வெள்ளி, 27 மே, 2016

61 திருவாரூர்ப் பிறந்தார் புராணம்

"திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை

அவதாரத் தலம் : தில்லை

முக்தி தலம் : தில்லை

குருபூஜை நாள் : சித்திரை முதல் நாள்

"அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்றபிரான்
மருவாரும் குழலுமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்துரைக்க
ஒருவாயால் சிறியேனால் உரைக்கலாந் தகைமையதோ."

பாடல் விளக்கம்:
அருவாயும், எல்லாப் பொருள்களுமாயும் விளங்குகின்ற பெருமானாரும், மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையம்மையாரின் கணவனாருமான, இறைவர், மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவாரூரில் பிறந்தவர்களின் திருத்தொண்டைச் சிறியேனால் ஒருவாயால் ஆராய்ந்து உரைக்க இயலும் தன்மைய தாகுமோ? ஆகாது! என்பதாம்.

திருவாரூர்ப் பிறந்தார் புராணம்



அருவம் ஆகியும், உருவம் ஆகியும், எப்பொருளும் ஆகி நிற்கின்ற இறைவன் அருள் ஒளியோடு எழுந்தருளி இருக்கும் திருவாரூரில் பிறந்தவர்கள் யாவருமே சிவகணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். திருவாரூர் என்னும் திருத்தலம் முக்தி பெறுவதற்கு நல்ல மார்க்கத்தை அளிக்கும் ஞான வயல்! அந்த அளவிற்கு சைவர்கள், திருவாரூரில் பிறந்தாலே போது முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். 

திருவாரூரில் பிறந்தவர்கள் அன்பிலும் பக்தியிலும் அரனார் வழிபாட்டிலும் மிகமிகச் சிறந்து விளங்கினர். தியாகராசப் பெருமான் திருவாரூரில் எழுந்தருளி உலகிற்கு ஞான வாசனையை அருளுகிறார். திருவாரூர் பெருமான் கொடையிற் சிறந்தவர். சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாட திருவாரூர்ச் சிவனடியார்கள்தான் மூலகாரணம் ஆவார்கள். இவ்வாறு திருவாரூரில் பிறந்தவர்களுடைய சிறப்பையும், பெருமையையும் ஒருவராலும் உரைக்க உண்ணாது என்று உரைக்கிறார் சேக்கிழார் பெருமான். உலகை உய்விக்கும் பொருட்டு, பெருமைமிக்கத் திருவாரூரில் பிறந்த சிவகணத்தவர்கள் திருநாமம் போற்றிப் பணிவோமாக!.

"திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம் பொறியடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சுடையவர்க்கே அணித்தாகும் உயர்நெறியே."

பாடல் விளக்கம்:
மேன்மேலும் பெருகுதற்குரிய சிறப்பையுடைய திருவாரூரிடத்துப் பிறந்தவர்கள், திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் சிவகணங்களே ஆவர். எனவே, செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும் அடக்கி, அவர்களின் திருவடிகளை வணங்கி, ஒன்றித்த உள்ளம் உடையவர்க்கே உயர்நெறியானது அணியதாகும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக