புதன், 3 ஜனவரி, 2018

மார்கழி உற்சவம் 23

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி



பாடல் எண் : 03
கூவின பூங்குயில் கூவின கோழி 
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்.
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. 

பாடல் விளக்கம்‬:
பொழுது விடிந்துவிட்டது. பூங்குயில்கள் கூவுகின்றன. கோழிகள் கூவுகின்றன. மற்ற பறவையினங்களும் சத்தமிடுகின்றன. சங்குகள் முழங்குகின்றன.  விண்மீன்கள் மறைந்தன. அதிகாலை நேரத்து ஒளி எங்கும் பரவுகிறது. திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எம்பெருமானே, நீ எங்களுக்கு அருள் செய்வாய். விருப்பத்தோடு எங்களுக்கு உனது சிறந்த, நல்ல, கழல்கள் செறிந்த திருவடிகளைக் காட்டுவாய். எல்லாரும் அறிந்துகொள்ள இயலாதபடி அரியவனாகத் திகழ்கிறவனே, எங்களுக்கு எளிதில் கிடைக்கிறவனாகக் கருணை பொழிகிறவனே, பள்ளி எழுந்தருள்வாய். இத்தகைய எம்பெருமானைத் தரிசிக்கத்  திருப்பெருந்துறைக்கு வந்திருக்கும் தொண்டர் கூட்டத்தையும் அவர்களுடைய பரவசத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார் மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 23 
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்ப் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
மழைக் காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள்செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண்கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

கண்ணன் கோபியர்களை இன்னமும் உங்களுக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, உன்னுடைய நடையழகையும், வீற்றிருந்த திருக்கோலத்தையும் சேவிக்க வேண்டும். பழைய காலத்தில், மலைக்குகையில் ஓர் அசேதனப் பொருள்போல் ஒன்றும் அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் சீரிய சிங்கம், மழைக்காலம் முடிந்தவுடன், அறிவு பெற்று, கோபத்துடன் கண்ணைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்து, தன்னுடைய உடம்பில் படிந்திருக்கும் வேரிமயிர்கள் வாசனையைக் காட்டிக்கொண்டு எழுந்திருந்து, கால்களை முன்னும் பின்னும் நீட்டி மடக்கி, கர்ஜித்து வெளியில் வருவதுபோல், நீயும் சயன அறையிலிருந்து புறப்பட்டு உனக்குரிய சிங்காசனத்தில் அமர்ந்து கொள்ளவேண்டும். அப்போது, எங்களது தேவையைக் கூறுகிறோம். சொல்ல முடியாத குறைகளை நீயாகவே ஆராய்ந்து அருளவேண்டும் என்று வேண்டுகிறார்கள். கண்ணனுடைய நின்ற திருக்கோலத்தையும், நடையழகையும் காண்கிறார்கள்.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக