மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி
பாடல் எண் : 10
புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கி
திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பு எய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.
பாடல் விளக்கம்:
அரிய அமுதமே, திருமாலும் பிரம்மனும் மண்ணில் பிறக்க விரும்புகிறார்கள். இந்தப் பூமியில் தான் சிவபெருமான் தன் அருளை வழங்குகிறார், அங்கே சென்று நாம் பிறக்காமல், இங்கே விண்ணுலகில் வீணாக நாளைக் கழிக்கிறோமே என்று எண்ணுகிறார்கள். திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, அவர்கள் அப்படி இங்கே பிறக்க விரும்பும்படி உன் விரிவான மெய்க்கருணையுடன் இங்கே வந்து இந்தப் பூமியைப் புனிதமாக்கியவனே, எங்களை ஆட்கொள்ள வல்லவனே, பள்ளி எழுந்தருள்வாய்.
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
இந்தத் திருப்பாவையைச் சொன்னால் என்ன பயன் ஏற்படுகிறது என்பதைக் கூறுகிறது இந்தப் பாசுரம். கடலுக்குள் இருக்கும் அமுதத்தை எடுத்து, பகவான் தேவர்களுக்குக் கொடுத்தான். இப்படிப்பட்ட மாதவனை சந்திரன் போன்ற திருமுகத்தைக் கொண்டவர்களும், சிறந்த ஆபரணங்களை அணிந்த கோபியர்கள் அடைந்து, அவனைப் போற்றிப் புகழ்ந்து பறை என்ற ஒலிக்கருவியையும் கைங்கர்யத்தையும் கேட்டுப் பெற்றார்கள். அதை எப்படிப் பெற்றார்கள் என்பதை ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த பட்டர்பிரான் என்ற பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள் அருளிச்செய்த சங்கத் தமிழ் மாலையாகிய திருப்பாவை முப்பது பாசுரத்தையும், ஒரு பாசுரத்தையும் விடாமல் பக்தியோடு கூறுகிறார்கள். சதுர்ப்புஜனாயும் தாமரைக் கண்ணனாயும் இருக்கும் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று இப்பாசுரம் கூறுகிறது.
கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்கோதை மலர்ப்பதங்கள் வாழியே
மாதங்களில் சிறந்த மார்கழியில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை முப்பது பாடல்களையும் வந்து வாசித்து இன்புற்ற அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது, நிறைகள் அனைத்தும் இறைவனது திருவடிகளுக்கு சமர்ப்பணம்.
குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||