"மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்."
"போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டிய பெருந்தகையார்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பக்தஜனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மனோன்மணி
அவதாரத் தலம் : திருநாவலூர்
முக்தி தலம் : திருநாவலூர்
குருபூஜை நாள் : மார்கழி - திருவாதிரை
"ஆறணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும்
வேறு நிறை வழிபாடு விளங்கிய பூசனை மேவி
நீறணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன்
நூறு குறையாமல் அளித்து இன்னமுதும் நுகர்விப்பார்."
பாடல் விளக்கம்:
கங்கைப் பேரியாற்றைத் தாங்கிய முடியினரான இறைவற்குத் திருவாதிரை நாள்தோறும் சிறப்பாகவும் நிறைவாகவும் வழிபாட்டைச் செய்து, திருநீறு அணிந்த தொண்டராய் அன்று வந்து சேர்ந்தவர்க்கெல்லாம் குறையாமல் நூறு பசும் பொன்னைத் தந்து இனிய திருவமுதும் ஊட்டுவாராகி,
நரசிங்க முனையரைய நாயனார் புராணம்
சீரும் சிறப்புமிக்க திருமுனைப்பாடி நாட்டை நரசிங்க முனையரையர் என்னும் சிவத்தொண்டர் சைவநெறி வழிகாத்து மாண்போடு ஆண்டு வந்தார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றை பெற்றவர். ஒரு திருவாதிரைத் திருநாளன்று மன்னர் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிப் கொண்டிருந்தார்.
அப்பொழுது மன்னரிடம் பொருள் பெற்றுப் போக வந்த ஒருவர் காம நோயால் உடல் சீர்கெட்டு நோய் பெற்ற நிலையில் காணப்பட்டார். அவரைப் பார்த்து பலரும் அருவருப்படைந்து விலகிச் சென்றனர். ஆனால் மன்னர் அடியாரது ரோகம் பிடித்த மேனியில் தூய திருவெண்ணீறு துலங்கக் கண்டு விரைந்து அவர்பால் சென்று அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து அனுப்பி வைத்தார். திருவெண்ணீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவபெருமான் சேவடிக்கமலங்களை அடையும் அமர வாழ்வைப் பெற்றார்.
நரசிங்க முனையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலிற்கு இணங்கி நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றனர்.
"விடநாகம் அணிந்தபிரான் மெய்த்தொண்டு விளைந்தநிலை
உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழலேத்தித்
தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலஞ்சேரும்
கடல் நாகை அதிபத்தர் கடல் நாகைக் கவின் உரைப்பாம்."
பாடல் விளக்கம்:
நஞ்சையுடைய பாம்பை அணிந்த சிவபெருமானின் மெய்த்தன்மை பொருந்திய தொண்டு நெறியில் வழுவாது நின்று, அப்பயன் விளைந்த நிலையில் பெருமானின் உடனாக நின்று மகிழும் வாழ்வுடைய நரசிங்க முனையரையரின் கழல்களை வணங்கிப் பெரிய யானைகள் மதநீரைச் சொரியச் செல்வங்களைப் பொழியும் மரக்கலங்கள் சேரும் கடல்துறைப் பட்டினமான நாகை நகர் வாழ் "அதிபத்த நாயனாரின்" நியமமான கடமையின் இயல்பைச் சொல்லப் புகுகின்றாம்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக