விநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

எண்ணிரு கணபதி துதி

பிள்ளையாரின் பதினாறு வடிவங்கள் மிகச் சிறப்பானவை என்கின்றன புராணங்கள். அந்த எண்ணிரு கணபதிகளையும் போற்றிடும் இந்தத் துதியை சதுர்த்தியன்று அவசியம் சொல்லுங்கள். நீங்கள் எண்ணிய எல்லாம் ஈடேறும்.

01 பால கணபதி 
மா, பலா, வாழை ஆகிய மூவகைப் பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தியவரும், சூரியோதயகால செவ்வண்ண மேனியுடன் பிரகாசிப்பவரும், பாலகனைப் போன்ற உருவம் உள்ளவருமான இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.


வேழ முகத்து விநாயகனே பால வடிவப் பரம்பொருளே
பலாவுடன் முக்கனியும் கரும்பும் தரித்த மெய்ப்பொருளே
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் படைத்தோம்
பால கணபதியே பல வளங்கள் தந்தருள்வாயே.

02 தருண கணபதி
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றைத் தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டு கைகளில் ஏந்தியவரும், சூரியோதயகால ஆகாயத்தின் செந்நிற மேனி உடையவரும், இளைஞனாகக் காட்சிதருபவருமான இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.


தருண சூரியப் பிரகாசனே தங்க வடிவானவனே 
ஒரு கொம்பு நெற்கதிர் பாசக்கயிறு கையில் தரித்தோனே
பருப்புப் பூரண மோதகம் முக்கனி படைத்தோம்
தருண கணபதியே தக்க நிதி தந்தருள்வாயே.

03 பக்த கணபதி
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினால் செய்த பாயசம் நிரம்பிய சிறு குடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தியவரும், நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடையவருமான இவரை வழிபடுவதால் இறைவழிபாடு உபாசனை நன்கு அமையும்.


பக்த ஜன ப்ரியனே பார்வதி புத்ரனே
பாயசம் நிறை கலயத்தை கரந்தனில் கொண்டோனே
பாயசம் மட்டுமின்றி பலவகை மோதகம் படைத்தோம்
பக்த கணபதியே... பக்க பலமாய் என்றுமிருப்பாயே.

04 வீர கணபதி
தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களை ஏந்தியவரும்; ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்குபவருமான இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.


மூல முதற்பொருளே மூஷிக வாகனனே
வேல் வில் சக்ராயுதமென பதினாறு கரத்தோனே 
பொரி கடலை அப்பம் அவல் பாயசம் படைத்தோம்
வீர கணபதியே வீரம் என் நெஞ்சில் விதைத்தருள்வாயே.

05 சக்தி கணபதி
பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சி அளிப்பவரும்; பாசம், அங்குசம் ஏந்தி பயத்தை நீக்குபவரும்; செந்தூர வண்ணம் கொண்டவருமான இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.


சக்தியைத் தழுவிய வித்தகனே சங்கரன் மகனே
சிந்தூர வர்ண சிங்கார விநாயகனே
செந்தாமரைப் பூ தங்க அரளி அருகம்புல் சாற்றினோம்
சக்தி கணபதியே சங்கடங்கள் தீர்த்தருள்வாயே.

06 துவிஜ கணபதி
இரண்டு யானை முகங்களுடன் கையில் சுவடி, அட்சமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியவரும், வெண்ணிற மேனி கொண்டவருமான இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.


வேழ முகம் நாலுகொண்ட வேத விழுப் பொருளே 
புத்தகம் ருத்ராட்சம் தண்டம் கமண்டலம் தரித்தவனே
பவித்ரமாய் பலகாரங்கள் பலவும் படைத்தோம்
துவிஜ கணபதியே நவநிதியும் தந்தருள்வாயே.

07 சித்தி கணபதி
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தியவரும், ஆற்றலைக் குறிக்கும் சித்தி சமேதராக விளங்குபவரும், பசும்பொன் நிற மேனியரானவரும், பிங்கள கணபதி என்றும் பெயர் பெற்றவருமான இவரை வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.


ஸித்தி புத்தி விநாயகனே சித்தத்தினுள் உறைபவனே
ஸம்ருத்தி தேவியுடனுறை தத்துவ உட்பொருளே
ஸம்பங்கி பூ மணக்க சாம்பிராணி தூபமிட்டோம்
ஸித்தி கணபதியே புத்தி தந்து காத்தருள்வாயே.

08 உச்சிஷ்ட கணபதி
வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம்பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றை ஏந்தியவரும், கருநீலவண்ண மேனியுடையவருமான இவரை வழிபடுவதால் உயர் பதவிகளைப் பெறலாம்.


உச்சிப் பிள்ளையாரே உயிரினுள் உறைநாதமே
உவப்புடன் ஆறுகரத்தினில் வீணை குவளை மாதுளம் தரித்தவனே 
உப்புக் கொழுக்கட்டையுடன் உண்ண தீங்கனிகள் படைத்தோம்
உச்சிஷ்ட கணபதியே உயர்வான வாழ்வளிப்பாயே.

09 விக்னராஜ கணபதி
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தியவரும், தங்க நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவருமான இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.


வினாயகப் பெருமானே விமல விக்னேஸ்வரனே
வில்லுடன் பாணம் கோடரி சக்ரம் தரித்த பரம்பொருளே
விருந்தாக மோதகம் விளாம்பழம் படைத்தோம்
விக்ன கணபதியே வினையாவும் தீர்த்தருள்வாயே.

10 க்ஷிப்ர கணபதி
கற்பகக் கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவரும், ரத்தினங்கள் பதித்த கும்பத்தை தனது துதிக்கையில் கொண்டவரும், செம்பருத்தி மலர் போன்ற சிவந்த மேனியுடையவருமான இவர் சீக்கிரம் அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.


ஐந்து கரத்தோனே ஐம்புலன்கள் ஆள்பவனே
ஐந்தாவது கரத்தில் தங்கக்குடம் தரித்தவனே !
செம்பருத்தி மலருடன் செங்கமலமும் சூட்டினோம்
க்ஷிப்ர கணபதியே பத்திரமான வாழ்வளிப்பாயே.

11 ஹேரம்ப கணபதி
அபய, வரத ஹஸ்தங்களுடன் (கரங்கள்) பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பிலான உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்திய பத்து கைகளும் ஐந்து முகங்களும் கொண்டு, வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சிதருகிறார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகளில் புகழ்பெறுவார்கள்.


ஏகதந்த வினாயகனே ஏழ்பிறப்பிற்கும் ஆதாரமே
வரமுத்திரை அபய முத்திரை இருகையில் தரித்தவனே
எருக்கம் பூ மாலை சூட்டி எள் மோதகம் படைத்தோம்
ஹேரம்ப கணபதியே மனபாரங்கள் குறைப்பாயே.

12 லட்சுமி கணபதி
பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக் கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி, தன் இருபுறமும் இரு தேவியரை அணைத்துக்கொண்டு வெள்ளை மேனியராய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.


பேழை வயிறு பெருமானே வேழமுக வேந்தனே
லட்சுமி தேவியர் இருபுறமும் உறைய அருள்வோனே
லட்டுடன் பால் தேன் பழ பாயசம் படைத்தோம்
லட்சுமி கணபதியே அஷ்ட ஐஸ்வர்யம் அருள்வாயே.

13 மகா கணபதி
பிறைசூடி, மூன்று கண்கள் கொண்டு, தாமரை மலர் ஏந்தி, தன் சக்தி நாயகியராகிய வல்லபையை அணைத்த வண்ணம் காட்சிதருபவரும், கைகளில் மாதுளம் பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல் புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கலசத்தையும் ஏந்தியவரும், சிவப்பு நிற மேனியராய் விளங்குபவருமான இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.


மாயாப்பிறவி மயக்கம் அறுத்த மாமணியே
மாமலராளுடன் உறை மாதவன் மருகனே
மலர் மாலை சூட்டி மத்தளம் முழங்க வழிபட்டோம்
மஹா கணபதியே மங்களங்கள் சேர்ப்பாயே.

14 விஜய கணபதி
விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் கஜமுகாசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான். அவன்மீது பாய்ந்தேறி தன் வாகனமாக்கிக்கொண்ட இவர், செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின்கீழ் காட்சிதருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.


கரும்பு விரும்பு விநாயகனே கரிமுக கணபதியே
ஏறு மயிலோன் தமையனே ரத்னவர்ண நிறத்தோனே
விருப்புடனே பொறுப்பாக பூஜைகள் புரிந்தோம்
விஜய கணபதியே விண் எட்டும் புகழ் தருவாயே.

15 நிருத்த கணபதி
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடாரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்தி, மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி, ஒற்றைக் காலில் நிருத்த கணபதியாய் காட்சிதருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.


நவசக்தி விநாயகனே சிவசக்தி மைந்தனே
நர்த்தன தோற்றமுடன் பொன்னிறமாய் மிளிர்வோனே
நவமணிகள் மின்ன பட்டாடை சாற்றினோம்
நிருத்த கணபதியே நிம்மதி வாழ்வு அருள்வாயே.

16 ஊர்த்துவ கணபதி
பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடப்புறம் அணைத்துக்கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.


ஒங்காரரூபனே ஒளவைபாடிய அரும்பொருளே
ஒதும் வேதத்தின் உட்பொருள் ஆனோனே
ஊதா மலரான நீலோற்பலம் சாற்றினோம்
ஊர்த்துவ கணபதியே. ஊழ்வினைகள் தீர்த்தருள்வாயே.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்



|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

வறுமை நீங்கி வளமுடன் வாழ மஹா கணேசாஷ்டகம்


கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள், நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.


ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கணநாயகம்

மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம் வந்தே அஹம் கணநாயகம்

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநாயகம்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

கஜவக்த்ரம் ஸுரச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம் வந்தே அஹம் கணநாயகம்

ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்

கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ விநாயகர் காரிய சித்தி மாலை

காசிப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். எந்தப் பணியை  ஆரம்பித்தாலும் விநாயகரைத் தொழுதுவிட்டே ஆரம்பிப்பது ஆன்மிகர்களின் வழக்கம். எந்த விஷயத்தையும் எழுதுமுன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டு விட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். 


விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும் முறையாகத்  திட்டமிடவும் அனைவரிடமும் அன்பு செலுத்தவும் அனைவரது அன்பும் நம் மீது பரவவும் சுமுகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காசிப முனிவர். இந்த வழிபாடு முற்றிலும் தமிழிலேயே அமைந்தது. எளிமையானது. நேரடியானது. நாமே பொருள் புரிந்து கொள்ளக்கூடியது.  

பாடல் எண் : 01
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருளுரை:
எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.


பாடல் எண் : 02
உலக முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற் பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.


பாடல் எண் : 03
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.


பாடல் எண் : 04
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருளுரை:
எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.


பாடல் எண் : 05
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.


பாடல் எண் : 06
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருளுரை:
வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்றமற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்; அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.


பாடல் எண் : 07
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.


பாடல் எண் : 08
பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பொருளுரை: 
எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.


பாடல் எண் : 09 (நூற்பயன்)
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்திகளில் தோத்திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம் பெறும்எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

பொருளுரை:
இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றி பெறுவார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள். சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை போன்ற (எட்டு) அட்டமாசித்துளையும் பெறுவார்கள்.


பாடல் எண் : 10 (நூற்பயன்)
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்

பொருளுரை: 
தொடர்ந்து இரு மாதங்கள் நாள்தோறும் முறையாகப் பாராயணம் செய்தால் அரசர்களும் வசியம் ஆவார்கள். தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் நலம் போன்ற சகல செவங்களும் வந்துசேரும்.

உரை எழுதியவர் : திருப்பனந்தாள் புலவர் அய்யா க துரியானந்தம் அவர்கள்..

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

விநாயகர் அகவல் - ஔவையார் அருளிச் செய்தவை

சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரும், சிவபெருமானின் தோழராகவும் விளங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்று, "அயிராவணம்" என்னும் யானையை ஈசன் அனுப்பி வைத்தார். அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார். இதை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோழரான சேரமான் பெருமான், தானும் கயிலையை அடைய வேண்டும் என்று எண்ணினார். இதையடுத்து தனது குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, சுந்தரரின் அயிராவண யானையைச் சுற்றி வலம் வந்து தானும் கயிலாயம் புறப்பட்டார். இருவரும் வானில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கீழே பார்க்கையில், திருக்கோவிலூர் சிவதலத்தில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை, அவ்வையார் வழிபட்டு பூஜை செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சுந்தரரும், சேரமானும் "அவ்வையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?" எனக் கேட்டனர். திருக்கயிலாய ஈசனை தரிசிக்கும் வாய்ப்புக்காக பலரும் தவமாய் தவமிருக்கும் நிலையில், வாய்ப்பை தவற விட யாருக்குத்தான் மனம் வரும்? ஆனாலும் உடனடியாக யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை என்பதும் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.


அவ்வை பாட்டி "நானும் வருகிறேன்" என்று கூறிவிட்டு விநாயகர் பூஜையை பதற்றத்துடன் விரைவாக பண்ணி முடிக்கத் திட்டமிட்டு விரைவாக பூஜைகளை செய்தார். அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. அது வேறு யாருடையதும் அல்ல.. பெரிய யானை கணபதியே அசரீரியாக தன் பக்தையான அவ்வையிடம் பேசினார்.

"அவ்வையே! நீ எனது பூஜையை சற்று மெதுவாகச் செய். கவலை வேண்டாம். பூஜை முடிந்ததும் சுந்தரரும், சேரமானும் திருக்கயிலை மலை சென்றடைவதற்குள்ளாகவே, உன்னை அவ்விடம் கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்" என்று கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வையார், "சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட..." எனத் தொடங்கும் "விநாயகர் அகவல்" பாடி திருக்கோவிலூர் பெரிய யானை கணபதியை நிதானமாக பூஜித்தார்.

என்ன ஆச்சரியம்! அவ்வையார் "விநாயகர் அகவல்" பாடி முடித்ததும், அவர் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வை பாட்டியை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிற்பாடு தான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.

அவ்வையாரை இத்தல விநாயகர், விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், "பெரிய யானை கணபதி" என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தல ஈசன் வீரட்டேஸ்வரர். இவர் பைரவ சொரூபமெடுத்து அந்தகாசூரனை வதைத்த தலம் இதுவாகும். அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. ஈசன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். ஈசனின் உடனுறை சக்தியாக பெரியநாயகி அம்மன் அருள்புரிந்து வருகிறாள்.

கொன்றையும், வில்வமும் தல மரங்களாக உள்ளன. மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்த அருட்பதி இதுவாகும். ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது. ராஜராஜ சோழனின் சகோதரி, இந்த ஆலயத்திற்கு விளக்குகள் ஏற்றிட நிதி வழங்கினார் என கல்வெட்டு சான்று பகிர்கிறது. இத்தல தீர்த்தம் தென்பெண்ணை ஆகும். கபிலர் வழிபட்ட தலம் இது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் கபிலர் குகைக்கோவில் அமைந்துள்ளது.

இத்தல ஈசனும், அம்பாளும் மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கையை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண மற்றும் சுப காரியத் தடங்கல்கள் அகலும். வறுமை அகன்று வசந்தங்கள் ஓடிவரும். பிணி நீங்கி வளங்கள் நம்மை வந்து சேரும். தீவினைகள் அண்டாது. "துர்க்கா சப்த ஸ்லோகி" என்ற ஸ்தோத்திரத்தை ராகு கால வேளைகளில் படித்து வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம். பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோவில் இது என பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஆலயம். இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் பலவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிஷி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் பஞ்சபூத லிங்கங்கள், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், சந்திரசேகரர், லிங்கோத்பவர் ஆகிய மூர்த்தங்கள் அருள் நிறைந்தவையாகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று, இங்குள்ள பெரிய யானை கணபதி சன்னிதியில், அவ்வையார் பாடிய "விநாயகர் அகவல்" பாடி வழிபட்டால் வேண்டியவை அனைத்தும் நடைபெறும். திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் உள்ளது. பண்ருட்டி, கடலூர், விழுப்புரத்தில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

விநாயகர் அகவல்



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப 

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் 

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும் 

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் 

தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் 

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி 

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில் 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

"நாயேன் பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன், நீயே சரணம் நினதருளே சரணம் சரணம் விநாயகா"

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டியில் விநாயகர் சிவப்பு நிறத்தில் அருள்கிறார். ஸ்ரீ ஆதிசங்கரர் இத்தலத்தில் தான் தன் அற்புதமான ஸ்ரீ கணேச  பஞ்சரத்னம் எனும் துதியை அரங்கேற்றியருளினார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் எனும் சுலோகங்கள். இவற்றை தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்து வந்தால் நோயின்றி, குறையேதுமின்றி, நல்ல கல்வி, நன்மக்கட்பேறு, அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழலாம்.


சுலோகம் : 01
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்.

பொருளுரை: 
திருக்கரத்தில் மோதகத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டிருப்பவரும், தம்மைத் தியானிப்பவர்களுக்கு எப்பொழுதும் மோட்சத்தைக் கொடுப்பவரும், சந்திரனை சிரசில் அணிந்தவரும், தம்முடைய வரலாற்றைச் சங்கீர்த்தனம் செய்து கொண்டு ஆனந்தமாக இருக்கும் அடியார்களையெல்லாம் காப்பவரும், ஆதரவில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் தாமே ஆதரவாக இருந்து காப்பாற்றுபவரும், கஜாசுரனைக் கொன்றவரும், தம்மைப் போற்றும் பக்தர்களுடைய பாவங்களை அக்கணமே துவம்சம் செய்ய வல்லவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.


சுலோகம் : 02
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.

பொருளுரை: 
தம்மைப் பணியாதவர்களுக்கு அடிக்கடி பயத்தைக் கொடுத்து தண்டிப்பவரும், உதய காலத்து சூரியனைப்போல விளங்குபவரும், தம்மை வணங்குகின்ற அமரர்களின் சத்ருக்களான அசுரர்களை சம்ஹாரம் செய்பவரும், தம்மைப் பணிவோர்களின் துக்கத்தைப் போக்கிக் காத்திடும் ஆபத்பாந்தவரும், தேவர்களின் அதிபதியானவரும், பக்தர்களுக்குப் புதையல்போல் செல்வத்தைத் தந்தருளும் அதிதேவதையானவரும், யானைகளுக்கு அதிபதியானவரும், சண்டிகேசுவரர் முதலிய சிவகணத்தவர்களுக்குத் துணைவரானவரும், ஈசுவரனுக்கும் மேலானவரும், உலகிற்கு மூலப்பொருளான பரம் என்று சொல்லப்படும் மாயையைக் காட்டிலும் மேலானவருமான மகா கணபதியை இடையறாமல் ஆராதிக்கிறேன்.


சுலோகம் : 03
ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோத ரம்வரம் வரேபவக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதம் நமஸ்கரோமி பாஸ்வரம்.

பொருளுரை: 
பதினான்கு உலகங்களிலுமுள்ள பக்தர்களுக்குப் பேரானந்தத்தைக் கொடுப்பவரும், கஜாசுரனை சம்ஹாரம் செய்தவரும், சகல லோகங்களையும் வயிற்றுக்குள் வைத்து ரட்சிக்கும் பெருத்த வயிறுடன் தோற்றமளிப்பவரும், சிரேஷ்டமானவரும், ஐராவதத்தைப் போன்ற முகப்பொலிவு பெற்றவரும், அழிவற்றவரும், தம்மை வணங்குவோரின் பிழைகளைப் பொறுத்து அருள்புரிபவரும், அவர்களது மனதை நல்வழிப்படுத்தி அவர்களுக்குச் சந்தோஷத்தையும் நல்ல கீர்த்தியையும் அருளுபவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.


சுலோகம் : 04
அகிஞ்ச நார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் 
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதாந வாரணம் பஜே புராண வாரணம்.

பொருளுரை: 
தம்மைத் தியானிப்பவர்களின் வறுமை, துன்பம் போன்றவற்றை நாசம் செய்கிறவரும், வேத வாக்கியங்களால் போற்றப்படுபவரும், மகிமை பொருந்தியவரும், திரிபுர சம்ஹாரம் செய்தருளிய பரமேசுவரனுடைய மூத்த குமாரரும், தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் கர்வத்தை அடக்குபவரும், லோகங்களை நாசம் செய்கிற யமதர்மனுக்குப் பயத்தைக் கொடுப்பவரும், அர்ஜுனன் போன்ற வில்லில் வல்லவர்களான வீரர்களாலும் முதலில் வணங்கிப் போற்றப்படுபவரும், கபோலத்தில் ஏற்படும் மத ஜலத்தைப் பெருகவிடுபவரும், புராதன கஜ சொரூபியுமான மகா கணபதியைத் தியானிக்கிறேன்.


சுலோகம் : 05
நிதாந்தகாந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்தஹீந மந்தராய க்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்த மேகதம் விசிந்தயாமி ஸந்தகம்.

பொருளுரை: 
மிகவும் அழகான பல்வரிசைகளின் பேரொளியுடன் கூடியவரும், யமனுக்கும் மேலான பரமேசுவரருடைய குமாரரும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தை உடையவரும், அழிவற்றவரும், பக்தர்களின் சகல விக்னங்களையும் சம்ஹரிப்பவரும், தவசியர்களின் மனத்தில் சர்வசதா காலமும் வாசம் செய்பவரும், யானை முகத்துடன் இருந்தாலும் ஒரே தந்தத்தைப் பெற்றவருமான மகா கணபதியை எந்நேரமும் தியானிக்கிறேன்.


சுலோகம் : 06 (பலன்)
மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்
அரோகதாம தோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயை ரஷ்டபூதி மம்யுபைதி ஸோசிராத்.

பொருளுரை: 
பஞ்சரத்தினம் என்னும் இந்த மகா கணபதி ஸ்தோத்திரத்தை எவர் ஒருவர் அனுதினமும் வைகறைப் பொழுதில் மகா கணபதியைத் தியானித்த வண்ணம் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் வெகுவிரைவில் சகல வியாதிகளிலிருந்தும் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல இசை ஞானமும், பாடும் திறனும் பெறுகிறார்கள். இவர்கள் உத்தம புத்திரர்களையும், தீர்க்கமான ஆயுளையும், அஷ்ட ஐஸ்வரியங்களையும் வாழ்வில் அடைவர்.

நன்றி :  டி பூபதி ராவ்

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||