"அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்."
"பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்"
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சாமவேதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ லோகநாயகி
அவதாரத் தலம் : திருமங்கலம்
முக்தி தலம் : திருமங்கலம்
குருபூஜை நாள் : கார்த்திகை - அஸ்தம்
"எடுத்தகுழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து
அடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை
அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கொருநாள்.
பாடல் விளக்கம்:
திருத்தமுற எடுத்த வேய்ங்குழல் என்னும் இசைக் கருவியினில், எம்பெருமானின் ஐந்து எழுத்தினையும், தொடுத்த முறையாக, ஏழு சுரவரிசைகளின் சுருதி விளங்கிட வாசித்து, அதனால் வேறு வழியில் செல்லாமல் இசையினால் தடுக்கப் பெற்ற இயங்கியற்பொருள், நிலையியற் பொருள் ஆகிய எல்லாமும் பொருந்த வரும், தம் கருணையுடன் கூடிய இசையாய அமுதினை, கேட்போர் செவியாரக் கொடுத்து வருபவரான ஆனாயர் ஆங்கு ஒரு நாள்.
ஆனாய நாயனார் புராணம்
திருமங்கலம் சோலை வளமிக்க மேன்மழநாடு நாட்டிலே அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு பரசுதாமீசுரம் உடையார் என்றும் திருமழுவுடைய தாயனார் என்றும் சாமவேதீசுவரர் என்றும் பல திருநாமங்கள் உண்டு. தெய்வவள மிக்க இத்தலத்தில் நீடிய பெருங்குடிகளுள் ஆயர் குடி நன்றாகவும் ஒன்றாகவும் இருந்தது. அக்குலத்தின் பொன்விளக்கு போல் ஆயனார் என்னும் அடியார் அவதரித்தார். ஆயர் குலம் விளங்கத் தோன்றிய நாயனார் ஆநிரைகளை நிரம்பப் பெற்றிருந்தவராதலால் தான் ஆனாயர் என்னும் நாமத்தைப் பெற்றார். இவர் செயல்படுவது தம் குலத்திற்கேற்ற தொழிலாக இருந்த போதும் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் சிவபெருமானையே எண்ணி, எந்நேரமும் உள்ளம் மகிழ்வோடு இருந்தார்.
ஆனாயர் வேய்ங்குழல் வாசிப்பதில் மெத்தக் கெட்டிக்காரர். ஆநிரைகளைக் காலையில் ஓட்டிச் செல்லும் போதும், மாலையில் திரும்ப அழைத்து வரும் போதும் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டே தான் இருப்பார். ஆனாயர் வேய்ங் குழலில் ஐந்து எழுத்தினை அமைத்துப் பாடும் அருந்திறனைப் பெற்றிருந்தார். ஆனாய நாயனாரின் இன்ப இசைக்கு உயிரினங்கள் அனைத்தும் மெய்மறந்து நிற்கும். ஒருநாள் நாயனார் வழக்கம் போல் ஆநிரைகளை மேய்க்கப் புறப்பட்டார். நறுமலர் மாலையை அணிந்து கொண்டார். தலையை ஒரு புறமாகக் கோதி முடிந்து அதில் கண்ணி மாலையைச் சூட்டிக் கெண்டார். செங்காந்தட் பூவினைக் காதில் சொருகிக் கொண்டார். கால்களிலே தோற்பாது கையைத் தரித்துக் கொண்டார். கையிலே வெண்கோலும் வேய்ங்குழலும் எடுத்துக் கொண்டார், ஏவலரும், கோபாலரும் சூழ ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு, முல்லை நிலத்திற்குப் புறப்பட்டார்.
அப்பொழுது கார் காலம்! முல்லை நிலம் பூத்துக் குலுங்கும் புது மலர்ச்சோலை போல் காட்சி அளித்தது. ஆங்காங்கே கொன்றை மரங்கள் புது மலர்களைத் தாங்கிய வண்ணம் எழிலுறக் காட்சி அளித்தன. ஆனாயர் முல்லை நிலத்தின் இயற்கை எழிலில் - இன்பத்தை அளிக்கும் வண்ண மலர்களின் நறுவாசனையில் உள்ளத்தைப் பறி கொடுத்தார். தம்மை மறந்து வேய்ங்குழலின் இன்ப இசையை இனிமையாக எழுப்பி வாசித்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது ஆனாயர் பார்வை கொன்றை மரத்தின் மீது பதிந்தது. அம்மரத்திலிருந்த மலர்கள் கொத்து கொத்தாக மாலை போன்ற வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. எந்நேரமும் சிவனைப் பற்றியும், திருவெண்ணீற்றை பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கும் ஆனாயர்க் கண்களுக்கு கொன்றை மரத்தின் வடிவத்தைப் பார்த்ததும் கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது.
அத்திருத்தோற்றப் பொலிவினில், சிவனையே பார்த்து விட்டாற் போன்ற பெருமகிழ்ச்சி பூண்டார் அடியார்! அவரது ஐம்புலன்களும் பக்தியால் பூரித்தன. ஆனாயர் அம்மரத்தை வலம் வந்து வணங்கினார். தாம் வைத்திருந்த வேய்ங்குழல் பலவற்றில் சிறந்ததான ஒன்றை எடுத்தார். ஆனாயர் பரமனை நினைத்தபடியே பண் ஒன்றை எழுப்பினார். அவர் சுத்த சுரத்திலே திருவைந்தெழுத்தை இசையுடன் அமைத்து முறையோடு சுருதி சேர்த்து வாசிக்கலானார். ஐந்தொலியின் இசை இன்பம் வெள்ளம் போல் பாய்ந்து ஓடியது. கல்லும் கரையும் தன்மை பெற்ற அவ்வின்ப இசை கந்தவர்வ கானம் போல் அமைந்தது. அருகம் புல்லை அசை போட்டபடியாக நின்று கொண்டிருந்த ஆநிரைகள் ஆனாயர் இசைக்கு மயங்கி அவரது அருகே வந்து நின்றன.
கன்றுகளோ தாய்ப்பாலையும் மறந்து இன்ப இசையில் உணர்விழந்து ஆனாயரைச் சுற்றி நின்றன. மான் கூட்டங்கள் துள்ளி ஓடிவந்து ஆனாயரைச் சூழ்ந்தன. பல்வேறு ஆக்க வேலைகளில் அதிகப்படியாக ஊக்கம் காட்டி நின்ற ஆயர்கள், தங்கள் வேலைகளை மறந்து இசை வெள்ளத்தில் மூழ்கி நின்ற இடத்திலேயே செய்வதறியாது செயலற்று நின்றனர். வானவரும் விஞ்சயரும் புட்பக விமானத்தில் அமர்ந்த வண்ணம் ஆனாயரின் இசைத்தேனைச் சுவைத்துப் பருகிக்கொண்டிருந்தனர். ஆனாயர் தேவகான இசை மழை பொழிந்த வண்ணமாகவே இருந்தார். உலகில் மாறுபட்ட உள்ளத்தினரும் வாழ்வில் வேறுபட்ட நிலையில் இருப்போரும் தத்தம் நிலைமை, தகுதி இவற்றை எல்லாம் அறவே மறந்து ஒருமனப்பட்டு உள்ளம் மகிழ ஆனாயரின் இசைக்கடலில் மூழ்கி இன்பம் கண்டனர்.
தோகை விரித்தாடும் மயில் மீது படமெடுத்தாடும் பாம்புகள் மயங்கி விழுந்தன. சிங்கமும், யானையும் பகைமை மறந்து ஒன்றோடொன்று இணைந்தவாறு இசை வசப்பட்டு நின்றன. புலிகளின் முன்னே புள்ளி மான்கள் பயமின்றி நின்று கொண்டிருந்தன. காற்று கூட வேகமாக வீசவில்லை. மரக்கிளைகள் எல்லாம் அசைவற்று இசையில் செயலற்றன. மலையிலிருந்து துள்ளிப் பாய்ந்தோடும் தேனருவிகள் எவ்வித ஓசையும் இன்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தன. அலை மோதும் கடல் கூட அமைதியுடன் காணப்பட்டது. மேகக் கூட்டங்கள் இடியும் மழையும் இன்றி வான வீதியிலே அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்தன. ஈரேழு உலகமும், ஆனாயரின் இசை வெள்ளத்தில் இன்ப சுகம் பெற்றன. உயிருள்ள பொருட்கள் மட்டுமல்ல உயிரற்ற பொருட்களும் கூட ஆனாயரின் குழலோசைக்குக் கட்டுப்படத்தான் செய்தன.
மண்ணிலே இருந்து எழுந்த ஆனாயரின் குழலோசை மேலோங்கி விரைந்து சென்று விண்ணகத்தை முட்டியதோடல்லாமல் கயிலை மலையில் வீற்றிருக்கும் உமா மஹேஸ்வரனின் திருச்செவிகளுக்கும் ஊடுருவிற்று. வெள்ளி அம்பலத்திலே ஆனந்தத் தாண்டவம் ஆடும் அரனாரும் இசைக்குக் கட்டுப்பட்டவர் தானே இலங்கேஸ்வரனின் இசைக்கு அடிமையானவரான அவர் இன்று ஆனாயரின் இசை வெள்ளத்திலே மெய்யுருகி ஆனாயரை ஆட்கொள்ளப் பார்வதியுடன் விடையின் மீது காட்சி அளித்தார். ஆனாயரின் இசைக்குக் கட்டுப்பட்ட கங்காதரன் ஆனாயரை வேய்ங்குழலை இவ்வாறு இசைத்துக் கொண்டே எம் அருகே வந்து அணைந்திடுவாய் என்று வாழ்த்தி அருளினார். ஆனாயர், இறைவன் அருகேயே அமர்ந்து, வேய்ங்குழல் வாசிக்கும் பேறு பெற்றார். ஆனாயர் பெற்ற பேறன்றோ அருந்தவப் பேறு.
பூச்சொரியும் கொன்றை சிவ நினைவைப் பெருகுவது. ஐந்தெழுத்துள் அனைத்தும் அடக்கம். ஆதலால் ஐந்தெழுத்து இசையமுதம், நிற்பனவும் இயங்குவனமுமான சராசரங்களை எல்லாம் தன்வயப்படுத்த வல்லது. ஐந்தெழுத்து மந்திரத்தை வேய்ங்குழலில் இசைத்தல் இசை விரும்பும் இறைவர்க்கு உகப்பானது.
"விண்ணவர்கள் மலர்மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க
எண்ணிலரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்
புண்ணியனார் எழுந்து அருளிப் பொன் பொதுவின் இடைப் புக்கார்."
பாடல் விளக்கம்:
இந்த அற்புதம் கண்டு, தேவர்கள் சொரியும் மலர் மழை நெருங்கி உலகிடத்து விளங்கவும், எண்ணற்கரிய முனிவர் கூட்டம், மறைமொழி கொண்டு போற்றிடவும், ஆனாயர் தமது வேய்ங் குழலிசையை இசைத்த வண்ணம் உடன் செல்லவும், புண்ணியராய பெருமானார் அவ்விடத்தினின்றும் எழுந்தருளிச் சென்று பொன்னம்பலத்தின் புகுந்தருளினார்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக