்களுடைய சற்குருநாதராகிய திருமுருகப்பெருமான் உபதேசித்து அருளிய திருக்கருத்தை உங்கள் மனத்தில் நிலைபெறச் செய்வீர்களானால் முக்தியாலாகிய பேரின்பம் உங்கள் கைக்கு எட்டியதாகும்.


பாடல் எண் : 72
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே. 

பொருளுரை‬: 
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும் வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது. 


பாடல் எண் : 73
போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்து வந்து
தாக்கும் மனோலயம் தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல் ஒணாது இந்த ஆனந்தமே.

பொருளுரை‬: 
போதலும், வருதலும், இரவும், பகலும், வெளியும், உள்ளிடமும், வாக்கும், உருவமும், இறுதியும், ஒன்றும் இல்லாததாகிய ஒரு பரம்பொருள் அடியேனிடம் மீண்டும் மீண்டும் வந்து சார்ந்து நின்று, தானாகவே அடியேனுக்கு மன ஒடுக்கத்தைத் தந்தருளி அடியேனைத் தன்வயப்படுத்திக் கொள்கின்றபோது உண்டாகின்ற இணையற்ற பேரின்பம் இத்தகையது என்று கூறுவதற்கு இயலாது, ஆறு திருமுகங்களையுடைய திருமுருகப்பெருமானே!.


பாடல் எண் : 74
அராப்புனை வேணியன் சேய் அருள்வேண்டும் அவிழ்ந்த அன்பால்
குராப்புனை தண்டையந் தாள் தொழல் வேண்டும் கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டும் என்றால்
இராப் பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே.

பொருளுரை‬: 
பாம்பையணிந்த முடியையுடைய சிவபெருமானுடைய திருமைந்தராகிய திருமுருகப்பெருமானின் திருவருள் வேண்டும். மலர்ந்து நெகிழ்ந்த அன்பினால் குரா மலர் மாலையையும் தண்டையையும் அணிந்துள்ள அழகிய திருவடிகளை வணங்க வேண்டும். கொடிய ஐம்புலன்களின் வேடிக்கை ஒழிய வேண்டும். மனமும் துடிப்பு நீங்குதல் வேண்டும். இவற்றை அடையப் பெறாவிடின் இரவு பகல் இல்லாத இடத்தில் சும்மா இருத்தல் எளிதாகாதே. 


பாடல் எண் : 75
படிக்கின்றிலை பழநித் திருநாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே.

பொருளுரை‬: 
"ஓ" நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்கின்றாயில்லை. பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை "முருகா" என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள் பசியால் மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி அதனால் நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும்பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?. 


பாடல் எண் : 76
கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றம் என் குன்று எறிந்த
தாடாளனே தென் தணிகைக் குமர நின் தண்டையம் தாள்
சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே. 

பொருளுரை‬: 
கோணலின்றி ஆக்கல் தொழில் புரியும் பிரம்ம தேவனுக்கு அடியேன் செய்த குற்றம் யாது? கிரௌஞ்ச மலை பிளவுபடுமாறு வேலாயுதத்தை ஏவிய மிகுதியான முயற்சி உள்ளவரே, தெற்குத் திசையில் உள்ள திருத்தணிகை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள குமரக் கடவுளே! தேவரீருடைய தண்டையணிந்த அழகிய திருவடிகளை அணிகலனாகச் சூடிக் கொள்ளாத தலையும், தேவரீரின் திருவடிகளைக் கண்டு மகிழாத கண்களும், தேவரீரின் திருவடிகளைக் கை கூப்பி வணங்காத கைகளும் தேவரீரின் திருவடிகளின் புகழைத் துதித்துப் பாடாத நாவும் அடியேனுக்கென்றே பிரம்ம தேவன் தெரிந்து படைத்தனனே!. 


பாடல் எண் : 77
சேல் வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி
மால் வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளிமலை எனவே
கால் வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டு
நூல் வாங்கிடாது அன்று வேல் வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.

பொருளுரை‬: 
ஓ, நெஞ்சமே, "சேல்" என்னும் மீனின் உருவை வெல்லுகின்ற கண்களையுடைய பெண்களின் அழகிய தனங்களைத் தழுவுவதற்கு உள்ளத்தில் கருதி ஆசை கொண்டு ஏக்கமுற்று மயக்கத்தை அடையாமல், வெள்ளி மலைபோல் காலை நீட்டி நிற்கும் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை உடைய இந்திரனது மனைவியாகிய இந்திராணியின் கழுத்தில் அணிந்துள்ள மங்கல நாணை இந்திரனின் பகைவர்களாகிய அசுரர்கள் அந்நாளில் அறுத்துவிடாது அவர்கள் மீது வேலாயுதத்தை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானின் மலர் போன்ற திருவடிகளைக் கண்டு மகிழ்வாயாக!. 


பாடல் எண் : 78
கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்
போர்கொண்ட காலன் உமைக் கொண்டுபோம் அன்று பூண்பனவும்
தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர் ஐயோ கெடுவீர் நும் அறிவின்மையே.

பொருளுரை‬: 
கூர்மையான வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானைப் போற்றாமல் உங்கள் மனை மாட்சி, நிதி, அணிகலன் ஆகியவற்றின் மிகுதியைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொண்டாடும் மனிதர்களே! போர்த் தொழிலையே மேற்கொண்டுள்ள இயமனுடைய மந்திரியாகிய காலன் என்பவன் உங்களைக் கொண்டு போகின்ற அந்த நாளில் நீங்கள் அணிந்து கொள்கின்ற ஆபரணங்களையும், பூமாலையை அணிந்துள்ள பெண்களையும், மாளிகை போன்ற வீட்டையும் பணப் பையையும் யார் எடுத்துக்கொண்டு போவார்கள்? ஐயோ, உங்களின் மூடத்தனத்தாலேயே நீங்கள் வீணே கெட்டுப் போகின்றீர்களே!. 


பாடல் எண் : 79
பந்தாடு மங்கையர் செங்கயல் பார்வையில் பட்டு உழலும்
சிந்தா குலந்தனைத் தீர்த்து அருள்வாய் செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினில் நிற்கும்
கந்தா இளங்குமரா அமராவதி காவலனே.

பொருளுரை‬: 
பந்து விளையாடும் பெண்களின் சிவந்த கயல் மீன் போன்ற கண் நோக்கில் அடியேன் அகப்பட்டு உழல்கின்ற மனோ வியாகூலத்தைப் போக்கி அருள்புரிவீராக, செம்மையான வேலாயுதத்தைத் தாங்கிய திருமுருகப்பெருமானே! பூங்கொத்துக்கள் நிறைந்த கடப்ப மரங்கள் சூழ்ந்திருக்கின்ற திருத்தணிகை மலைமீது நிலைபெற்றிருக்கும் கந்தக் கடவுளே, என்றும் அகலாத இளம்பருவத்தினை உடைய குமரக்கடவுளே, வானுலகத்தின் தலைநகராகிய அமராவதியைக் காத்தருள்பவரே!.


பாடல் எண் : 80
மாகத்தை முட்டி வரும் நெடுங்கூற்றன் வந்தால் என் முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய் சுத்த நித்த முத்தித்
தியாகப் பொருப்பைத் திரிபுர அந்தகனை திரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி தன் பாலகனே.

பொருளுரை‬: 
ஆகாயத்தை முட்டி வருகின்ற நெடிய இயமன் அடியேனின் இறுதிக் காலத்தில் வருவான் ஆயின், அடியேனுக்கு முன்பாக குதிரையையொத்த தோகையையுடைய மயிலின் மீது தேவரீர் ஏறி வந்து அடியேனுக்கு முன்பாக நின்று திருவருள்புரிவீர். தூய்மையானதும் என்றும் அழியாததுமான முக்தியை வழங்கும் கொடைத் தன்மையுடைய மலையைப்போன்றவரும் முப்புரத்தை எரித்தவரும் மூன்று கண்களை உடையவருமான சிவபெருமானை தம் வலப்பக்கத்தில் வைத்திருக்கும் மேலான கல்யாண குணங்களுடைய உமாதேவியாரின் திருமைந்தரே!.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக