சனி, 13 ஆகஸ்ட், 2016

கந்தர் அனுபூதி 31 - 40

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி



பாடல் எண் : 31
பாழ்வாழ்வு எனும் இப்படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தனதாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

பொருளுரை‬: 
மயிலை வாகனமாகக் கொண்டுள்ள திருமுருகப்பெருமானே! பாழ்படுவதான வாழ்க்கை என்னும் இந்தப் பெரிய மாயைச் சூழலிலே அடியேன் வீழ்க என்று தேவரீர் விதித்துவிட்டீரே! தேவரீர் அடியேனை இங்ஙனம் மாயை வாழ்வில் தள்ளி சிக்கவைத்தற்கு ஏற்கனவே அடியேன் செய்துள்ள தாழ்வான செயல்கள் ஏதேனும் காரணமாக உள்ளனவோ? அது எவ்வாறாயினும் தேவரீர் நீடு வாழ்வீராக!.


பாடல் எண் : 32
கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே.

பொருளுரை‬: 
வெற்றி வேலனே! கலை சார்ந்த நூல்களையே அடியேன் கலக்கத்துடன் விரைந்து உருப்போட்டுக்கற்று தலை வேதனையுறும்படி ஆகிவிடவோ? கொலைத்தொழில் புரியும் வேடர் குலத்தில் தோன்றிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையாரைச் சேர்ந்தவரும் கிரவுஞ்ச மலையை வெற்றி வேலால் பிளந்தவருமான மலைபோன்ற கடவுளே!.


பாடல் எண் : 33
சிந்தாகுல இல்லோடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே.

பொருளுரை‬: 
கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனத்துக்கு வருத்தம் தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்திய மலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்?.


பாடல் எண் : 34
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரந் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே.

பொருளுரை‬: 
போரில் வல்ல மயில் வாகனத்தையுடையவரே! சண்முக மூர்த்தியே! கங்கை நதியின் பால குமாரனே! கிருபாகர மூர்த்தியே! அழகிய மாதர்கள் நிமித்தம் தீய வழியில் சென்று அடியேன் மனம் குலைந்து போகா வண்ணம் அடியேனுக்கு வரந்தந்து அருள்வாயாக!.


பாடல் எண் : 35
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாணுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுர பூபதியே.

பொருளுரை‬: 
பிறை போன்ற ஒளிவீசும் நெற்றியை உடைய வள்ளியம்மையாரைத் தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம் பூண்டவரே! விண்ணோர்களின் மாமன்னரே! பிரமன் படைத்ததும் வினையாலானதுமான உடலைப் புறக்கணித்துவிட்டு அடியேன் நற்கதியை அடையும்படி செந்தாமரை மலர்களையொக்கும் தேவரீரின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடியேனுக்கு எப்போது அருள்வீர்?.


பாடல் எண் : 36
நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பாதசேகரனே.

பொருளுரை‬: 
பிரமன் முதலாய விண்ணோர் தங்கள் தலையுச்சிமேல் அணியும் செந்தாமரை மலர்களையொக்கும் திருவடிகளை உடையவரே! வள்ளியம்மையாரின் திருவடிகளைத் தேவரீரின் முடிமீது கொள்பவரே! சிவபெருமான், "நாதரே, குமராய நம" என்று வணங்கி பிரணவ மந்திரத்தின் பொருளைத் தமக்கு உபதேசிப்பீராக என்று கேட்கத் தேவரீர் உபதேசித்தருளிய பொருள்தான் யாதோ?.


பாடல் எண் : 37
கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

பொருளுரை‬: 
மனமே! அசுரன் சூரபன்மன் ஒளிந்திருந்த கிரவுஞ்ச மலைமீது செலுத்திய ஆற்றல்மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருமுருகக் கடவுளைப் போற்றும் அடியார்களின் குழுவைச் சேர்ந்தவன் என்னும் பதவியைப் பெறுவதையே நீ விரும்புவாயாக! "யான்" என்னும் ஆணவத்தை பொறுமையாகிய அறிவைக்கொண்டு அடியோடு வேருடன் அரிந்து தள்ளிவிடுவாயாக!.


பாடல் எண் : 38
ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

பொருளுரை‬: 
கூதாள மலர் மாலையை அணிந்தவனே, வேடர் குலப் பெண் வள்ளி பிராட்டியாரின் நாயகனே, வேதாள கூட்டங்கள் புகழும் வேலாயுதனே, வீம்பு பேசுகின்றவனும், நல்லவை யாதும் அறியாதவனும், தர்மத்திற்கு விரோதமான குற்றங்கள் செய்கிறவனுமாகிய என்னை ஆண்டு கொண்ட கருணையை சொல்லித் தகுமோ?.


பாடல் எண் : 39
மாஏழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடித்தோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே.

பொருளுரை‬: 
உலகை ஆளும் மாமன்னரே! வேடர் குலத்தவரும் மின்னற்கொடி போன்றவருமான வள்ளியம்மையாரின் தோள்களைச் சேரும் கடவுளே! சிவபெருமானுக்குக் குருமூர்த்தியானவரே! பெரிய ஏழுவகையான பிறப்பு நீங்குமாறு மயக்கம் நீங்காத மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனப்படும் மூன்று வகை ஆசைகளும் எப்போது தான் முடிவுறுமோ?.


பாடல் எண் : 40
வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துணையோடு பசும்
திணையோடு இதனோடு திரிந்தவனே.

பொருளுரை‬: 
வள்ளிமலைச் சாரலில் உள்ள சுனை இடத்தும், அருவி இடத்தும், பசுமையான தினைப் புனத்திடத்தும் வள்ளிப் பிராட்டியார் நின்று கொண்டு கவண் வீசிய பரணிபடத்திலும் அலைந்த முருகா, இருவினைகளையும் ஒழிக்கும் பேராற்றல் மிக்க ஞானச்சுடர் வீசும் வேலாயுதத்தை மறக்காதவானகிய நான், சம்சார பந்தத்தோடு கலக்கம்கொண்டு மயங்கி உழல்வது தகுமோ?.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக