சனி, 13 ஆகஸ்ட், 2016

கந்தர் அனுபூதி 11 - 20

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி 



பாடல் எண் : 11
கூகா என என்கிளை கூடிஅழப்
போகா வகை மெய்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே.

பொருளுரை‬: 
"கூகா" என கூச்சலிட்டு அடியேனின் சுற்றத்தார் ஒன்றுகூடி அழ அடியேன் இறந்துபோகா வண்ணம் உண்மையான ஞானப்பொருளை எனக்கு உபதேசித்த பரம்பொருளே! "நாகாசலம்" எனப்படும் திருச்செங்கோட்டு மலைமீது வதியும் வேலாயுதனே! "ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்" என்னும் நான்கு வகையான கவிகளைப் பாடும் திறத்தை தேவரீரின் அடியார்களுக்கு வழங்கியருளும் பெருமாளே! வானுலகத்து சிரோரத்தினமே!.


பாடல் எண் : 12
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

பொருளுரை‬: 
செவ்விய மான் ஈன்ற மகளாம் வள்ளி அம்மையாரைக் களவிற் கொண்டு சென்ற கள்வனாகிய பிறப்பும் இறப்பு இல்லாத திருமுருகப்பெருமான், "பேசாத மவுன நிலையில் சும்மா இருப்பாயாக!" என்று அடியேனுக்கு உபதேசித்தவுடனே இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்துபோனது வியப்பாகவுள்ளது!.


பாடல் எண் : 13
முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே.

பொருளுரை‬: 
ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமான் நமது குரு என்று, அப்பெருமானின் திருவருளால் அறியாதவர் அப்பெருமானின் திருவருளை அறியும் தன்மையுடையவரோ? மெய்ப்பொருளாகிய திருமுருகப்பெருமான், உருவமுடையவரும் அல்லர்; உருமற்றவரும் அல்லர்; உள்ளதோர் பொருளும் அல்லர்; இல்லாத பொருளும் அல்லர்; இருள்சூழ்ந்த பொருளும் அல்லர்; ஒளி பொருந்திய பொருளும் அல்லர்!.


பாடல் எண் : 14
கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

பொருளுரை‬: 
மனமே! ஒளிபொருந்திய வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமானின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடைந்து முக்தியைப் பெறுவாயாக! உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகள் வழியாக உண்டாகும் ஆசைகளை உறுதியாக விட்டுவிடுவாயாக!.


பாடல் எண் : 15
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ எண்குண பஞ்சரனே.

பொருளுரை‬: 
"முருகா, குமரா, குகா" என்று மனம் உருகி அழைக்கும் செயலொழுக்கத்தையும் ஞானத்தையும் எப்போது அருள்வீர்? என்று பக்தியுடன் பொருந்தி நிற்கும் வானோரும் இப்பூவுலகத்தினரும் துதித்துப் போற்றும் 'தன் வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, பற்றின்மை, பேரருள், எல்லாம்வன்மை, வரம்பிலா இன்பம்" என்னும் எட்டு வகையான தெய்வீகக் குணங்களாலாகிய பஞ்சரத்தில் வதியும் மகா குருவாகிய திருமுருகப்பெருமானே!.


பாடல் எண் : 16
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியுஞ்
சூரா சுரலோக துரந்தரனே.

பொருளுரை‬: 
பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, "நல்லது, கெட்டது" எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற்கொண்டு அடியேன் இவ்வாறு அலைந்து திரிவது தகுமோ? தெய்வீக வீரரே! பழங்காலத்து அசுரன் சூரபன்மன் இறந்தொழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய சூரரே! தேவருலகைக் காப்பாற்றியவரே!.


பாடல் எண் : 17
யாம்ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறம் மெய்ப்புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.

பொருளுரை‬: 
கற்று அறியும் கல்வியும் பெற்றுள்ள அறிவும் வேலாயுதப் பெருமானே நமக்கு அருளியுள்ள காரணத்தால், உலகத்தோரே! இந்நிலவுலகில் உள்ள அளவு ஆசையால் விளையும் மயக்கத்தை நீக்கி, அறச்செயல்களையும் உண்மையையும் கடைப்பிடித்து அறநெறியில் சென்றுசேர்வீர்களாக; மேலும் திருமுருகப்பெருமான் அருட்கொடையாக அளித்த நாவைக் கொண்டு அப்பரம்பொருளின் புகழை ஓதிக்கொண்டிருப்பீர்களாக!.


பாடல் எண் : 18
உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
பதிகா வலசூர பயங்கரனே.

பொருளுரை‬: 
சிவபெருமானின் மைந்தரே! பிறவாமலும், இறவாமலும், உணராமலும், மறவாமலும், பிரமனும் திருமாலும் அறியாமலும் விளங்குபவரே! யாவரினும் மேம்பட்டவரே! பாவமற்றவரே! புகலிடம் அளிக்கும் மூர்த்தியே! வானுலகைக் காத்தருளும் பெருமானே! சூரபன்மனுக்கு அச்சம் தருபவரே!.


பாடல் எண் : 19
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகியவா
அடிஅந்தம் இலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே.

பொருளுரை‬: 
கூரிய வேலாயுதத்தை ஏந்தியவாறு பிரபஞ்சத்தை ஆளும் ஆதியும் அந்தமும் இல்லாத மாமன்னரே! "வறுமை" என்னும் ஒரு பாவி தோன்றியவுடனே அழகும் செல்வமும் நல்ல மனமும் குணமும் குடும்பத்தின் பெருமையும் குலத்தின் பெருமையும் ஒருவரை விட்டுப் போய்விடுகின்றனவே!.


பாடல் எண் : 20
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

பொருளுரை‬: 
கிடைத்தற்கு அரிய உண்மைப் பொருளைப் பெறுதற்கு அடியேன் தகுதியுள்ளவனாகக் கருதித் தேவரீர் அடியேனுக்கு உபதேசத்தைப் போதித்தமுறை வியக்கத் தக்கதே! மிகவும் உறுதியானதும் நிலையானதுமான வலிமையுடைய பிரணவப் பொருளாக வானோர் விரும்பித் தியானிக்கும் செவ்வேளே! வானோர் உலகைத் தாங்குபவரே!.


தொடரும் பாடல்களும் விளக்கமும் அடுத்த பதிவில்..........!


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக