ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டியில் விநாயகர் சிவப்பு நிறத்தில் அருள்கிறார். ஸ்ரீ ஆதிசங்கரர் இத்தலத்தில் தான் தன் அற்புதமான ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் எனும் துதியை அரங்கேற்றியருளினார்.
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் எனும் சுலோகங்கள். இவற்றை தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்து வந்தால் நோயின்றி, குறையேதுமின்றி, நல்ல கல்வி, நன்மக்கட்பேறு, அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
சுலோகம் : 01
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்.
பொருளுரை:
திருக்கரத்தில் மோதகத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டிருப்பவரும், தம்மைத் தியானிப்பவர்களுக்கு எப்பொழுதும் மோட்சத்தைக் கொடுப்பவரும், சந்திரனை சிரசில் அணிந்தவரும், தம்முடைய வரலாற்றைச் சங்கீர்த்தனம் செய்து கொண்டு ஆனந்தமாக இருக்கும் அடியார்களையெல்லாம் காப்பவரும், ஆதரவில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் தாமே ஆதரவாக இருந்து காப்பாற்றுபவரும், கஜாசுரனைக் கொன்றவரும், தம்மைப் போற்றும் பக்தர்களுடைய பாவங்களை அக்கணமே துவம்சம் செய்ய வல்லவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.
சுலோகம் : 02
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.
பொருளுரை:
தம்மைப் பணியாதவர்களுக்கு அடிக்கடி பயத்தைக் கொடுத்து தண்டிப்பவரும், உதய காலத்து சூரியனைப்போல விளங்குபவரும், தம்மை வணங்குகின்ற அமரர்களின் சத்ருக்களான அசுரர்களை சம்ஹாரம் செய்பவரும், தம்மைப் பணிவோர்களின் துக்கத்தைப் போக்கிக் காத்திடும் ஆபத்பாந்தவரும், தேவர்களின் அதிபதியானவரும், பக்தர்களுக்குப் புதையல்போல் செல்வத்தைத் தந்தருளும் அதிதேவதையானவரும், யானைகளுக்கு அதிபதியானவரும், சண்டிகேசுவரர் முதலிய சிவகணத்தவர்களுக்குத் துணைவரானவரும், ஈசுவரனுக்கும் மேலானவரும், உலகிற்கு மூலப்பொருளான பரம் என்று சொல்லப்படும் மாயையைக் காட்டிலும் மேலானவருமான மகா கணபதியை இடையறாமல் ஆராதிக்கிறேன்.
சுலோகம் : 03
ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோத ரம்வரம் வரேபவக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதம் நமஸ்கரோமி பாஸ்வரம்.
பொருளுரை:
பதினான்கு உலகங்களிலுமுள்ள பக்தர்களுக்குப் பேரானந்தத்தைக் கொடுப்பவரும், கஜாசுரனை சம்ஹாரம் செய்தவரும், சகல லோகங்களையும் வயிற்றுக்குள் வைத்து ரட்சிக்கும் பெருத்த வயிறுடன் தோற்றமளிப்பவரும், சிரேஷ்டமானவரும், ஐராவதத்தைப் போன்ற முகப்பொலிவு பெற்றவரும், அழிவற்றவரும், தம்மை வணங்குவோரின் பிழைகளைப் பொறுத்து அருள்புரிபவரும், அவர்களது மனதை நல்வழிப்படுத்தி அவர்களுக்குச் சந்தோஷத்தையும் நல்ல கீர்த்தியையும் அருளுபவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.
சுலோகம் : 04
அகிஞ்ச நார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதாந வாரணம் பஜே புராண வாரணம்.
பொருளுரை:
தம்மைத் தியானிப்பவர்களின் வறுமை, துன்பம் போன்றவற்றை நாசம் செய்கிறவரும், வேத வாக்கியங்களால் போற்றப்படுபவரும், மகிமை பொருந்தியவரும், திரிபுர சம்ஹாரம் செய்தருளிய பரமேசுவரனுடைய மூத்த குமாரரும், தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் கர்வத்தை அடக்குபவரும், லோகங்களை நாசம் செய்கிற யமதர்மனுக்குப் பயத்தைக் கொடுப்பவரும், அர்ஜுனன் போன்ற வில்லில் வல்லவர்களான வீரர்களாலும் முதலில் வணங்கிப் போற்றப்படுபவரும், கபோலத்தில் ஏற்படும் மத ஜலத்தைப் பெருகவிடுபவரும், புராதன கஜ சொரூபியுமான மகா கணபதியைத் தியானிக்கிறேன்.
சுலோகம் : 05
நிதாந்தகாந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்தஹீந மந்தராய க்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்த மேகதம் விசிந்தயாமி ஸந்தகம்.
பொருளுரை:
மிகவும் அழகான பல்வரிசைகளின் பேரொளியுடன் கூடியவரும், யமனுக்கும் மேலான பரமேசுவரருடைய குமாரரும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தை உடையவரும், அழிவற்றவரும், பக்தர்களின் சகல விக்னங்களையும் சம்ஹரிப்பவரும், தவசியர்களின் மனத்தில் சர்வசதா காலமும் வாசம் செய்பவரும், யானை முகத்துடன் இருந்தாலும் ஒரே தந்தத்தைப் பெற்றவருமான மகா கணபதியை எந்நேரமும் தியானிக்கிறேன்.
சுலோகம் : 06 (பலன்)
மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்
அரோகதாம தோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயை ரஷ்டபூதி மம்யுபைதி ஸோசிராத்.
பொருளுரை:
பஞ்சரத்தினம் என்னும் இந்த மகா கணபதி ஸ்தோத்திரத்தை எவர் ஒருவர் அனுதினமும் வைகறைப் பொழுதில் மகா கணபதியைத் தியானித்த வண்ணம் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் வெகுவிரைவில் சகல வியாதிகளிலிருந்தும் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல இசை ஞானமும், பாடும் திறனும் பெறுகிறார்கள். இவர்கள் உத்தம புத்திரர்களையும், தீர்க்கமான ஆயுளையும், அஷ்ட ஐஸ்வரியங்களையும் வாழ்வில் அடைவர்.
நன்றி : டி பூபதி ராவ்
தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக