புதன், 3 ஜனவரி, 2018

மார்கழி உற்சவம் 29

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி


பாடல் எண் : 09
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 
விழுப் பொருளே உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே 
வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம்
கண் அகத்தே நின்று களிதரு தேனே 
கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார்
எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. 

பாடல் விளக்கம்‬:
விண்ணில் வாழும் தேவர்களும், அணுகவும் முடியாத, மேலான பொருளாயுள்ளவனே! உன்னுடைய தொண்டினைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே! பரம்பரை அடியாராகிய எங்களுடைய கண்ணில் களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே! கரும்பு போன்றவனே! அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் இருப்பவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 29
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன் போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர் குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களை எல்லாம் நீயே அழித்து விடு.

விடியற்காலையில் எல்லோரும் வந்து, உன்னை சேவித்து, உன் திருவடித் தாமரைகளை போற்றிக்கொண்டு எங்களுக்கு வேண்டியதைக் கூறுகிறோம். நீ அதற்கு செவிசாய்க்க வேண்டும். மாடு கன்றுகளை மேய்த்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு உண்டு பிழைக்கிறோம். அப்படி வாழும் எங்கள் குலத்தைப் பார்த்தும், இந்தக் குலத்தில் வந்து பிறந்தாய். ஆதலால் நாங்கள் செய்யும் குற்றேவல்களை நீ ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடாது. நாங்கள் பறையைக் கேட்டோம் என்பதற்காக, பெரிதும் ஒலிக்கின்ற பறையைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அறிவென்றுமில்லாத எங்கள் குலத்தில் பிறந்ததால், நாங்கள் கேட்கும் பறை என்ற சொல் உனக்குத் தெரியாமல் போயிற்றா? "கோவிந்தா" எத்தனை பிறவி எடுத்தாலும், ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றார் உறவினராகவே ஆகவேண்டும். உனக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு நேரத்தில் எங்களுடைய மனம் வேறு வழியில் சென்றால், செல்லாமல் தடுத்து திருப்பி உன் கைங்கர்யத்திலே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கோபியர்கள் பல பாடல்களில் கேட்டுக்கொள்ள வந்த "பறை" என்ற சொல்லின் பொருளை, அந்தரங்கக் கைங்கர்யம் என்று வெளியிட்டார்கள்.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக