செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

கங்கை பொங்கி வந்த ஆடித் திருநாள்!

தட்சிணாயன காலத்தின் முதல் மாதமான ஆடி மாதம் பல அற்புதங்கள் நிறைந்தது என்று போற்றப்படுகிறது. அந்த வகையில் ஆடி அமாவாசையும் சிறப்பிக்கப்படுகிறது. இந்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும், பூலோகத்திற்கு வேறு வடிவங்களில் வந்து பல புண்ணிய நதிகளிலும் கடலிலும் நீராடி தங்கள் தேவ சக்திகளை பூலோகத்திற்கு அர்ப்பணிக்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

பொதுவாக, தினந்தோறும் கடலில் நீராடக் கூடாது என்பது விதியாகும். ஆனால், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கன்னியாகுமரி, ஆதிசேது என்னும் கோடியக்கரை, பூம்புகார் ஆகிய கடல் தீர்த்தங்களில் எப்பொழுதும் எந்த நேரத்திலும் நீராடலாம். அதே போல், மீனவப் பெருமக்களுக்கு சமுத்திர இராஜதேவமூர்த்திகள் அருளாசி இருப்பதால் அவர்கள் எப்பொழுதும் நீராடலாம் என்று வேத நூல்கள் கூறுகின்றன.


மேலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை, சூரிய  சந்திர கிரகண நாட்களில் கடலில் நீராடுவதால் தோஷங்கள் நீங்கி புனிதம் சேரும். ஆடி அமாவாசையன்று புனித கடற்கரைத் தலங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதாலும்; கொன்றை மலர்களைப் பரப்பி அதன்மேல் தர்ப்பையைச் சட்டம் அமைத்து தர்ப்பணம் இட்டு, தேங்காய் எண்ணெய், சீப்பு ஆகியவற்றை தானமாக அளிப்பதாலும் இல்லத்தில் தோஷமிருந்தால் விலகும்.

அன்னதானம் செய்வதும், பசு மாட்டிற்கு புல், வாழைப்பழங்கள் அளித்து அதனை வழிபடுவதும், ஆடை தானம் செய்வதும் சிறந்தது. நம் குலத்தை வாழையடி வாழையெனத் தழைக்கச்செய்யும் ஆற்றல் மறைந்த நம் முன்னோர்களுக்கு உண்டு. அவர்களது ஆத்மாக்களைத் திருப்திப்படுத்த ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலையில் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைத் தரும். 

பெற்றோரைப் பேணுவதைப்பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் ஒரு புராணக்கதை மூலம் அறியலாம். முனிவர் ஒருவர் காட்டில் தவம் செய்தார். அப்போது அந்த முனிவர் தலையில் ஒரு கொக்கு எச்சமிட்டது. அதனால் தவம் கலைந்த முனிவர் கோபத்துடன் மேலே பார்க்க, அந்தப் பார்வையின் உக்கிரத்தால் அந்த கொக்கு எரிந்து விழுந்தது. முனிவர் தம் தவத்தின் ஆற்றலைக்கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

அடுத்த நாள், ஒரு வீட்டின்முன் நின்று பிட்சைக்காக குரல் கொடுத்தார். வீட்டிலிருந்த பெண்மணியோ, "சற்று பொறுத்திருங்கள்; வருகிறேன்'' என்று குரல் கொடுத்தவள், சிறிது காலந்தாழ்த்தி வந்தாள். அவளைக் கண்டதும் முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. அவளை உற்றுப்பார்த்தார்.

"முனிவரே, நானொன்றும் கொக்கல்ல, உம் பார்வைபட்டதும் எரிந்து போவதற்கு. என் முக்கிய கடமையான என் கணவரின் பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தேன். அதனால் தாமதமாகி விட்டது'' என்றாள். "காட்டில் என் தவ வலிமையால் கொக்கு எரிந்துபோனது இந்தப் பெண்ணுக்கு எப்படி தெரிந்தது?" என்று ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்.

முனிவரின் பார்வையின் உட்கருத்தைப் புரிந்துகொண்ட அந்தக் கற்புக்கரசி, "முனிவரே, மதியாபுரியில் தர்மவியாதர் என்றொருவர் இருக்கிறார். அவரை அணுகி விளக்கம் கேட்டால், அவர் உங்கள் அஞ்ஞானத்தைப் போக்கி, உங்கள் சந்தேகத்திற்கு விளக்கம் தருவார்'' என்றாள். உடனே, முனிவர் அங்கிருந்து வேகமாக மதியாபுரிக்குச் சென்றார். அங்கே தர்மவியாதன் என்பவனைத் தேடிக்கண்டுபிடித்து அவன்முன் நின்றார்.

அந்த தர்மவியாதனோ கசாப்புக் கடைக்காரன். இறைச்சியைத் துண்டமிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தான். அவனை வியப்புடன் பார்த்தார் முனிவர். "வாருங்கள் முனிவரே. நீங்கள் கானகத்தில் கொக்கை எரித்த விஷயம் எப்படி உனக்குத் தெரிந்தது என்று ஒரு பெண்ணிடம் கேட்டீரே. அவள் தானே என்னிடம் உம்மை அனுப்பினாள்?'' என்று கூறியதும் முனிவருக்கு அதிர்ச்சி; மயக்கம் வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

"ஒருவருக்கொருவர் திரிஞானத்தில் சிறந்து மிஞ்சி நிற்கிறார்களே!" என்று வியந்து சிலையாக நின்றார். "முனிவரே, சற்று பொறுங்கள். என் தொழில் முடிந்துவிட்டது. முதலில் என் தலையாய கடமையை முடித்துவிட்டு, தங்களுக்கு விவரமாகக் கூறுகிறேன்'' என்று அருகிலுள்ள தன் குடிசைக்குள் சென்றான்.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்த தர்மவியாதன், "முனிவரே, எனக்கு என் தாயும் தந்தையும் தான் தெய்வங்கள். அவர்களுக்கு நான் செய்யும் தொண்டே பெரும் தவம். என் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறேன். அதுவே ஞானத்தைக் கொடுக்கிறது. பெற்றோர்களுக்குரிய பணிவிடைகளை முதலில் செய்துவிட்டுதான் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவேன். அதனால் என் பாவங்கள் அனைத்தும் விலகிவிடுகின்றன. எனக்கு எந்தக் குறையுமில்லை. சகல பாக்கியங்களுடன் என் பெற்றோர் ஆசியால் சுகமாக வாழ்கிறேன். திரிகால ஞானயோகமும் கிடைக்கப்பெற்றேன். நீங்களும் உங்கள் பெற்றோர்களைத் தவிக்கவிடாமல் அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யுங்கள்'' என்றான். 

இந்த அறிவுரைகளைக் கேட்ட முனிவர் தலைகுனிந்து வெட்கத்துடன் அங்கிருந்து சென்றார். பெற்றோர்களுக்கு நாம் எந்த அளவுக்குப் பணிவிடைகள் செய்கிறோமோ அந்த அளவுக்கு யாகம் செய்த புண்ணியம் கிடைப்பதுடன், நாமும் நம் வாரிசுகளும் நலமுடன் வாழலாம் என்பது இதன் கருத்து. இந்த வகையில் காலம் சென்ற பெற்றோர்களுக்கும், மூதாதையர்களுக்கும் பிதுர் பூஜை செய்வதும், தான  தர்மங்கள் செய்வதும் மிகவும் நன்மை தரக் கூடியதாகும்.

பொதுவாக, அமாவாசை நாளில் கடல் நீரில் ஒரு மாற்றம் ஏற்படும். கடல் நீருக்கு அடியில் இருக்கும் பவளம், சங்கு, சிற்பி போன்ற ஜீவராசிகள் கடல் நீரின் மாற்றத்தால் புரட்டி எடுக்கப்படுகின்றன. அந்த வேளையில்... கடல் நீருக்கு ஓரு சக்தி ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மெய்ஞ்ஞானம் கூறுவதை விஞ்ஞானமும் ஏற்கிறது. எனவே, அன்று கடல் நீரில் நீராடினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

மேலும், ஆடி மாதத்தில் தேவர்களின் இராப்பொழுது ஆரம்பமாவதால் ஆடி அமாவாசை மேலும் சிறப்புப் பெறுகிறது. இதற்கு புராண காலத்தில் ஒரு நிகழ்வு உண்டு. அது தமிழகத்தில் நடைபெற்றதாகப் புராணம் கூறுகிறது.

ஒரு சமயம் கௌசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது "இந்தப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்முன்று புனித கங்கைகளிலும் நீராடமுடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்" என்று ரிஷிகள் கூறினார்கள். ஆனால், கௌசிக முனிவர் தன்னால் பதின்மூன்று கங்கைகளிலும் நீராட முடியும் என்று கூறி, ரிஷிகளின் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை நோக்கித் தவம் மேற்கொண்டார். 

பல வருடங்கள் தவமிருந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல காலம் தங்கி தவம் மேற்கொண்டார். அவரது தவத்தைப்போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை அன்று அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார். முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. 

உடனே கௌசிக முனிவர் அந்த தீர்த்தத்தை எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, அந்தப் புனித நீரில் தானும் நீராடி இறைவனுடன் கலந்தார். ஆடி அமாவாசையன்று இறைவன் இறைவியுடன் தோன்றியதால் இத்தலத்தில் அந்தப் புனித நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அத்திருத்தலம் சென்று இறைவன் ஸ்ரீ புஷ்பவனநாதர், இறைவி சௌந்தரவல்லி நாயகிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால் நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம்.

அன்று இத்தலத்தில் முன்னோர்களுக்கான பிதுர்பூஜைகளும் வேத விற்பன்னர்மூலம் நடைபெறுகின்றன. தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில், திருக் கண்டியூர் தவத்திற்கு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது. புனிதமான ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளில் இத்தலத்தில் பிதுர் பூஜை செய்து முன்னோர்களைப் போற்றி வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். முன்னோர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறுவதுடன் செல்வச்செழிப்பும், ஆரோக்கியமும் மேம்படும்.

மேலும், இத்தலம் தவிர, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், பவானி கூடுதுறை, திருப்புல்லாணி போன்ற சமுத்திர நீராடல் தலங்களும்; காவேரி நதிக்கரைத் தலங்களும், கோவில்களும் பிதுர் வழிபாட்டிற்குரிய இடங்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் புனிதத் தலங்களுக்குச் செல்ல இயலாத சூழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புனித நீர் நிலையில் நீராடி, ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கான பூஜை செய்து, தான தர்மங்கள் செய்தால் நல்வாழ்வு பெறலாம்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக