திங்கள், 23 மே, 2016

23 பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்

"பெருமிழலைக் குறும்பற்கும் அடியேன்"

"சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : -

இறைவியார் திருப்பெயர் : -

அவதாரத் தலம் : மிழலை நத்தம்

முக்தி தலம் : தேவர் மலை

குருபூஜை நாள் : ஆடி - சித்திரை

"தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுதூட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார் 
வண்டு மருவும் குழலுமையாள் கேள்வன் செய்ய தாளென்னும்
புண்டரீகம் அகமலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்."

பாடல் விளக்கம்:
அடியவர் பலரும் வந்து கூடி உண்ண உண்ணத் தொலையாதவாறு அமுது ஊட்டியும், அவர்கள் தத்தமக்கெனக் கொண்டு செல்லுதற்கு வேண்டிய பெருஞ்செல்வங்களை முகந்து கொடுத்தும், தம்மைச் சிறியராக வைத்து நடந்து கொள்ளுமவர், வண்டுகள் பொருந்திய கூந்தலையுடைய உமையம்மையாரின் கணவராகிய சிவபெருமானின் சிவந்த திருவடிகளாகிய தாமரை மலர்களை, மனமாகிய மலரில் வைத்துப் போற்றும் பெற்றியார்.

பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்



பெருமிழலை, பாண்டிய நாட்டின் ஓர் உள்நாடாக அமைந்துள்ளது. இஃது மிழலை நாட்டின் தலைநகரம். இப்பதியிலே, குறும்பர் மரபிலே அவதரித்த பெருமிழலைக் குறும்பனார் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ஆண்டவனிடத்தும், அடியார்களிடத்தும் இடையறாத அன்பும், பக்தியும் கொணடிருந்தார். சிவனடியார்களின் முன்பு, தம்மை மிக்க எளியோனாகவே எண்ணிக் கொள்வார். அடியார்களை வணங்கி வரவேற்று விருந்தோம்பல் அறம் அறிந்து போற்றுவதோடு அவர்களிடும் எல்லா ஏவல்களையும் சிரமேற் கொண்டு பணிவோடு செய்தார். அதனால் இவ்வடியாரது இல்லத்தில் எப்பொழுதும் சிவ அன்பர்கள் வந்து போன வண்ணமாகவே இருப்பர். 

இத்திருத்தொண்டருக்கு, சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அளவு கடந்த பக்தி உண்டாயிற்று. இறைவன் திருநாமத்தினைப் போற்றி வந்ததோடல்லாமல், சுந்தரரின் புகழைப்பற்றியும் பேசி வந்தார். சுந்தரரின் நாமத்தை மனத்தாலும், காயங்களாலும், வாக்காலும், துதித்து வழிபட்டார். நாளடைவில் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பிற்குரிய தொண்டராகவும் மாறிவிட்டார். இறைவனின் திருவருளைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் அடிவணங்கிப் போற்றுதலால் பரமன் அருளையே பெறலாம் என்ற உறுதி வழியே வாழ்ந்த இப்பெரியார் உபாசனையைத் தொடங்கினார். 

உபாசனையின் சக்தியால் குறும்பனாருக்கு அஷ்டமா சித்திகளும் கைக்கு வந்தன. சித்தத்தால் எதையும் உணரும் அரும்பெரும் சக்தியைப் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைச் சித்தத்தால் கண்டு களித்து பெருமகிழ்ச்சி கொண்டார். இவ்வாறு சுந்தரரைத் தியானம் செய்து வந்த பெருமிழலைக் குறும்பனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொடுங்கோளூரில் இருந்த படியே வெள்ளானை மீதமர்ந்த கயிலைமலை போகிறார் என்ற நிலையைத் தம் சித்தத்தின் மகிமையால் தெரிந்து கொண்டார். 

அவர் மனம் துடித்தது. மேற்கொண்டு உலகில் வாழ அவர் விரும்பவில்லை. கண்ணில் கருவிழி போன்ற சிறந்த சிவத்தொண்டரை விட்டுப் பிரிந்து நான் மட்டும் இந்த மண்ணில் உயிர் வாழ்வதா? அத்தொண்டர் திருக்கயிலைமலையை அடையும் முன்பே யாம் எம் யோக நெறியால் கைலாயம் சென்றே தீருவோம் என்று தமக்குள் உறுதி பூண்டார். எம்பெருமான் திருவடியை அடையத் துணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் மீது தாம் கொண்டுள்ள பக்தியின் வன்மையால் தமது சித்தயோக முயற்சியினால் சுந்தரர் கயிலை செல்வதற்கு முதல் நாளே தம் உயிரை, சடலத்தை விட்டு நீங்கும் வண்ணம் செய்தார். கயிலையை அடைந்து அரனார் அடிமலர் நீழலில் வைகினார். 

"பயிலச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதமுறக்
கயிலைப் பொருப்பர் அடியடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி
மயிலைப் புறங்கொள் மென்சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்."

பாடல் விளக்கம்:
உயிர்க் காற்றை வாங்கவும், நிறுத்தவும், விடவும் பயின்ற யோக முயற்சியால், பரவையாரின் கணவராய ஆரூரரின் திருவடிகளைப் பிரியாது பொருந்துதற்குத் திருக்கயிலையின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிப் பேற்றை அடைந்த பெருமிழலைக் குறும்பரின் திருவடிகளை வணங்கிச், சாயலால் மயிலைப் புறங்கண்ட மெல்லிய மகளாராகிய, யாழையும் குயிலையும் ஒத்த சொற்களைப் பேசும் காரைக்கால் அம்மையாரது வரலாற்றை இனிக் கூறுவாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக