இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஐயாற்றீசர், ஸ்ரீ ஐயாரப்பர், ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி, ஸ்ரீ தர்மசம்வர்த்தினி
திருமுறை : நான்காம் திருமுறை 03 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
அறம் வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ ஐயாரப்பர் |
இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலை நாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா" என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம். இவ்வாறு அப்பர் பிரான் கண்ட கயிலாயக் காட்சியினை தன் பதிகத்தில் மிகவும் விவரித்துக் கூறுகிறார்.
பாடல் எண் : 01
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
அழகிய கொண்டை மாலைகள் அணிந்த சிவபெருமானை, உமை அம்மையுடன் இணைத்துப் பாடுபவர்களாய், அன்றலர்ந்த மலர்களையும் நீரினையும் இறைவனை வழிபடுவதற்காக கொண்டு செல்லும் அடியார்களின் பின்னே நானும் சென்றேன். வெகு தூரத்தில் வடஇந்தியாவில் இருந்த பொய்கையிலிருந்து திருவையாறு வந்ததற்கு எந்த அடியாளமும் இல்லாமல், கயிலைப் பயணம் மேற்கொண்ட போது உடலுக்கு ஏற்பட்ட சிதைவுகள் அனைத்தும் நீங்கிய நிலையில், திருவையாறு தலத்தை அடைந்த நான், அங்கே ஆண் யானை, தனது காதலியான பெண் யானையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். இந்தக் கோலம் இதற்கு முன் நான் கண்டறியாதது. சிவனும் பார்வதி தேவியாக இணைந்து இருப்பது போன்ற இந்த கோலத்தில், நான் சிவபெருமானது திருப்பாதங்களையும் கண்டேன்.
பாடல் எண் : 02
போழிளம் கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி
வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டமிட்டு ஆடா வருவேன்
ஆழி வலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்ற போது
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
இளம் பிறை போன்ற தலை மாலையினை அணிந்த சிவபெருமானை, பூவேலைகள் நிறைந்த ஆடையை அணிந்த பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடி, அவர்கள் திருவடி வாழ்க என்றும் அவர்களை வணங்கிப் பாடி, அளவு கடந்த மகிழ்ச்சியுடன் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டு வருவேன். கடலைரசனாகிய வருணன், வணங்கிப் பயன் பெற்ற ஐயாரப்பன் உறையும் தலத்தை நான் வந்தடைந்த போது, சேவல் தனது துணையான கோழியுடன் மகிழ்ந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
பாடல் எண் : 03
எரிப்பிறைக் கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி
முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன்
அரித்து ஒழுகும் வெள்ளருவி ஐயாறு அடைகின்ற போது
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும், இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முகமலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க. இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
பாடல் எண் : 04
பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடித்
துறை இளம் பன்மலர் தூவி தோளைக் குளிரத் தொழுவேன்
அறை இளம் பூங்குயிலாலும் ஐயாறு அடைகின்ற போது
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
பிறை சூடிய சிவபெருமானை, நெருங்கிய வளையல்களைத் தனது கையில் அணிந்துள்ள பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடி, நீர்நிலைகளை அடுத்து வளரும் செடி கொடிகளில் உள்ள பல மலர்களைத் தூவி சிவபெருமானைத் தொழுது வரும் எனது உள்ளம் மிகவும் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது. அந்த மகிழ்ச்சியினால் எனது தோள்கள் விம்மி புடைத்து உள்ளன. நான், குயில்கள் பாட்டொலிக்கும் திருவையாறுத் தலம் அடைந்தபோது அங்கே சிறகுகளை உடைய தனது துணையுடன் சேவல் ஆடி வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
பாடல் எண் : 05
ஏடு மதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடிக்
காடொடு நாடுமலையும் கைதொழுது ஆடா வருவேன்
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
பிறைகள் தேய்ந்து இளைத்த நிலையில் சரணடைந்த சந்திரனைச் சடையில் சூடிக் கொண்ட சிவபிரானை, அழகிய நகைகள் அணிந்த பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடிக்கொண்டு, காடு, மலை, பல நாடுகளைத் தாண்டிக்கொண்டு, காட்டினையும், நாட்டினையும் மலைகளையும் தொழுது கொண்டே ஆடிக் கொண்டே நான் வந்தேன். அவ்வாறு வந்த நான், நடனமாடும் சிவபிரான் உறைகின்ற ஐயாற்றினை வந்து அடைந்தேன். இங்கே ஆண் மயில் தனது துணையான பெண் மயிலுடன் பிணைந்து ஆடும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
பாடல் எண் : 06
தண்மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி
உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
குளிர்ந்த சந்திரனது தனது சடையில் அணிந்து கொண்ட சிவபிரானை, பெண்களில் சிறந்தவளாகிய உமை அம்மையுடன் இணைத்துப் பாடியபடியே, குழைந்த உள்ளத்துடன் சிவபிரானது திருவடிச் சிறப்பினை உணர்ந்து உருகி வந்த நான் திருவையாறு தலத்தினை அடைந்தேன். தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவையாற்றில் அழகிய வண்ணமுடைய அன்றில் பறவை தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
பாடல் எண் : 07
கடிமதிக் கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது
இடி குரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
அனைவரும் விரும்பும் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்ட சிவபிரானை, உமையம்மையுடன் இணைத்து, சிவபிரானது வடிவினையும் வண்ணத்தையும் எனது உள்ளம் உணர்ந்ததை வாயினால் படுவதே எனது வாழக்கையின் நோக்கமாக கொண்டுள்ளேன். தனது காலில் வீரக் கழலினை அணிந்துள்ள சிவபெருமான் உறையும் ஐயாற்றினை நான் அடைந்த போது, இடி இடிப்பதைப் போன்ற குரலினை உடைய ஆண் பன்றி தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
பாடல் எண் : 08
விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறு அடைகின்ற போது
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
அனைவரும் விரும்பும் சந்திரனை பிறையாகத் தனது தலையில் சூடிக் கொண்ட சிவபிரானை, மெல்லிய இயல்புகள் கொண்ட பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடும் நான், தினமும் காலைப் பொழுது விடிவதற்கு முன்னமே எழுந்து, இறைவனை மலர் தூவி துதிப்பதால் நமக்கு முக்திப் பேறு கிடைக்க வழிசெய்யும் மலர்களை பறித்துக் கொண்டு வருவேன். சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் அடித்து வரும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஐயாறு வந்து அடைந்த போது, ஆண் மான் தனது துணையான பெண்மானோடு இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
பாடல் எண் : 09
முற்பிறைக் கண்ணியினானை மொய்குழலாளொடும் பாடிப்
பற்றிக் கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்ற போது
நற்றுணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறை சூடிய பெருமானைச் செறிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் இணைத்துப்பாடி, அவன் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து எம்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து அவன் அருள் பெற்று நிலவும் அடியார்கள் உடன் ஐயாற்றை அடையும்போது, சிறந்த துணையாகிய பெடையோடு ஆண் நாரைகள் கூட இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
பாடல் எண் : 10
திங்கள் மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி
எங்கருள் நல்கும் கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
அங்கிள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூடிய சிவபெருமானை, தேன் போன்ற இனிமையான மொழி உடைய உமையம்மையுடன் இணைத்துப் பாடி, அடியேனுக்கு சிவபிரான் அருள் செய்யும் இடம் எதுவோ என்று தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்த நான் இப்போது ஐயாறு வந்தடைந்தேன். இளமங்கையர்கள் நடமாடும் ஐயாறு வந்தடைந்த போது பச்சைக் கிளை தனது துணையுடன் இணைந்து பறந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
பாடல் எண் : 11
வளர்மதிக் கண்ணியினானை வார்குழலாளொடும் பாடிக்
களவு படாததொர் காலம் காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்
அளவு படாததொர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருளுரை:
தனது கலைகள் தினமும் வளரும் நிலைக்கு மாறிய சந்திரனைத் தனது சடையில் சூடிய சிவபெருமானை, நீண்ட கூந்தல் கொண்ட உமையம்மையுடன் இணைத்துப் பாடிக் கொண்டு, நான் கோயில் வாயிலில் நிற்கின்றேன். வடநாட்டில் இருந்து அளவிடமுடியாத படி மிகவும் குறைந்த காலத்தில் திருவையாறு வந்து அடைந்துள்ளேன். இறைவன் மீது எல்லையற்ற அன்பு வைத்துள்ள நான் திருவையாறு அடைந்த போது, இளமையான பசுவுடன் இணைந்து எருது வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
நன்றி : என். வெங்கடேஸ்வரன்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக