திங்கள், 23 மே, 2016

24 காரைக்கால் அம்மையார் புராணம்

"பேயார்க்கும் அடியேன்"

"இறைவன அருளால் இருமுறை மாய மாங்கனி பெற்றவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கைலாசநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தராம்பிகை

அவதாரத் தலம் : காரைக்கால்

முக்தி தலம் : திருவாலங்காடு

குருபூஜை நாள் : பங்குனி - சுவாதி

"தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி 
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் 
கலையிளம் திங்கள் கண்ணிக் கண்ணுதல் ஒரு பாகத்துச் 
சிலைணுதல் இமைய வல்லி திருக்கண் நோக்குற்றது அன்றே."

பாடல் விளக்கம்:
தலையினால் நடந்து சென்று பெருமான் எழுந்தருளியிருக்கும் கயிலை மலையின் மேல் ஏறும் பொழுது, மகிழ்ச்சி மீதூர்வினால் அன்பு மேன்மேலும் பெருக, இளம் பிறையாகிய மாலையை அணிந்த வில்லைப் போன்ற நெற்றியினை உடைய இறைவனின் இட மருங்கில் அமர்ந்திருக்கும் பார்வதியம்மையின் திருக்கண் பார்வை அப்பொழுது பொருந்தியது.

காரைக்கால் அம்மையார் புராணம்



காரைக்கால் வளம் பெருகும் சோழ நாட்டிலே உள்ள ஒரு திருநகரம். அந்நகரிலே சிறந்து விளங்கிய அறநெறி தவறாத வணிகர் குடியில் தனதத்தனார் என்னும் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவ்வணிகருக்கு திருமகளைப் போன்ற பேரெழில் கொண்ட புனிதவதி என்னும் ஒரு மகள் இருந்தாள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் புனிதவதியார் மழலை மொழி பேசும் போதே சிவனடியாரிடம் அளவு கடந்த அன்புடையவராய் இருந்தாள். 

புனிதவதியாரின் பிஞ்சு மனத்திலே அரவணிந்த அண்ணலின் அருள் தோற்றம் பக்திப் பெருக்கோடு பதிந்து விட்டது. புனிதவதி காணுவதெல்லாம் கண்ணுதலார் தோற்ற பொலிவையே! திருவாய் மலர்ந்து செப்புவது அனைத்தும் செஞ்சடையான் திருநாமமே! இளமை முதற்கொண்டே பரமனின் பாதங்களில் பற்றுடையவளாய் வளர்ந்து வந்த புனிதவதி மங்கைப் பருவம் எய்தினாள். மங்கைப் பருவம் கொண்ட அம்மையாரை நாகப்பட்டிணத்தில் வசித்து வந்த பரமதத்தன் என்ற வணிக குல மகனுககுத் திருமணம் செய்து வைத்தார் தனதத்தனார். 

திருமணம் முடிந்த பிறகு தனதத்தனுக்குத் தன் மகளை நாகைக்கு அனுப்ப மனம் ஒப்பவில்லை. புனிதவதி தனது ஒரே மகள் ஆகையால் அவளைப் பிரிய மனம் இல்லாமல் வருந்தினார். தனதத்தன் மகளையும், மருமகளையும் காரைக்காலில் தனியாக ஒரு இல்லத்தில் வாழ வைத்தார். காரைக்காலிலே தனிக்குடித்தனம் வைக்கப்பட்ட இவ்வில்லறச் செல்வர் மனையறத்தை மாண்புற மேற்கொண்டனர். அவர்கள் இல்லறெமென்னும் நல்லறமதை இனிதே நடத்தி வந்தனர். 

அத்தோடு கூட பரமதத்தன் வணிகத் தொழிலைப் பண்போடும் நேர்மையோடும் நடத்தி வந்தான். புனிதவதி இறைவனிடம் கொண்டுள்ள பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. எந்நேரமும் சிவனடியார் திருநாமத்தைப் போற்றி வழிபடுவதிலேயே இருந்தாள். ஒருநாள் பரமதத்தன் கடையில் இருக்கும் பொழுது, அன்புடைய ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். பரமதத்தன் அம் மாங்கினிகளை ஆள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதி அந்த இரண்டு மாங்கனிகளையும் வாங்கி வைத்துக் கொண்டாள்.

புனிதவதி பிற்பகல் உணவிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள். அதுசமயம் வாயிற்புறமிருந்து சிவாய நம என்று குரல் கேட்டது. புனிதவதி, வாயிற் பக்கம் விரைந்து வந்தாள் சிவன் அடியார் நிற்பதைக் கண்டாள்; அன்போடு அவரை வரவேற்றாள். அடியார் உணவில் மிக்க வேட்டையுடைவராய் இருந்தார், பசியால் வாடும் அடியார் முகத்தோற்றத்தைக் கண்டு மனம் வாடிய புனிதவதி சற்றும் தாமதியாமல் அடியார் பசியைப் போக்க எண்ணினாள். விரைவில் சாப்பாடும் செய்தாள். புனிதவதி.

அடியார் திருப்பாதம் விளக்க நீர் அளித்து அமர ஆசனமும் இட்டாள். தொண்டரும் திருவமுது செய்ய அமர்ந்தார். இலையில் பக்குவமாகச் சமைத்த சோற்றை மட்டும் பறிமாறி மாம்பழங்களில் ஒன்றை கறியமுதிற்குப் பதிலாக இட்டாள். பசியால் தள்ளாடி வந்த தொண்டருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் திருவமுதை வயிறார உண்டு, புனிதவதியை வாயார வாழ்த்திப் பசியாறிச் சென்றார். அடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லம் வழக்கம்போல் பரமதத்தன் நண்பகல் உணவிற்காக வீட்டிற்கு வந்து சேரந்தான். 

கை கால் கழுவி சுத்தம் செய்து கொண்டு அமுது உண்ண அமர்ந்தான். புனிதவதி முறையோடு அமுது படைத்தாள். பிறகு கணவருக்கு மீதி இருந்த மாங்கனியையும் அரிந்து பரிகலத்தில் போட்டாள். பரமதத்தன் மதுரம் வாய்ந்த அம்மாங்கனியை உண்டவுடன் அதன் இனிமை கண்டு மற்றொன்றையும் உண்ணக் கருதி அதையும் இலையில் இடுக என்று பணித்தான், கணவனின் கட்டளை கேட்டு, புனிதவதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ஒரு வினாடியில் உளம் தடுமாறிப் போனாள். இருப்பினும் கனியெடுத்து வருபவள் போல் உள்ளே சென்றாள். பாவம்! என்ன செய்வாள்? அகத்துள் மாம்பழம் இருந்தால் தானே! செய்வதறியாது மனங்கலங்கனாள்.

இறுதியில் வழியொன்றும் தோன்றாது, அரனாரை வேண்டினாள். அப்போது இறைவனின் திருவருளால் அதி மதுரக்கனி ஒன்று அம்மையாரின் கைகளில் வந்து தங்கியது. தனக்காக திருவருள் புரிந்த அரனாரை மனதில் தியானித்த படியே மாங்கனியைக் கொண்டு வந்து கணவன் இலையில் பறிமாறினாள். அதனையுண்ட பரமதத்தன் முன் உண்ட கனியை விட இக்கனி தனிச்சுவையுடன் இருக்கக் கண்டு புனிதவதி! இக்கனி, அமுதத்தைப் போன்ற சுவையுடையதாக இருக்கிறதே. தேவர்களுக்கும் , மூவர்களுக்கும் கிட்டாத கனிபோல் அல்லவோ தோன்றுகிறது இஃது ஏது உனக்கு? என்று கேட்டான். இறைவனின் சோதனைக்கு அடியவர்கள் ஆளாவது போல் கணவனின் சோதனைக்குப் புனிதவதி ஆளாயினாள். 

இறைவன் அருள் பெற்று இக்கனியைப் பெற்றேன் என்று செப்புவதற்குத் திறனற்ற நிலையில் புனிதவதி, உண்மையை எப்படி உணர்த்துவது? என்பதையும் புரிந்துகொள்ள முடியாமல் மனம் வாடினாள். ஆயினும் கணவனிடம் உண்மையை மறைப்பது கற்புடைய பெண்டிர்களுக்கு முறையல்ல என்பதையும் எண்ணி்ப் பார்த்தாள். இறுதியில் இறைவனுடைய செஞ்சேவடிகளைச் சிந்தையில் எண்ணியவளாய் கணவரிடம், இம்மதுர மாங்கனி இறைவன் திருவருளால் கிடைத்தது என்று கூறினாள். 

பரமதத்தன் வியப்புற்றான். புனிதவதி அடியார் வந்தது முதல் சற்று முன் தனக்கு மாங்கனி கிடைத்தது வரை நடந்த அத்தனை நிகழ்சிகளையும் ஒன்று விடாமல் விளக்கினாள். புனிதவதி மொழிந்தவற்றைச் சற்றும் நம்பாத நிலையில் அங்ஙனமாயின் இதுபோல் இன்னும் ஓர் சுவையான மாங்கனியைப் பெற்றுத் தருக என்று பணித்தான் பரமதத்தன். புனிதவதி மீண்டும் உள்ளே செனறாள். பெருமானை தியானித்தாள். இறைவன்! நீவிர், மற்றும் ஒரு மாங்கனியை அளித்து அருளி எம்மை ஆதரிக்காவிடில் என்னுரை பொய்யாகும் என்று பிரார்த்தித்தாள். 

இம்முறையும் மற்றொரு மாங்கனியை அளித்து அருள்புரிந்தார் எம்பெருமான். புனிதவதி மகிழ்ச்சியோடு மாங்கனியைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள். வியப்பு மேலிட, மாங்கனியைப் பரமதத்தன் வாங்கினான். அக்கனி உடனே மாயமாக அனர் கையிலிருந்து மறைந்தது. அதைப் பார்த்ததும், பரமதத்தன் பயந்து நடு நடுங்கினான். தன் மனைவி புனிதவதி மனிதப் பிறவி அல்ல, தெய்வீகத தன்மை பொருந்தியவள் என்பதை உணர்ந்தான். சிந்தை மயங்கி செயலிழந்தான் பரமதத்தன். அக்கணம் முதல் தன் மனைவியைத் தாரமாக எண்ணவில்லை; தொழுவதற்குரியவளாய் மனதில் விரித்தான் பரமதத்தன்! 

இறைவன் திருவருளைப் பெற்ற நீ தொழுதற்குரியவளே! உன்னுடன் சேர்ந்து வாழ எனக்குத் தகுதி கிடையாது தனித்து வாழ்வது தான் முற்றிலும் முறை என்றான். கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதி வருந்தினாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இதனால் பரமதத்தனும் புனிதவதியும் வாழ்க்கையில் வேறுபடுத்தப்பட்டனர். புனிதவதி, உலகப் பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையைச் சிறுகக் சிறுக பெற்றாள். தெய்வ சிந்தனையிலே அழுந்தினாள். அக்காலத்தில் வணிகர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருளீட்டி வருவது வழக்கம். பரமதத்தன் தன் உறவினர்களிடம, தானும் வெளியூர் சென்று பொருள் சேர்க்கப் போவதாகக் கூறினான். அவர்களும் அவனது முயற்சிக்கு முழு ஆதரவு கொடுத்தனர். 

ஒரு நாள் வாணிபத்திற்குரிய பொருளோடு மனைவியிடமும், மாமனிடமும் விடைபெற்றுப் புறப்பட்டான். கடல் தேவதையை வழிபட்டு கப்பலேறிச் சென்றான். வெளியூர் சென்ற பரமதத்தன் வாணிபத் தறையில் தனக்குள்ள தனித் திறமையால் ஓரிரு வாரத்துள் நிரம்பச் செல்வம் சேர்த்துக் கொண்டு, பாண்டிய நாடு திரும்பினான். அவன் காரைக்காலுக்குச் செல்ல விரும்பாததால் பாண்டிய நாட்டிலுள்ள வேறு ஒரு பட்டனத்தில் தனது வாணிபத்தைத் தொடங்கினான். அயல் நாட்டிலிருந்து தான் கொண்டு வந்த அளவற்ற பொருள்களை எல்லாம் அந்நகரிலேயே விற்றுப் பெருஞ் செல்வந்தனான். பரமதத்தனின் செல்வச் சிறப்பையும், அழகின் மேம்பாட்டையும் உணர்ந்த அவ்வூரிலுள்ள வணிகன் ஒருவன் தனது புதல்வியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். 

இரண்டாவது மனைவியோடு இன்பமாக வாழும் நாளில், அவன் மனைவி கருவுற்று ஒரு பெண மகவைப் பெற்றெடுத்தாள். அப்பெண்ணுக்கு பரமதத்தன் தான் மனத்தால் வழிபடும் புனிதவதியின் நாமத்தையே சூட்டி மகிழ்ந்தான், இவ்வாறு பரமதத்தனின் இல்லறவழி அமைய அவனுடைய முதல் மனைவியின் வாழ்க்கையோ அறவழி நின்றது. இறைவனை வழிபடுவதும், அடியார்களை வழிபடுவதுமாக புனிவதி வாழ்ந்து வந்தாள். பரமதத்தன் பண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, எப்படியோ சுற்றத்தார்கள் மூலம் புனிதவதிக்குத் தெரியவந்தது. சுற்றத்தார்கள் புனிதவதியை எப்படியும் பரமதத்தனோடு சேர்ப்பது என்று உறுதிகொண்டனர். 

ஒருநாள் மனையறம் புரிந்து வரும் மடந்தை புனிதவதியை சுற்றத்தார், இரத்தினம் இழைத்த அழகிய சிவிகையில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டனர். ஊர்கள் பல கடந்து காடுகள் மேடுகள் பல தாண்டி ஆறுகள் பல கடந்து ஒருவாறு பாண்டி நாட்டை அடைந்து பரமதத்தன் வாழும் நகருள் நுழைந்தனர். அந்நகரில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு சோலை அருகே தங்கினர். புனிதவதி வந்திருக்குமு் செய்தியைப் பரமதத்தனுக்கு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். சற்றும் எதிர்பாராமல் தன் முதல் மனைவி இப்படி வந்ததும் பரமதத்தன் அஞ்சினான். 

ஒருவாறு மனதைத் திடப்படுத்தி கொண்டு, அவர்கள் என்னிடம் வரும் முன்பு அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் செல்வேன் என்று கருத்தி்ல் கொண்டான். இரண்டாவது மனைவியுடனும், குழந்தைய புனிதவதியுடனும் புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டான் பரமதத்தன். புனிதவதி தங்கியிருக்கும் இடத்தை அடைந்த பரமதத்தன், விரைந்து சென்று மனைவி மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தான். அடியேன் உமது திருவருளால் இனிது வாழ்கிறேன் இச்சிறு குழந்தைக்கு அம்மையாரின் திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும் என்று கூறினான். 

கணவனின் செயல் கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள். பரமதத்தனின் செயல் கண்டு திகைத்துப்போன சுற்றத்தார் அவனிடம், மனைவியின் காலடியில் விழக் காரணம் என்னவென்று கேட்டனர். பெரியோர்களே! இவர் என் மனைவியாக இருக்கலாம். இன்று இவர்கள் மானிடப் பிறவியே அல்லர். அம்மையார் எல்லோராலும் தொழுதற்குரியவர். அதனால் தான் நான் தாள் பணிந்தேன். நீங்களும் பணிந்து போற்றுங்கள் என்றான். பரமதத்தன் மொழிந்ததைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். கணவனின் முடிவு புனிதவதியின் மனத்தில் பெரும் வேதனையைக் கொடுத்தது. அழகுத் திருமகளாய் இளம் குன்றாத வடிவழகுப் பெண்ணாய்க் காட்சி அளித்த அம்மையார், அழகையும் இளமையையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும் தான் அழகோடும் இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மை இயல்பினை உணர்ந்திருந்த புனிதவதி அக்கணமே இறைவனிடம், எம்பெருமானே! அம்பலவாணரே! என் கணவருக்காக இதுவரையில் தாங்கி நின்ற இந்த வனப்புமிகு எழில் உடம்பு எனக்குத் தேவையில்லை. இவ்வடிவமைக்குப் பேய் வடிடு தந்து அருளுதல் வேண்டும என்று வேண்டியவாறு பரமனைத் துதித்தாள். 

இறைவன் புனிதவதி வேண்டி நின்றது போல் அவளுக்குப் பேய் வடிவைக் கொடுத்து அருளினார். புனிதவதியின் வனப்பு மிகுந்த தசைகள் மாயமாக மறைந்தன. எலும்பு போல் காட்சியளித்தாள். விண்ணவரும் மண்ணவரும் வியக்கும் பேய் வடிவைப் புனிதவதி பெற்றாள். பெண்ணாக நின்றவள் பேயாக மாறினாள். வணக்கத்திற்குரியவள் ஆனாள். அங்கு கூடி நின்ற சுற்றத்தார்களும், உறவினர்களும் அம்மையாரை வணங்கியவாறு அங்கு நிற்பதற்கே அஞ்சினர். அம்மையார் பேய் உருக்கொண்டதோடு நல்ல தமிழ் புலமையும் பெற்றார். அருட்கவியுமாக மாறினார். 

இறைவனின் அருளிலே பெற்ற பாப்பாடும் திறத்தால் அம்மையார் அருளிலே திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலை என்னும் திருப்பிரபந்தத்தையும் பாடினார். புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்று அனைவராலும் அழைக்கலாயினார்! அல்லும் பகலும் சிவநாமச் சிந்தையுடன் வாழ்ந்து வந்த அம்மையார், திருக்கயிலை சென்று பரமனைத் தரிசிக்க எண்ணினார். அம்மையார் சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தார். கயிலை மலையை அடைந்தார். 

திருக்கயிலை மலையை, பாதத்தினால் மிதித்து நடந்து செல்வதற்கு அஞ்சிய அம்மையார், தலையால் நடந்து மகிழ்ச்சி மேலிட கயிலை மலை மீதேறிச் சென்றார். புனிதவதி அம்மையார் மலைக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்டு, பிரட்டியார் பரமனிடம், ஐயனே! தலையினால் வருகின்ற என்புருவம் படைத்த உடம்பின் அன்பை என்னவென்பது என்று சொன்னாள். உமையாளின் மொழி கேட்டு இறைவன், தேவி! இவ்வென்புடம்ப நம்மை வழிபடும் அம்மை. இந்த என் புருவத்தை நம்மிடமிருந்து வேண்டுமென்று தான் பெற்றார் என்று திருவாய் மலர்ந்தார். 

காரைக்கால் அம்மையார் அருகில் வருவதை விழி மலர்ந்த வள்ளலார் அன்பு மேலிட, அம்மையே என்றார். அம்மையாரும அப்பா என்றார். இறைவன் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கினார். அம்மையே! உனக்கு யாது வரம் வேண்டும் என்று ஐயன் திருவாய் மலர்ந்தார், அம்மையார் பக்திப் பெருக்கோடு, ஐயனே! அன்பருக்கு மெய்யனே! எனக்கு என்றும் இறவாத இன்ப அன்பு வேண்டும். மானிடப் பிறவி எடுத்து உலகப்பற்று, பாசத்தில் சிக்கி உழலாமல் இருக்க அருள்புரிய வேண்டும். ஒருக்கால் உலகில் பிறவி எடுத்துவிட நேர்ந்தால் ஐயனை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும். அத்தோடு இறைவா! ஐயன் ஆனந்தத் தாண்டவம் ஆடும் போது நான் திருவடிக்கீழ் இருந்து ஆனந்தமாகப் பாடிக்களித்து மகிழந்து பேரின்பம் கெõள்ளத் திருவருள் புரிய வேண்டும் என்று வணங்கி நின்றார். 

தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில் நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுகளித்துப் பாடி மகிழ்வாயாக! என்று இறைவன் அருள் செய்தார். அம்மையார் மீண்டும் தலையாலேயே நடந்து திருவாலங்காட்டை அடைந்தார். திருவாலங்காட்டை அடைந்த அம்மையார், ஆனந்தக் கூத்தின் திருக்கோல நடனம் கண்டு, கொங்கை திரங்கி என அடி எடுத்து மூத்த திருப்பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். தாண்டவ மூர்த்தியின் நர்த்தனத்தின் சக்தியிலே அம்மையார் அருள் பெற்று எட்டியிலவம் எனத் தொடங்கும் திருப்பதிகத்தையும் பாடினார். இவ்வாறு திருப்பதிகங்கள் பல பாடி மகிழ்ந்த காரைக்கால் அம்மையார் திருசடையான் சேவடி நிழலிலே என்றென்றும் பாடிப் பரவசமடையும் பிறவாய் பெரு வாழ்வைப் பெற்றார்கள். 

"ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்களூரில் அப்பூதியாராம்
போதமா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல் உற்றேன்."

பாடல் விளக்கம்:
முதலும் முடிவும் இல்லாத இறைவன் அருட்கூத்து இயற்றும் பொழுது, அவர் திருவடிக் கீழிருந்து பண்ணமைந்த பாடல்களைப் பாடிமகிழும் அம்மையாரின் ஒளி விளங்கும் மலரனைய திருவடிகளை வணங்கிக், குளிர்ந்த நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திங்களூரில் வாழும் அப்பூதியாராம் ஞானப் பெருமுனிவர் செய்த திருத்தொண்டினை இனிச் சொல்லத் தொடங்குகின்றேன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக