"நாட்டமிகு மூர்க்கர்க்கும் அடியேன்."
"சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வேதபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பாலாம்பிகை
அவதாரத் தலம் : திருவேற்காடு
முக்தி தலம் : கும்பகோணம்
குருபூஜை நாள் : கார்த்திகை - மூலம்
"இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன்னமுது அளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூதாடி உறு பொருள் வென்றன நம்பர்
அருளாகவே கொண்டு அங்கு அமுது செய்வித்து இன்பு உறுவார்."
பாடல் விளக்கம்:
இருள் விளங்கும் அழகிய திருக்கழுத்தினையுடைய பெருமானின் அடியவர்களுக்கு, இனிய திருவமுதாக்க வேண்டிய பொருளைத் திரட்டுதற்குப் புகழ் நிறைந்த திருக்குடந்தை நகரினில் பெயர் பெற்ற பொதுமடம் ஒன்றினில், காய் உருட்டும் சூதாடி, அதனால் பெரும் பொருள் பெருகுமளவில் வென்று, அதனைப் பெருமான் அருளாகவே கொண்டு, அங்கு அப்பொருளால் அடியவர்களுக்கு அமுது செய்வித்து இன்புறுவாராகி,
மூர்க்க நாயனார் புராணம்
தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு! இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பெயர் மூர்க்க நாயனார். இப்பெயர் இவரது குணம் பற்றி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறதே தவிர, இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. அறிவு தோன்றிய நாளிலிருந்தே இப்பெரியார் எம்பெருமானின் திருவடித் தாமரையைப் போற்றி வந்ததோடு திருவெண்ணீற்றினையே மெய்ப்பொருள் என்று கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தார்.
எம்பெருமானின் திருவடியார்களுக்கு அமுதளித்து அகமகிழ்ந்த பிறகே தாம் உண்ணும் நியதியை வழுவாது மேற்கொண்டு ஒழுகி வந்தார். இதனால் இவரது இல்லத்திற்கு வரும் சிவனடியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது. அதனால் இவரிடமுள்ள பொருள்கள் யாவும் செலவழிந்தன. வறுமை ஏற்பட்டது. எவ்வளவு தான் வறுமை மலைபோல் வளர்ந்த போதும் நாயனார் தமது குறிக்கோளில் நின்று சற்றும் பிறழாமல் வாழ்ந்து வந்தார்.
பொருள்களை விற்று, விருந்தினர்களைப் பேணி வந்த தொண்டர், இறுதியில் விற்று பணமாக்குவதற்குக்கூட பொருள் இல்லாத கொடிய நிலையை அடைந்தார். இந்த நிலையில் நாயனாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இவர் தமது இளமைப் பருவத்தில் சூதாடுவதற்குக் கற்றிருந்தார். இப்பொழுது பொருள் சேர்க்க அச்சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார். அவ்வூரிலுள்ளாரோடு சூதாடத் தொடங்கினார்.
பலரைத் தோற்கடித்துப் பெரும் பொருள் ஈட்டினார். அவ்வாறு பெற்ற பொருளைக் கொண்டுத் திருவெண்ணீற்று அன்பர்களுக்கு எப்போதும் போல் திருத்தொண்டு புரிந்து வரலானார். நாயனார் சூதாடும் பொழுது எப்பொழுதுமே ஒரு தந்திரத்தைக் கையாள்வது வழக்கம். சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்முடன் ஆடும் எதிரிக்கு விட்டுக் கொடுப்பார். அதனால் முதல் ஆட்டத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றிக்கூட வருத்தப்பட மாட்டார்.
எடுத்த எடுப்பிலேயே நாயனார் தோற்றதும் எதிரிக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுவதோடல்லாமல், அடுத்த ஆட்டத்திலிருந்து நிரம்பப் பொருள் வைத்து ஆடவும் தோன்றும், அதன் பிறகு எதிரி எங்கு வெற்றி பெறப் போகிறான்? சூதாடும் பழக்கத்தில் ஈடுபட்ட நாயனார் சூதாட்டம் என்பதற்காகப் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதே சமயத்தில் தம்முடன் சூதாடுபவர்கள் எவராகிலும் பொய்யாட்டம் ஆடினால் அத்தருணத்திலேயே சற்றும் கூடச் சிந்திக்காமல் தாம் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கரிகையாற் குத்திவிடுவார்.
ஊர் மக்கள் இவருடன் சூதாடுவதற்கு பயந்தார்கள். அதுமட்டுமல்ல இவருடன் ஆடிய அனைவருமே தோற்றுத்தான் போயினர். நாளடைவில் இவருடன் சூதாடுவதற்கு எவருமே வரவில்லை. இதனால் நாயனார் வெளியூர்களுக்குச் சென்று சூதாடிப் பொருள் பெற்றுப் பரமனுக்குப் பெருந்தொண்டாற்றி வரலானார். இவ்வாறு சூதாடிப் பொருள் நாடி பிறைசூடிப் பெருமானின் திருவடி நாடி, அவர்தம் அடியாரைக் கூடி வணங்கி வந்த மூர்க்க நாயனார் இறுதியில் எம்பெருமானின் திருவடித் தாளினைப் போற்றி வாழும் சிவபதியை அடைந்தார்.
"வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்
அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்
சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்."
பாடல் விளக்கம்:
சூதில் வல்லமை உடையார்களை வென்று, அதனால் வந்த பொருள் முழுமையையும், கருமை விளங்கும் கழுத்தினையுடைய பெருமானின் அடியவர்கட்கு அமுதாக்கிடும் நல்லவராய மூர்க்க நாயனாருடைய மலர்க்கழல்களை வணங்கி, உலகில் பெரிதும் புகழ்ந்து பேசப்படும் சீர்மையுடைய சோமாசிமாற நாயனார் திறத்தை இனிச் சொல்லுவாம்
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக