செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சந்திர கிரகணம்

சந்திர கிரகணத்தைப் புண்ணிய காலமாகக் கொண்டாடச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். முறையாகத் தனது கிரணத்தை (கதிர்களை) வாரி இறைக்கும் சந்திரனுக்கு, மறைவு ஏற்படுகிறது. அவனது கடமைக்கு இடையூறு. கண்ணில் திமிரம் (சதைப் படலம்) மறைப்பதால், பார்வை தடைப்படும். 


வந்து கொண்டிருந்த கிரணம் திடீரென்று நின்று விடுவதால், அங்கு அசாதாரணமான சூழல் உருவாகும். அதன் விளைவு விபரீதமாகவும் மாறலாம். நல்ல கோடையில் திடீர் மழையும், நல்ல மழைக் காலத்தில் திடீர் வெப்பமும், எதிர் விளைவுக்குக் காரணமாகலாம். அந்த வேளையில், மற்ற செயல்பாடுகளிலிருந்து விடுபட்டு மனத்தை ஆன்மிக வழியில் திருப்பி விட்டால், எந்த இடையூறும் நம்மை பாதிக்காது.

"மனதுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் உண்டு" என்று வேதம் கூறும். "விராட புருஷனின் மனதிலிருந்து சந்திரன் தோன்றினான்" என்ற தகவல் வேதத்தில் இருக்கிறது (சந்திரமா மனஸோ ஜாத:). ஜோதிட நூல்களும், மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றன.

சந்திரன் தனது கலைகளை இழந்து சூரியனோடு சேர்ந்திருக்கும் வேளையில் அதாவது அமாவாசை காலத்தில் மனநோய் வலுப்பெறுவது கண்கூடு. தர்ச (அமாவாசை) காலத்தில் ஆன்மிக விஷயங்களைச் செயல்படுத்தும்படி தர்ம சாஸ்திரம் வற்புறுத்தும். அமாவாசை தர்ப்பணமும் அதில் அடங்கும். 

தர்சத்தையும் பௌர்ணமியையும் வேள்விக் காலமாக வேதம் சொல்லும். இரு கண்கள் போல் திகழும் சூரிய - சந்திரர்களது செயல்பாடுகளுக்கு ஏற்படும் தடங்கல், சூழ்நிலையை மாற்றுவதால் அந்த வேளையில் நமது பாதுகாப்புக்கு ஆன்மிகச் செயல்பாடு உகந்தது என்பது தர்ம சாஸ்திரத்தின் அறிவுரை. 

முன்னோரை வழிபடுதல், மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருத்தல், உயர்ந்த மந்திரங்களை மனதில் அசை போடுதல். "நமசிவாய" என்பதும் "நாராயணாய" என்பதும் வேத மந்திரங்கள். அதை மனனம் செய்தல், ஏழை எளிய மக்களுக்குக் கொடை அளித்தல் போன்றவற்றில் மனம் ஈடுபடும் போது இடையூறிலிருந்து மனம் வெளி வந்து விடும். புண்ணியமும் உண்டு.

கிரகணத்தை "அலப்ய யோகம்" அதாவது நல்ல காரியங்களைச் செயல்படுத்த மிக அரிய சந்தர்ப்பம் என்று தர்ம சாஸ்திரம் குறிப்பிடும். "எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. தீட்டுப் பட்டிருக்கிறது. என்னால் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட முடியாது!" என்று எண்ண வேண்டாம். அவர்களும் இதை நடைமுறைப் படுத்தலாம் என்று விதிவிலக்கு அளிக்கிறது தர்ம சாஸ்திரம். 

கிரகண காலம் போனால் வராது. இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தக் காலத்தில் முன்னோரது தர்ப்பணத்தைச் செயல்படுத்த அனுமதிக்கிறது தர்ம சாஸ்திரம். குளிக்கா விட்டாலும் காலைக் கடனை காலத்தில் செய்ய நிர்ப்பந்திப்பது போல் இதையும் விடாமல் காலத்திலேயே செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறது. 

சாதாரண வேளையில் செய்யும் கொடைகள் குறிப்பிட்ட பலனை மட்டும் அளிக்கும். ஆனால், கிரகண காலத்தில் செய்யும் கொடை ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும். தான - தர்மங்களுக்கு உகந்த வேளையாக அந்த நேரத்தைப் பார்க்கிறது தர்ம சாஸ்திரம். சந்திரன் பூமியில் நுழைகிறான் (பூச்சாயாம் ஸ்வக்ரஹணே ப்ரவிசதீந்து:) என்று ஜோதிடம் கூறும். 

பூமி, சந்திரனை மறைத்து விடுகிறது என்று பொருள். ராகு, சந்திரனை மறைக்கிறான் அல்லது விழுங்குகிறான் என்று புராணம் கூறும். எது எப்படி இருந்தாலும் மறைவது கண்கூடு. மறைவு அவர்களுக்கும், நமக்கும் இடையூறு. அது விலக நமது செயல்பாடுகள் திருப்பி விடப்பட வேண்டும்.

உடல் தூய்மைக்குக் கிரகணம் துவங்கும் வேளையில் குளிக்க வேண்டும். உள்ளத் தூய்மைக்கு ஆன்மிக விஷயங்களில் மனதை நுழைக்க வேண்டும். கிரகணம் முடிவுற்ற பிறகும் சிறப்பு நீராடல் தேவை. அப்போது தான் நமது கடமை முழுமை பெறுகிறது. சிறுவர் முதல் முதியோர் வரை கிரகண காலத்தைக் கொண்டாடலாம். உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் நீராடுவது சிறப்பானது. குழந்தைகள், உடல் நலம் குன்றியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இதில் விதிவிலக்கு உண்டு.

மப்பும் மந்தாரமும் இருக்கும் சூழல், நமது வயிற்றில் இருக்கும் உணவு செரிப்பதைத் தாமதப்படுத்தும். அந்த வேளையில் தேவையான ஆதவனின் கிரணங்கள் பரவாததால், வயிற்றில் இருக்கும் பித்த நீர் சுணக்கமுற்று, செயல்படுவது தடைப்படும் என்று ஆயுர்வேதம் கூறும். 

நீருண்ட மேகங்கள் அண்டை வெளியில் அப்பியிருக்கும் வேளையில், பேதிக்கு மருந்து கொடுக்கக் கூடாது என்று சொல்லும் ஆயுர்வேதம். "கிரகணத்தின் தாக்கம், இயல்பான உடல் செயல்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு. எனவே, அந்த வேளையில் உணவைத் தவிர்க்கும்படி வற்புறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.

கிரகண வேளையில் நாம் ஈடுபடும் ஆன்மிக அலுவல்களுக்கு குந்தகம் விளையாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கிரகணம் ஆரம்பமாவதற்கு சில மணிகள் முன்பே உணவை முடித்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். உணவு நிரம்பியிருந்தால் சிறுநீர் கழித்தல், சோம்பல், தூக்கம், சுணக்கம் போன்றவை நம்மை அலைக்கழிக்கும். அவற்றைத் தவிர்க்க உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று எண்ணுகிறது தர்ம சாஸ்திரம்.

தற்கால மருத்துவர்கள், நம் உடல் நலத்தைப் பேணிக் காக்க தியானம் செய்யவும், யோகக் கலையில் ஈடுபடவும், சூரிய நமஸ்காரம் செய்யவும், உணவுக் கட்டுப்பாடு வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள். அதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். நடைபயணமாக ஆலயம் செல்ல வேண்டும், ஆலயத்தை வலம் வர வேண்டும் என்ற ஆன்மிக அறிவுரையை அலட்சியம் செய்தவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி தற்போது இரண்டு கி.மீ. தூரம் காலையிலும், மாலையிலும் நடை பயில்கிறார்கள்.

நம் முன்னோர் தேவையில்லாத ஒன்றை அறிமுகம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் ஏற்பட வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள்புரிய வேண்டும். ஆதவனிடமிருந்து சூடான கதிர்களைப் பெற்று, அதைக் குளிரச் செய்து நம்மைக் குளிர வைக்கிறான் சந்திரன். சூரிய கிரணங்களின் வெப்பத்தால் நீர் நிலைகளை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்த வகையில் தனது கதிர்களால் மாசற்றதாக மாற்றி அமைப்பவன் சந்திரன். செடி - கொடிகளில் தனது கிரணங்களால் மருத்துவ குணத்தைத் தோற்றி வைப்பவன் என்ற தகவலை தலை அசைத்து விஞ்ஞானமும் வரவேற்கும். உலகத்தின் தலைவன் சந்திரன். அவனுக்கு ஒன்று என்றால் நாம் செயல்பட வேண்டாமா?

 சந்திர காயத்ரி 
"ஓம் பத்மத்வஜாய வித்மஹே 
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்."

ஆகையால், சந்திர கிரகணத்தன்று அவனது உயர்வுக்காகவும் நமது நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்!. மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும், என்றும் உங்களுக்கு கிடைக்க பரம்பொருள் துணை புரியட்டும் !!

நன்றி : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக