வெள்ளி, 27 மே, 2016

64 அப்பாலும் அடிச் சார்ந்தார் புராணம்

"அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்." 

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை

அவதாரத் தலம் : தில்லை

முக்தி தலம் : தில்லை

குருபூஜை நாள் : பங்குனி கடைசி நாள்

"மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே." 

பாடல் விளக்கம்:
மூவேந்தர்களின் ஆளுகைக்குட்பட்ட தமிழ் வழங்கும் நாடுகளுக்கு அப்பால், சிவபெருமானின் அடியைச் சார்ந்து முறைமை வழுவாது நிற்பவர்களும், நம்பியாரூரரின் தெய்வ நலம் பொருந்திய திருநாவால் அருளிச் செய்யப்பட்ட திருத்தொண்டத் தொகையின்கண் அவரால் போற்றி வழிபடப் பெற்ற தொண்டர்களான தனியடியார்களின் காலத்துக்கு முன்னும் அதன் பின்னும், மலர்கள் பொருந்திய நீண்ட சடையின் மேல் அடம்பு மலரும் தும்பை மலரும் கங்கையும் கொன்றையும் பொருந்தச் சூடியவரும், விடையைப் பொறித்த கொடியையுடையவருமான சிவபெருமானின் அடியைச் சார்ந்தவர்களும், சொல்லப்பட்ட அப்பாலும் அடிச்சார்ந்தார் எனக் கூறப் பெற்றவர் ஆவர்.

அப்பாலும் அடிச் சார்ந்தார் புராணம்



அப்பாலும் அடிச்சார்ந்தார் என்று திருநாமம் பூண்டவர்கள் திருத்தொண்டத் தொகையில் அடங்காத ஏனைய சிவனருட் செல்வர்கள் ஆவர் என்று அனைவரையும் போற்றியுள்ளார் சுந்தரர். மூவேந்தர்கள் ஆண்ட தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு மண்டலங்களிலும் முக்கண்ணன் பாதகமலங்களைப் பணிவோரும் இத்தொகையில் சேர்வார்கள். திருத்தொண்டத் தொகையில் வரும் நாயன்மார்களுக்கு முற்பட்டு வாழ்ந்த சிவனடியார்களும், அடிச்சார்ந்தார் ஆவர். சிவனாரின் திருவடியை வழிபடுவோர் அனைவருமே அப்பாலும் அடிச்சார்ந்தார் என்ற தொகையடியாருக்குள் அடங்கி விடுகிறார். சேக்கிழார் இவ்வுண்மையைப் பாடலால் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்தி அருளுகிறார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக