ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : மூன்றாம் திருமுறை 47 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல்
நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான்
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய இறைவனே! மூன்று கண்ணுடைய பெருமானே! நல் வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம் செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது? உரை செய்வாயாக.


பாடல் எண் : 02
மத்த யானையின் ஈருரி மூடிய
அத்தனே அணி ஆலவாயாய் பணி
பொய்த்தவன் தவ வேடத்தராம் சமண்
சித்தரை அழிக்கத் திரு உள்ளமே.

பொருளுரை:
மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே! அழகிய ஆலவாயில் விளங்கும் நாதனே! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து அழிப்பதற்குத் திருவுள்ளம்யாதோ? உரைப்பாயாக. 


பாடல் எண் : 03
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திரு ஆலவாயாய் அருள்
பெண்ணகத்து எழில் சாக்கியப்பேய் அமண்
தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே.

பொருளுரை:
இப்பூவுலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது! உரைத்தருள்வாயாக.


பாடல் எண் : 04
ஓதி ஓத்து அறியா அமணாதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே
ஆதியே திருஆலவாய் அண்ணலே
நீதியாக நினைந்து அருள் செய்திடே.

பொருளுரை:
வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாது? ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! நடுநிலையிலிருந்து அருள் செய்வாயாக!.


பாடல் எண் : 05
வையமார் புகழாய் அடியார் தொழும்
செய்கையார் திரு ஆலவாயாய் செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண் கையரைப்
பைய வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
உலகெங்கும் பரவிய புகழை உடையவனே! அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே! கையில் உணவு வாங்கி உண்டு திரியும் அமணராகிய கீழ்மக்களுடன் மெதுவாக நான் வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாது? உரைத்தருள்வாயாக!.


பாடல் எண் : 06
நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய
தேறலார் திரு ஆலவாயாய் செப்பாய்
வீறுலாத்தவ மோட்டு அமண் வேடரைச்
சீறி வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும், சோலைகளிலும் பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பெருமையில்லாத தவத்தைப் புரியும் முரடர்களாகிய சமணர்களைச் சினந்து வாது செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது? சொல்லியருள்வாயாக!.


பாடல் எண் : 07
பண்டு அடித்தவத்தார் பயில்வால் தொழும்
தொண்டருக்கு எளியாய் திருஆலவாய்
அண்டனே அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து உளறத் திரு உள்ளமே.

பொருளுரை:
தொன்று தொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால் உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப் பொருளாக விளங்கும் பெருமையுடையவரே! சமணர்களை வாதில் வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?.


பாடல் எண் : 08
அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன்முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய் திருஆலவாய்
பரக்கும் மாண்புடையாய் அமண் பாவரைக்
கரக்க வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனின் முடிகளை நெரித்து, அவனது செருக்கினை அழித்தவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! எங்கும் பரவிய புகழை உடையவரே! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களான சமணர்களை அடக்குவதற்கு அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?.


பாடல் எண் : 09
மாலும் நான்முகனும் அறியா நெறி
ஆலவாய் உறையும் அண்ணலே பணி
மேலை வீடு உணரா வெற்று அரையரைச்
சால வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே! இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?.


பாடல் எண் : 10
கழிக் கரைப்படு மீன் கவர்வார் அமண்
அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ் திருஆலவாய்
மழுப்படை உடை மைந்தனே நல்கிடே.

பொருளுரை:
நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்து வரும் சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை உடைய மைந்தரே! உமது திருவுள்ளம் யாது?.


பாடல் எண் : 11
செந்தெனா முரலும் திருஆலவாய்
மைந்தனே என்று வல் அமண் ஆசறச்
சந்தமார் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்
பந்தன் சொல் பகரும் பழி நீங்கவே.

பொருளுரை:
வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின் நெறிகளிலுள்ள குற்றங்கள் நீங்கச் சந்தமுடைய தமிழால் இறைவன் திருவுள்ளம் யாது எனக் கேட்ட மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழி நீங்க ஓதுவீர்களாக!.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக