மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி
பாடல் எண் : 06
பப்பற வீட்டு இருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல்சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பாடல் விளக்கம்:
உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள்செய்கின்ற எம்பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 26
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற்கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குரு தட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும் போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
மாலே! மணிவண்ணா! நாங்கள் மார்கழி நீராட்டம் என்ற நோன்பை அனுஷ்டிக்கிறோம். இது சாஸ்திரங்களில் சொல்லப்படும் அனுஷ்டானமா என்று கேட்காதே, இது பெரியோர்கள் செய்து வரும் ஒரு செயல். பெரியோர்கள் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று நீ கீதையில் சொன்னாய். ஆகையால் நாங்களும் செய்கிறோம். இதற்கு வேண்டிய சில பொருள்களை உன்னிடம் வேண்டுகிறோம். திருவாய்ப்பாடி முழுவதும் நடுங்கி உயர்விக்கும்படி உன் கையில் பாலின் நிறத்தைப்போல் இருக்கும் பாஞ்சசன்னியத்தைப் போன்ற சங்குகள், எல்லா இடங்களிலும் கேட்கும்படியாக ஓசை ஏற்படுத்தும் மிகப்பெரிய பறை, உனக்கு பல்லாண்டு பாடுகிறவர்கள் இருப்பதுபோல், எங்கள் கோஷ்டிக்கும் பல்லாண்டு பாடுவோர், அழகிய விளக்கு, ஒரு கொடி, மேலே பனிச்சாரல் விழாதபடி ஒரு மேற்கட்டு ஆகியவையும், இவற்றைப் போன்று பல பொருள்களும் எங்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் வயிற்றில் அடக்கிக்கொண்டு ஓர் ஆலந்தளிர் மேல் குழந்தையாகப் படுத்துக்கொண்டு காப்பாற்றினாயே! உன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்கிறார்கள்.
குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக