மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி
பாடல் எண் : 05
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பாடல் விளக்கம்:
குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற எம்பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், யாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச் சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் "தூண்" என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்தவரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
மழைக்காலமாகிய ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கம்சனுடைய சிறைச்சாலையில் தேவகிக்கு மகனாகப் பிறந்து, அந்த இரவில் ஒருவருக்கும் தெரியாமல் வசுதேவரால் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீ நந்தகோபரின் வீட்டில், யசோதைக்கு மகனாய் வளர்ந்தாய். உனக்குத் தாய், தகப்பனார் என்று ஒருவரும் இல்லாத போதும், அவதாரத்துக்கு தேவகியை தாயாகவும், வசுதேவரை தகப்பனாகவும் கொண்டாய். கம்சனுக்குத் தெரியாமல் இவை நடந்தாலும், உன்னுடைய பிறப்பை அவனால் பொறுக்க முடியவில்லை. உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். பல அசுரர்களை ஏவினான். ஆனால் அவனது எண்ணம் நிறைவேறவில்லை. அவனுடைய வயிற்றில் எப்போதும் நெருப்பாக இருந்தாய். எங்கள் மீது அன்பு கொண்ட பெருமானே! நீ அந்தப் பறையைக் கொடுத்தால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்கிறார்கள்.
குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக