வெள்ளி, 27 மே, 2016

66 மங்கையர்க்கரசி அம்மையார் புராணம்

"வரிவளையாள் மானிக்கும் அடியேன்."

"நின்றசீர் நெடுமாறனின் மனைவியாவார். திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவேற்றுத் தம் கணவரை சைவராக்கினார்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சோமநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சோமகமலாம்பிகை

அவதாரத் தலம் : கீழப்பழையாறை

முக்தி தலம் : மதுரை

குருபூஜை நாள் : சித்திரை - ரோகிணி்

"மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே
இருந்தமிழ்நாடு உற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்றலாமே."

பாடல் விளக்கம்:
மங்கையர்க்கு எல்லாம் ஒப்பில்லாத பேரரசியும், எம்தெய்வமும், சோழரின் குலக்கொழுந்தாக விளங்குபவரும், வளையலை அணிந்த பெருமையுடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளைப் போன்றவரும், பாண்டி நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்திற்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய பாவை போல்பவரும், எங்களுடைய பெருமானாரான சீகாழித் தலைவரின் அருளால் பெரிய தமிழ் நாட்டிற்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி, மேலோங்கிய ஒளியைத் தரும் நீருநீற்றைப் பரவச் செய்தவருமான மங்கையர்க்கரசியாரைப் போற்றுபவரின் திருவடிகள் எம்மால் போற்றத்தகுவதாகும்.

மங்கையர்க்கரசி அம்மையார் புராணம்



மங்கையர்க்கரசியார் சோழ மன்னருடைய அன்புடைச் செல்வியராய்ப் பிறந்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். இவரது இயற்பெயர் மானி என்பதாகும். மங்கையர்க்கெல்லாம் தலைவியான பேறு பெற்றதால் மங்கையர்க்கரசி என்று சிறப்புப் பெயர் பெற்றாள். இளமை முதற்கொண்டே எம்பெருமானின் திருவடிகளில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்த அம்மையார் பாண்டிய நாட்டில் பரவி வந்த சமணக் கொள்கையை ஒழித்துக்கட்ட அரிய தொண்டாற்றினாள். 

திருஞானசம்பந்தரைத் தமது நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றினாள். இவ்வாறு மங்கையர்க்கரசியார், சைவத்திற்கும், சைவக் கொள்கைக்கும் ஆற்றிய அருந்தொண்டினை, சேக்கிழார் சுவாமிகள் வெகுவாகப் புகழ்ந்து சிறப்பித்துள்ளார்.

"வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி
வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்கும்
சீர்விளக்கின் செய்ய சீறடிகள் போற்றி
ஒருநாளுந் தன்செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர் தங்குலத்தில் வந்த
பெருந்தகையார் நேசர் திறம் பேசலுற்றாம்."

பாடல் விளக்கம்:
வருநாள் திருநாடுபோல் - நீர்ப்பெருக்கு வரும் நாள் ஒரு காலத்தும் பொய்யாது வரும் தெய்வத்தன்மை வாய்ந்த காவிரியாறு வளம் பெருக்கச் சோழர் திருமரபு பெருக்கம் தங்களுடைய சோழநாட்டினைப் போலவே; செழியர்.......போற்றி - பாண்டியர்களது பாண்டி நாட்டினையும் விளங்கச் செய்த சிறப்புடைய விளக்காகிய மங்கையர்க்கரசி யம்மையாரது செய்ய சிறிய திருப்பாதங்களைத் துதித்து .(அத்துணையாலே); ஒருநாளும்.....பேசலுற்றாம் - ஒரு நாளிலும் தமது செயலிற் பிழையாது சிவனடியார்களுக்கு உடையும் கீளும் கோவணமும் நெய்து கொடுக்கும் பெரும்புகழ் வாய்ந்த சாலியரது குலத்தில் அவதரித்த பெருந்தகையாராகிய நேச நாயனாரது தன்மையினைப் பேசத் தொடங்குகின்றோம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக