இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கொடுமுடிநாதர், ஸ்ரீ மகுடேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வடிவுடைநாயகி, ஸ்ரீ பண்மொழிநாயகி
திருமுறை : ஏழாம் திருமுறை 48 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
நமச்சிவாய பதிகம்: திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும், சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். ஆனால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார்.
ஒருவர் நமக்கு செய்த நன்மை எல்லாவற்றையும் மறந்து விட்டு அவர் செய்த ஏதாவது ஒன்றிரண்டு தீமையை மட்டுமே மனதில் வைத்திருப்பவர் மனம் தெளிவு பெற இப்பதிகம் உதவும். மேலும் மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓதுவதால் அவர் மனச் சாந்தி பெற்று இறைவனடி சேரவும் இறை பக்தி மிகுந்த அடுத்த பிறவிகளை அடையவும் வழி ஏற்படும்.
பாடல் எண் : 01
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
கற்றவர்கள் வணங்கித் துதிக்கின்ற புகழையுடைய கறையூரில் உள்ள "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நல்ல தவவடிவினனே, எனக்கு வேறு துணையில்லையாகும்படி, உனது திருவடியையே துணையாக மனத்தில் துணியப்பெற்றேன்; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே, நான் மனிதனாய் பிறந்தவனாயினேன்; அதுவன்றி இனியொரு பிறப்பிற் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன்; இனி உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய "நமச்சிவாய" என்பதனை இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 02
இட்டன் நும்மடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாறு, வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற. "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, தோழமை கொண்டவனே, உன்னால் விரும்பப்பெற்றவனாகிய யான், உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் "இவன் நிலையில்லாத மனத்தையுடையவன்" என்று இகழப்பட்ட நாள்களும், அங்ஙனம் அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை, அடியேன் அழிந்த நாள் என்று கருதுவதன்றி வேறாகக் கருதமாட்டேன்; ஆதலின், நான் உன்னை மறக்கினும், என் நா, உனது திருப்பெயராகிய, "நமச்சிவாய" என்பதனை, இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 03
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடைமேல்
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரிப்
பாவு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
மேலான ஒளியாய் உள்ளவனே, மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாற்றினது பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற, "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நா வன்மையுடையவனே, அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை, என் உணர்வு அழிந்த நாள்களும், உயிர்போன நாள்களும், உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி, வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலின், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, "நமச்சிவாய" என்பதனை, இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 04
எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி
கல்லை உந்தி வளம் பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை
நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
எல்லையில்லாத புகழையுடைய எம்பெருமானே, என் தந்தைக்கும் தலைவனே, என் பொன்போல்பவனே, என் மணி போல்பவனே, மணிகளைத் தள்ளி வந்து, எவ்விடத்திலும் செல்வத்தை மிகுதியாகச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண். நல்லவர்களால் வணங்கித் துதிக்கப்படுகின்ற, புகழையுடைய கறையூரில் உள்ள, "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எல்லாம் வல்லவனே, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, "நமச்சிவாய" என்பதனை இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 05
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்
அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்
பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
ஊட்டப்பட்ட பஞ்சினை உடைய மெல்லிய அடிகளையுடைய பாவைபோலும் மகளிர் காவிரித்துறைக்கண் மூழ்கி விளையாடுகின்ற, "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நஞ்சணிந்த கண்டத்தையுடையவனே, நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாப்பாவாய் என்று அறிந்து, அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன்; அதனையறிந்து நீ அவ்வண்ணமே "அஞ்சேல்" என்று சொல்லி அணைத்து, அடித்தொண்டனாகிய எனக்கு உன் திருவருளை அளித்தாய்; அதனால் உனக்குக் கெடுகின்றது ஒன்றின்மையைக் கண்டேன்; இன்ன பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, "நமச்சிவாய" என்பதனை, இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 06
ஏடு வான் இளந்திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பது அரைக்கு அசைத்த அழகனே அந்தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
கொல்லுகின்ற புலியினது தோலின் மேல், ஆடுகின்ற பாம்பை, அரையின்கண் கட்டியுள்ள அழகனே, அழகிய ஆழ்ந்த காவிரியாற்றினது, ஒலிக்கின்ற குளிர்ந்த நீர் வந்து பாய்கின்ற, "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற மேலான ஒளியாய் உள்ளவனே, பெருமையுடையவனே நீ, வானத்தில் தோன்றுகின்ற, பூவிதழ்போலும் இளந்திங்களை முடியிற் சூடினாய்; அதன்பின் சான்று சொல்லவேண்டுவது என்! அதனால், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, "நமச்சிவாய" என்பதனை, இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 07
விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
தென்னங் குரும்பைபோலும், மெல்லிய கொங்கைகளையுடைய கன்னியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது, வளப்பமான சோலைகள் நெருங்கிச் சூழ்ந்து அழகுண்டாக நிற்கின்ற கரைக்கண் உள்ள, "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, விரும்பப்படுபவனே, அடியேன், உனது மலர் போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன்; அதனால், நீங்குதற் கரிய வினைகளும் நீங்கின; இனி, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, "நமச்சிவாய" என்பதனை, இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 08
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்
வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடை
கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
செம்பொன் போலும் சடையையுடையவனே, திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்து, காவிரியாற்றினது கரையின்கண் உள்ள, சோலைகளில் கிளைகளின்மேற் குயில்கள் கூவ, சிறந்த மயில்கள் ஆடுகின்ற, "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, "நமச்சிவாய" என்பதனை, இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 09
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணியென்று
பேர் எண்ணாயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
திருமாலும், பிரமனும் வணங்குகின்ற கறையூரில் உள்ள "திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வனே, அளவற்ற தேவர்; எமக்குப் புகலிடமானவன்; எம்தந்தை; எம்தலைவன்; எம் தந்தைக்கும் தலைவன்; எங்கள் பொன்; எங்கள் மணி என்று சொல்லி, உன் பெயர்கள் பலவற்றையும் பிதற்றி நின்று, உன்னைப் பிரியமாட்டார்; இன்ன பெரியோனாகிய உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, "நமச்சிவாய" என்பதனை, இடையறாது சொல்லும்.
பாடல் எண் : 10
கோணிய பிறை சூடியைக் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
பாணுலா வரிவண்டறை கொன்றைத் தாரனைப் படப்பாம்பரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.
வளைந்த பிறையைச் சூடினவனும், தலைக்கோலம் உடையவனும். பேரருள் உடையவனும், பிறப்பில்லாதவனும், இசையோடு உலாவுகின்ற வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் கொன்றைப் பூமாலையை அணிந்தவனும் "படத்தையுடைய பாம்பாகிய அரைநாணை உடையவனும் ஆகிய கறையூரில் உள்ள, திருப்பாண்டிக்கொடுமுடி" என்னும் கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவன் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுபவர்க்குத் துன்பம் இல்லையாம்.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
ஓம்சிவசிவஓம்
பதிலளிநீக்கு