செவ்வாய், 18 செப்டம்பர், 2018

எண்ணிரு கணபதி துதி

பிள்ளையாரின் பதினாறு வடிவங்கள் மிகச் சிறப்பானவை என்கின்றன புராணங்கள். அந்த எண்ணிரு கணபதிகளையும் போற்றிடும் இந்தத் துதியை சதுர்த்தியன்று அவசியம் சொல்லுங்கள். நீங்கள் எண்ணிய எல்லாம் ஈடேறும்.

01 பால கணபதி 
மா, பலா, வாழை ஆகிய மூவகைப் பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தியவரும், சூரியோதயகால செவ்வண்ண மேனியுடன் பிரகாசிப்பவரும், பாலகனைப் போன்ற உருவம் உள்ளவருமான இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.


வேழ முகத்து விநாயகனே பால வடிவப் பரம்பொருளே
பலாவுடன் முக்கனியும் கரும்பும் தரித்த மெய்ப்பொருளே
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் படைத்தோம்
பால கணபதியே பல வளங்கள் தந்தருள்வாயே.

02 தருண கணபதி
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றைத் தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டு கைகளில் ஏந்தியவரும், சூரியோதயகால ஆகாயத்தின் செந்நிற மேனி உடையவரும், இளைஞனாகக் காட்சிதருபவருமான இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.


தருண சூரியப் பிரகாசனே தங்க வடிவானவனே 
ஒரு கொம்பு நெற்கதிர் பாசக்கயிறு கையில் தரித்தோனே
பருப்புப் பூரண மோதகம் முக்கனி படைத்தோம்
தருண கணபதியே தக்க நிதி தந்தருள்வாயே.

03 பக்த கணபதி
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினால் செய்த பாயசம் நிரம்பிய சிறு குடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தியவரும், நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடையவருமான இவரை வழிபடுவதால் இறைவழிபாடு உபாசனை நன்கு அமையும்.


பக்த ஜன ப்ரியனே பார்வதி புத்ரனே
பாயசம் நிறை கலயத்தை கரந்தனில் கொண்டோனே
பாயசம் மட்டுமின்றி பலவகை மோதகம் படைத்தோம்
பக்த கணபதியே... பக்க பலமாய் என்றுமிருப்பாயே.

04 வீர கணபதி
தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களை ஏந்தியவரும்; ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்குபவருமான இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.


மூல முதற்பொருளே மூஷிக வாகனனே
வேல் வில் சக்ராயுதமென பதினாறு கரத்தோனே 
பொரி கடலை அப்பம் அவல் பாயசம் படைத்தோம்
வீர கணபதியே வீரம் என் நெஞ்சில் விதைத்தருள்வாயே.

05 சக்தி கணபதி
பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சி அளிப்பவரும்; பாசம், அங்குசம் ஏந்தி பயத்தை நீக்குபவரும்; செந்தூர வண்ணம் கொண்டவருமான இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.


சக்தியைத் தழுவிய வித்தகனே சங்கரன் மகனே
சிந்தூர வர்ண சிங்கார விநாயகனே
செந்தாமரைப் பூ தங்க அரளி அருகம்புல் சாற்றினோம்
சக்தி கணபதியே சங்கடங்கள் தீர்த்தருள்வாயே.

06 துவிஜ கணபதி
இரண்டு யானை முகங்களுடன் கையில் சுவடி, அட்சமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியவரும், வெண்ணிற மேனி கொண்டவருமான இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.


வேழ முகம் நாலுகொண்ட வேத விழுப் பொருளே 
புத்தகம் ருத்ராட்சம் தண்டம் கமண்டலம் தரித்தவனே
பவித்ரமாய் பலகாரங்கள் பலவும் படைத்தோம்
துவிஜ கணபதியே நவநிதியும் தந்தருள்வாயே.

07 சித்தி கணபதி
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தியவரும், ஆற்றலைக் குறிக்கும் சித்தி சமேதராக விளங்குபவரும், பசும்பொன் நிற மேனியரானவரும், பிங்கள கணபதி என்றும் பெயர் பெற்றவருமான இவரை வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.


ஸித்தி புத்தி விநாயகனே சித்தத்தினுள் உறைபவனே
ஸம்ருத்தி தேவியுடனுறை தத்துவ உட்பொருளே
ஸம்பங்கி பூ மணக்க சாம்பிராணி தூபமிட்டோம்
ஸித்தி கணபதியே புத்தி தந்து காத்தருள்வாயே.

08 உச்சிஷ்ட கணபதி
வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம்பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றை ஏந்தியவரும், கருநீலவண்ண மேனியுடையவருமான இவரை வழிபடுவதால் உயர் பதவிகளைப் பெறலாம்.


உச்சிப் பிள்ளையாரே உயிரினுள் உறைநாதமே
உவப்புடன் ஆறுகரத்தினில் வீணை குவளை மாதுளம் தரித்தவனே 
உப்புக் கொழுக்கட்டையுடன் உண்ண தீங்கனிகள் படைத்தோம்
உச்சிஷ்ட கணபதியே உயர்வான வாழ்வளிப்பாயே.

09 விக்னராஜ கணபதி
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தியவரும், தங்க நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவருமான இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.


வினாயகப் பெருமானே விமல விக்னேஸ்வரனே
வில்லுடன் பாணம் கோடரி சக்ரம் தரித்த பரம்பொருளே
விருந்தாக மோதகம் விளாம்பழம் படைத்தோம்
விக்ன கணபதியே வினையாவும் தீர்த்தருள்வாயே.

10 க்ஷிப்ர கணபதி
கற்பகக் கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவரும், ரத்தினங்கள் பதித்த கும்பத்தை தனது துதிக்கையில் கொண்டவரும், செம்பருத்தி மலர் போன்ற சிவந்த மேனியுடையவருமான இவர் சீக்கிரம் அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.


ஐந்து கரத்தோனே ஐம்புலன்கள் ஆள்பவனே
ஐந்தாவது கரத்தில் தங்கக்குடம் தரித்தவனே !
செம்பருத்தி மலருடன் செங்கமலமும் சூட்டினோம்
க்ஷிப்ர கணபதியே பத்திரமான வாழ்வளிப்பாயே.

11 ஹேரம்ப கணபதி
அபய, வரத ஹஸ்தங்களுடன் (கரங்கள்) பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பிலான உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்திய பத்து கைகளும் ஐந்து முகங்களும் கொண்டு, வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சிதருகிறார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகளில் புகழ்பெறுவார்கள்.


ஏகதந்த வினாயகனே ஏழ்பிறப்பிற்கும் ஆதாரமே
வரமுத்திரை அபய முத்திரை இருகையில் தரித்தவனே
எருக்கம் பூ மாலை சூட்டி எள் மோதகம் படைத்தோம்
ஹேரம்ப கணபதியே மனபாரங்கள் குறைப்பாயே.

12 லட்சுமி கணபதி
பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக் கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி, தன் இருபுறமும் இரு தேவியரை அணைத்துக்கொண்டு வெள்ளை மேனியராய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.


பேழை வயிறு பெருமானே வேழமுக வேந்தனே
லட்சுமி தேவியர் இருபுறமும் உறைய அருள்வோனே
லட்டுடன் பால் தேன் பழ பாயசம் படைத்தோம்
லட்சுமி கணபதியே அஷ்ட ஐஸ்வர்யம் அருள்வாயே.

13 மகா கணபதி
பிறைசூடி, மூன்று கண்கள் கொண்டு, தாமரை மலர் ஏந்தி, தன் சக்தி நாயகியராகிய வல்லபையை அணைத்த வண்ணம் காட்சிதருபவரும், கைகளில் மாதுளம் பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல் புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கலசத்தையும் ஏந்தியவரும், சிவப்பு நிற மேனியராய் விளங்குபவருமான இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.


மாயாப்பிறவி மயக்கம் அறுத்த மாமணியே
மாமலராளுடன் உறை மாதவன் மருகனே
மலர் மாலை சூட்டி மத்தளம் முழங்க வழிபட்டோம்
மஹா கணபதியே மங்களங்கள் சேர்ப்பாயே.

14 விஜய கணபதி
விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் கஜமுகாசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான். அவன்மீது பாய்ந்தேறி தன் வாகனமாக்கிக்கொண்ட இவர், செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின்கீழ் காட்சிதருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.


கரும்பு விரும்பு விநாயகனே கரிமுக கணபதியே
ஏறு மயிலோன் தமையனே ரத்னவர்ண நிறத்தோனே
விருப்புடனே பொறுப்பாக பூஜைகள் புரிந்தோம்
விஜய கணபதியே விண் எட்டும் புகழ் தருவாயே.

15 நிருத்த கணபதி
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடாரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்தி, மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி, ஒற்றைக் காலில் நிருத்த கணபதியாய் காட்சிதருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.


நவசக்தி விநாயகனே சிவசக்தி மைந்தனே
நர்த்தன தோற்றமுடன் பொன்னிறமாய் மிளிர்வோனே
நவமணிகள் மின்ன பட்டாடை சாற்றினோம்
நிருத்த கணபதியே நிம்மதி வாழ்வு அருள்வாயே.

16 ஊர்த்துவ கணபதி
பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடப்புறம் அணைத்துக்கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.


ஒங்காரரூபனே ஒளவைபாடிய அரும்பொருளே
ஒதும் வேதத்தின் உட்பொருள் ஆனோனே
ஊதா மலரான நீலோற்பலம் சாற்றினோம்
ஊர்த்துவ கணபதியே. ஊழ்வினைகள் தீர்த்தருள்வாயே.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்



|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக