சனி, 28 மே, 2016

நாயன்மார்களின் வரலாறு


அறுபத்து மூவர் திருவடி போற்றி




02 திருநீலகண்ட நாயனார் புராணம்

03 இயற்பகை நாயனார் புராணம்

04 இளையான்குடிமாற நாயனார் புராணம்

05 மெய்ப்பொருள் நாயனார் புராணம்

06 விறன்மிண்ட நாயனார் புராணம்

07 அமர்நீதி நாயனார் புராணம்

08 எறிபத்த நாயனார் புராணம்

09 ஏனாதிநாத நாயனார் புராணம்

10 கண்ணப்ப நாயனார் புராணம்

11 குங்குலியக் கலய நாயனார் புராணம்

12 மானக்கஞ்சாற நாயனர் புராணம்

13 அரிவாட்டாய நாயனார் புராணம்

14 ஆனாய நாயனார் புராணம்

15 மூர்த்தி நாயனார் புராணம்

16 முருக நாயனார் புராணம்

17 உருத்திரபசுபதி நாயனார் புராணம்

18 திருநாளைப்போவார் நாயனார் புராணம்

19 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்

20 சண்டேசுர நாயனார் புராணம்

21 திருநாவுக்கரசு நாயனார் புராணம்

22 குலச்சிறை நாயனார் புராணம்

23 பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்

24 காரைக்கால் அம்மையார் புராணம்

25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்

26 திருநீலநக்க நாயனார் புராணம்

27 நமிநந்தியடிகள் நாயனார் புராணம்

28 திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்

29 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

30 திருமூலதேவ நாயனார் புராணம்

31 தண்டியடிகள் நாயனார் புராணம்

32 மூர்க்க நாயனார் புராணம்

33 சோமாசிமாற நாயனார் புராணம்

34 சாக்கிய நாயனார் புராணம்

35 சிறப்புலி நாயனார் புராணம்

36 சிறுத்தொண்ட நாயனார் புராணம்

37 கழறிற்றறிவார் நாயனார் புராணம்

38 கணநாத நாயனார் புராணம்

39 கூற்றுவ நாயனார் புராணம்

40 பொய்யடிமையில்லாத புலவர் புராணம்

41 புகழ்ச்சோழ நாயனார் புராணம்

42 நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

43 அதிபத்த நாயனார் புராணம்

44 கலிக்கம்ப நாயனார் புராணம்

45 கலிய நாயனார் புராணம்

46 சத்தி நாயனார் புராணம்

47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

48 கணம்புல்ல நாயனார் புராணம்

49 காரி நாயனார் புராணம்

50 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்

51 வாயிலார் நாயனார் புராணம்

52 முனையடுவார் நாயனார் புராணம்

53 கழற்சிங்க நாயனார் புராணம்

54 இடங்கழி நாயனார் புராணம்

55 செருத்துணை நாயனார் புராணம்

56 புகழ்த்துணை நாயனார் புராணம்

57 கோட்புலி நாயனார் புராணம்

58 பத்தராய்ப் பணிவார் புராணம்

59 பரமனையே பாடுவார் புராணம்

60 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்

61 திருவாரூர்ப் பிறந்தார் புராணம்

62 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

63 முழுநீறு பூசிய முனிவர் புராணம்

64 அப்பாலும் அடிச் சார்ந்தார் புராணம்

65 பூசலார் நாயனார் புராணம்

66 மங்கையர்க்கரசி அம்மையார் புராணம்

67 நேச நாயனார் புராணம்

68 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்

69 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

70 சடைய நாயனார் புராணம்

71 இசைஞானியார் புராணம்

72 சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்

73 மாணிக்கவாசக பெருமான் புராணம்

74 நம்பியாண்டார் நம்பி புராணம்

75 தெய்வச் சேக்கிழார் பெருமான் புராணம்



|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

75 தெய்வச் சேக்கிழார் பெருமான் புராணம்

"செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி."

"தொகையா நாவலூராளி தொடுத்த திருத்தொண்டப் பெருமை
வகையால் விளங்க உயர் நம்பியாண்டார் வகுப்ப மற்றதனைத்
தகையா அன்பின் விரித்துலகோர் தம்மை அடிமைத் திறப்பாட்டின்
உகையா நின்ற சேக்கிழான் ஒளிபொற் கமலத்தாள் பணிவாம்."
- கச்சியப்ப முனிவர்


"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்."

பாடல் விளக்கம்:
எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம் அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.

தெய்வச் சேக்கிழார் பெருமான் புராணம்



இறைவன்: ஸ்ரீ திருநாகேஸ்வரர்

இறைவி: ஸ்ரீ காமாட்சியம்மை

அவதாரத் தலம்: குன்றத்தூர்

முக்தி தலம்: குன்றத்தூர்

குருபூசை நாள்: வைகாசி - பூசம்

பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரச பதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். 

அவர் பிறந்ததும் அருண்மொழி ராமதேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். 1133-ஆம் ஆண்டு முதல் 1150-ஆம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின. 

தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்ல முறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. 

அரச பதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.

அவன் சேக்கிழாரிடம், சமய நூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார். நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான். அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். 

சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார். தில்லையம்பல நடராஜர் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுத்தார். அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார். 


இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.

இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்ல நாளும், திருஞானசம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது . மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். 

ஒரு பக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன. இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது. 

அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்து. கதை முடிந்த பாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார். அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான். சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.

குருபூஜை: சேக்கிழாரின் குருபூஜை வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

"என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்."

பாடல் விளக்கம்:
எக்காலத்தும் எவ்விடத்தும் சிவபெருமானிடத்துக் கொள்ளும் இன்பம் பெருகும் இயல்போடு, அப்பெருமானை ஒன்று பட்ட உணர்வினார் பத்திமை கொள்ள, அவ்வுயிர்தானும் மேன்மேலும் சிறந்து திருவருள் இன்பத்தில் திளைக்குமாறு, தில்லைப் பேரவையில் திருக்கூத்து இயற்றிவரும் பெருமானுடையவும் அப்பெருமானின் அடியவருடையவும் ஆன, பொருள்சேர் புகழ் நுவலும் இந்நூல், உலகெலாம் நிலவி நிலைபெற்று விளங்கும் என்பதாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- நாயன்மார்களின் வரலாறு முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

74 நம்பியாண்டார் நம்பி புராணம்

சிவ ஆலயங்களில் இன்றும் தேவாரம் ஒலிக்க காரணமாக இருந்தவர் நம்பியாண்டார் நம்பி. சைவ சமய பெரியவர்களில் ஒருவரான இவருக்கு சிறுவயதில் இறைவன் காட்சி அளித்து, அருளிய ஸ்தலமாக விளங்குவது திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில்.


இக்கோவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூரில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் – காட்டுமன்னார்கோவில் இடையே சிதம்பரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரின் மூன்று பதிகங்களும், அப்பர் பெருமானின் 2 பதிகங்களும் கொண்ட தலமாக உள்ளது. இந்த கோவிலில் இறைவன் பெயர் செளந்தரேஸ்வரர், இறைவி திரிபுரசுந்தரி. தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. 

இந்த தலத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கோவிலில் அருள்பாலிப்பவர் பொல்லாப்பிள்ளையார். முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதை போல, விநாயகருக்கும் உண்டு. இதில் முதல் படை வீடாக இருப்பது திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில். அதற்கு அடுத்தாற்போல, திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), காசி ஆகியவையாகும். விநாயகர் அறுபடை வீடுகளில் 2 கோவில்கள் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும்.

பொல்லாப்பிள்ளையார் வரலாறு: பொல்லாப் பிள்ளையார் சன்னிதியில் பக்தியுடன் தினமும் பூஜித்து வந்தவர் ஆதிசைவர் மரபில் தோன்றிய அனந்தேச சிவாச்சாரியார். இவருடைய மனைவி கல்யாணி அம்மையார். இவர்களுக்கு மகனாக பிறந்தவர் நம்பியாண்டார் நம்பி. அனந்தேச சிவாச்சாரியார் தினமும் கோவிலுக்கு சென்று  இறைவனுக்கு பிரசாதத்தை நைவேத்தியம் வைத்து விட்டு வீடு திரும்புவாராம். அப்போது, அவரிடம் சிறுவன் நம்பி எங்கே பிரசாதம் என்று கேட்கும் போது, விநாயகர் சாப்பிட்டு விட்டார் என்று அனந்தேசர் கூறினாராம். இதை சிறுவதிலேயே நம்பியாண்டார் நம்பி உண்மையாக கருதினார். 

இந்த நிலையில், ஒரு சமயத்தில் தந்தை வெளியூர் சென்றதால், அவர் வழியை பின்பற்றி, சிறுவன் நம்பி கோவிலுக்கு சென்று பக்தியுடன் பூஜை செய்துவிட்டு, தாயார் கொடுத்த நைவேத்தியத்தை பிள்ளையார் முன்பு வைத்து விநாயகப் பெருமானை சாப்பிடும் படி வேண்டினார். ஆனால், பிள்ளையார் சாப்பிடவில்லை. இதில் ஏதோ தவறு இருக்கும் என அஞ்சிய நம்பி, வேதனையுடன் அழுது புரண்டு, பிள்ளையாரை சாப்பிட சொல்லி தன்னுடைய தலையை கருங்கல்லில் முட்டி மோதி கொண்டாராம். 


அப்போது, பிள்ளையார் சிறுவன் முன்தோன்றி, கல்லால் தலையில் முட்டிய நம்பியை தம் திருக்கரத்தால் (தும்பிக்கை) தாங்கி தடுத்தருளினாராம். அதன்பின், பிள்ளையார் துதிக்கையை வலப்புறமாக நீட்டி அந்த நைவேத்தியத்தை சாப்பிட்டார். இதில் மகிழ்ந்த நம்பி நடந்த விஷயத்தை தன் தாயிடம் கூறினார். ஆனால், அதை அவர் நம்பவில்லை. மறுநாள் நம்பியின் தந்தை மறைந்திருந்து பார்க்க மீண்டும் அதே அற்புதம் நடைபெற்றது. இதை கண்டு மெய்சிலிர்த்த அனந்தேசர், தன்னுடைய மகனை கட்டித்தழுவி, இறைவனை கும்பிட்டாராம்.

இதையடுத்து, பிள்ளையாருக்கும், நம்பிக்கும் இடையே நாளுக்கு, நாள் நெருக்கம் அதிகரித்தது. இதன் விளைவாக நம்பியாண்டார் நம்பிக்கு எல்லா கலைகளும் கிடைக்க பெற்றது. தொடர்ந்து, அவர் பல திருமுறைகளையும், பாடல்களையும் பாடினார். திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை ஆகியன 11–ம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்தி பாடியவையாகும்.


இந்த செய்தி காட்டு தீப்போல பிரபஞ்சம் முழுவதும் பரவியது. இதையறிந்த ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பியை சந்தித்து, திருமுறைகளை தொகுக்க வேண்டினாராம். தொடர்ந்து, இருவரும் சேர்ந்து பொல்லாப்பிள்ளையாரிடம் சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றை தொகுக்கும் மாபெரும் பணியை முடிக்க வேண்டும் என்று வேண்டினார்களாம். சிதம்பரம் கோவிலுக்கு வடமேற்கு மூலையில் உள்ளது என்று பிள்ளையார் அருளினார். இதையடுத்து, அங்கு சென்ற ராஜராஜசோழன் பூட்டி கிடந்த அறையை திறக்க அந்தணர்களை வேண்டினார். உரியோர் வந்தால் திறப்போம் என்று அந்தணர்கள் கூறினர். 

இதையடுத்து, சைவர் மூவர் சிலைகளை வடித்து நன்கு பூஜித்துவிட்டு திருமுறை சுவடிகள் இருந்த அறையை திறக்க செய்தாராம் ராஜராஜ சோழன். அப்போது, அந்த அறையில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட பதிகங்கள் கரையான் புற்றால் மூடப்பட்டிருந்தது. இதில் எண்ணெயை குடம், குடமாக ஊற்றி கரையானை போக்கி கண்டெடுத்த பதிகங்கள் மொத்தம் 796 ஆகும். இதில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் 384, திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 312, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் 100. 


இங்குள்ள பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்பாக தோன்றிய காரணத்தால் பொல்லாப் பிள்ளையார் என்றும், அதுவே நாளடைவில் மருவி தற்போது பொல்லாப்பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் சவுந்தரேஸ்வரருக்கும் வரலாறு உண்டு. அதாவது, துர்வாச முனிவர் ஈசனை நோக்கி தவம் புரிந்தார். அப்போது, ஆகாய மார்க்கமாக கந்தவர்கள் (அரக்கன்) சிலர் பறந்து சென்றார்கள். அவர்களில் தேவதத்தன் என்னும் கந்தர்வன் பழங்களை சாப்பிட்டு விட்டு, அதன் கொட்டைகளை கீழே போட, அவை அந்த முனிவரின் மேல் விழுந்து தவம் கலையசெய்தது. இதில் கடும் கோபமடைந்த முனிவர், அந்த கந்தர்வனை, நாரையாக போக சபித்தார். அதன்விளைவாக அந்த கந்தர்வன், நாரையாக மாறினான். இதில் தவறை உணர்ந்த அந்த நாரை அதே முனிவரிடம் சாபவிமோசனத்திற்கு வேண்டியதாம். 

இதற்கு அந்த முனிவர், இந்த ஸ்தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு தினமும் கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்தால், உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். இதையடுத்து, அந்த நாரை தினமும் இறைவனுக்கு நீரை அபிஷேகம் செய்து பூஜித்து வந்தது. இந்த நிலையில், ஒருநாள் சிவபெருமான் அந்த நாரையை சோதிக்க விரும்பினாராம். அதன்படி, நாரை வரும் வழியில் மழை, புயல் வீச செய்தாராம். இதில் நாரை பறக்க முடியாமல் தவித்து, அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக காற்றில் பிய்ந்து விழுந்தன. அவ்வாறு சிறகுகள் விழுந்த இடம் சிறகிழந்த நல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊர் இப்போதும், திருநாரையூரில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

சிறகே இல்லாத நாரை தவழ்ந்து வந்து சிவனை வழிபட்டு மோட்சம் பெற்றது. அதனால், இந்த ஊர் திருநாரையூர் என்று அழைக்கப்படுகிறது. நாரைக்கு அருள் செய்த ஸ்தலத்து இறைவன் சுயம்பு வடிவாக தோன்றியவர் என்று வரலாறு உண்டு. 

கோவில் அமைப்பும், திருவிழாவும்: இந்த கோவில் 3 கோபுரங்களை கொண்டது. கோவிலில் நுழைந்தவுடன் நேர் எதிரே சவுந்தரேஸ்வரர் சன்னிதியும், இடது புறத்தில் விநாயகரும், நந்தி மண்டபமும் உள்ளன. சுவாமி சன்னிதி மகா மண்டபத்தில் உற்சவமூர்த்திகளும், சோபன மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜர் சன்னிதியும், சுவாமி சன்னிதியின் வெளிப்புறம் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய சாமிகளும் உள்ளனர். நடராஜர் சன்னிதிக்கு நேர் எதிரே சந்தானாச்சாரியார்கள், சமயாச்சாரியார்கள் சன்னிதியும், பொல்லாப் பிள்ளையார் மகா மண்டபத்தில் நம்பியாண்டார் நம்பியும், ராஜராஜ சோழனும் காட்சி தருகிறார்கள். 

பிரகாரத்தின் மேற்கே சுப்பிரமணியர் சன்னதியும், வடமேற்கில் கெஜலட்சுமி சன்னிதியும், வடக்கு பிரகாரத்தில் திருமூலநாதர் சன்னிதியும், சண்டிகேஸ்வரர் சன்னிதியும், தல விருட்சமான புன்னை மரமும் உள்ளது. கோவில் மகா மண்டபத்தில் பள்ளி அறை உள்ளது. கோவில் வெளிபிரகாரத்தின் வடகிழக்கில் திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. 

கோவிலுக்கு வெளியே சற்று தொலைவில் நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் அருள்பாலிக்கிறார். மேலும், இக்கோவிலில் கி.பி.11–ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன. 

பிரசித்தி பெற்ற இக்கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும்  திறந்திருக்கும். இக்கோவிலில் தினசரி ஐந்து கால பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தர் சஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திங்கட்கிழமை வரும் புனர்பூச நட்சத்திரத்தில் நம்பியாண்டார் நம்பிக்கு குரு பூஜை விழாவும் நடைபெறுகிறது. நாரை முக்தி அடைந்த வைகாசி விசாகம் அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கோவிலில் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 

சைவத் திருமுறைகளை நிலைநாட்டிய பொல்லாப் பிள்ளையாரை நாமும் வணங்கி அருள்பெறுவோம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

73 மாணிக்கவாசக பெருமான் புராணம்

"ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி."


"கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் 
சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் 
முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் 
வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்."
- கந்த புராணம்


"தொல்லையிரும் பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்."

என்று திருவாசகம் பாடப்படும் இடம் எங்கும் போற்றித் துதிக்கப்படும் அருளாளர் திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான். 

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். 

இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து, சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். இதைத் தான் எதிர் பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார்.

இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார்.

பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்த மரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்று முதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். 


மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம் செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடி மாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்து விட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம.. சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.

பாண்டிய மன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. 

கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர். 

நீண்ட நாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித் தராத குற்றத்திற்காக பாண்டிய நாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். 

ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலை மதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்று நேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது. 

மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக் கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. கூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து நின்றார். 

பாட்டி! உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. உடனே அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது. 

இதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள் தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான்.

மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார்.


அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8-ஆம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

72 சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்

"வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி."

"சடையனார், இசை ஞானியார் ஆகியோரின் மைந்தர், சிவபெருமானின் தோழர், தேவாரம் பாடிச் செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பக்தஜனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மனோன்மணி

அவதாரத் தலம் : திருநாவலூர்

முக்தி தலம் : திருஅஞ்சைக்களம்

குருபூஜை நாள் : ஆடி - சுவாதி

"கொத்தார் மலர்க் குழலாளொரு கூறாயடி யவர்பான்
மெய்த்தாயினு மினியானையவ் வியனாவலர் பெருமான்
பித்தாபிறை சூடீயெனப் பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலாமுல கெல்லாமுய வெடுத்தார்."

பாடல் விளக்கம்:
கொத்தாக மலர்ந்த மலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையம்மையாரை ஒரு மருங்கில் கொண்டவரும், அடியவரிடத்து மெய்யன்புடைய தாயினும் இனியவருமான சிவபெருமானை, இடமகன்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைமை பெற்று விளங்குபவராகிய அந்நம்பியாரூரர், "பித்தா பிறைசூடி" என்னும் முதற்குறிப்புடைய பெருமை பொருந்திய திருப்பதிகத்தை, இந்நிலவுலகம் முதலாக எவ்வுலகத்தில் உள்ளாரும் உயரியபேறான வீட்டின்பத்தைப் பெறும் பொருட்டுப் பாடத் தொடங்கினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்



திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கியவர். ஆலால சுந்தரர். ஒரு சமயம் நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பார்வதி தேவியின் சேடிகள் இருவர் மீது இவர் பார்வை சென்றது. இதனைக் கவனித்த இறைவன் பூவுலகில் நீ சென்று இம்மாதர்கள்பால் இன்பம் துய்த்துப் பின் மீள்வாய் என்று ஆணையிட்டார். 

சுந்தரர் மனம் மிக வருந்தி உலக மாயையிலிருந்து என்னை மீட்டு ஆள வேண்டும் என்று விண்ணப்பித்தார். பூவுலகில் திருநாவலூர் என்னும் தலத்தில் சடையனார் என்பவருக்கும் இசைஞானியார் என்பவருக்கும் திருமகனாக அவதாரம் செய்தார். நம்பி ஆரூரர் என்னும் பெயருடன் வளர்ந்து மணப்பருவம் அடைகிறார். புத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்த சடங்கவி சிவாசாரியாரின் மகளை மணமுடிக்க ஏற்பாடுகள் நடைபெருகின்றன. 

அச்சமயத்தில் இறைவன் முதியவர் வேடத்தில் திருமணத்திற்கு வருகிறார். தன்னிடம் இருந்த ஓலை ஒன்றினைக் காட்டி நம்பி ஆரூரன் எனக்கு அடிமை என்று கூறுகிறார். இந்த வழக்கு திருவெண்ணை நல்லூரிலே வேதியர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பு முதியவருக்குச் சாதகமாக அமைந்தது. வழக்கின் போது முதியவரை ஆரூரர் பித்தா என்று அழைத்தார். 

வந்தவர் இறைவன் என்று அறிந்த ஆரூரர் இறைவன் விரும்பியபடி பித்தா என்ற சொல்லை முதற்சொல்லாகக் கொண்டு பதிகம் பாடுகிறார். திருவாரூரில் பரவை நாச்சியாரை மணக்கிறார். பின்பு திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணக்கிறார். சங்கிலிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறியதால் கண் பார்வை இழக்கிறார். இடக்கண் பார்வையைக் காஞ்சிபுரத்திலும் வலக்கண் பார்வையைத் திருவாரூரிலும் பெறுகிறார். அவிநாசி என்னும் தலத்தில் முதலை உண்ட பாலகனை பதிகம் பாடி மீட்கிறார். திருஅஞ்சைக்களம் என்னும் தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து திருக்கயிலை செல்கிறார்.

"ஊழிதொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான் மலையைச் 
சூழிசையின் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன 
ஏழிசையின் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும், 
ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே."

பாடல் விளக்கம்:
ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திருநாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழையுடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினையுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப்பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||