சனி, 29 ஏப்ரல், 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : மூன்றாம் திருமுறை 39 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மாபெருந்தேவி கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை மாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
மான் போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே! கேள். பால் வடியும் நல்ல வாயையுடைய பாலன் ` என்று நீ இரக்கமடைய வேண்டா. திருஆலவாயன் துணை நிற்பதால் ஆனைமலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும், பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன்.


பாடல் எண் : 02
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மா கதக்கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசுசேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்கு மேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன் துணை நிற்பதால்.


பாடல் எண் : 03
அத்தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே. 

பொருளுரை:
கடவுள் உண்டு என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும், ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று, எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர். பார்ப்பவர் வெட்கப் படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திர வார்த்தை பேசுபவர்கட்கு, நான் ஆலவாயன் துணை நிற்றலால் எளியேன் அல்லேன்.


பாடல் எண் : 04
சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
சந்துசேனன், இந்துசேனன், தருமசேனன், மாசுடைய கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு மந்திபோல் திரிந்து, வடமொழி, தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள், சைவமே சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன். ஆலவாயன் என்னுள்ளிருந்து அருள்புரிவார்.


பாடல் எண் : 05
கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் ஒலியின் தொழில்
பாட்டு மெய் சொலிப் பக்கமே செலும் எக்கர்தங்களை பல்லறம்
காட்டியே வரு மாடெலாம் கவர் கையரை கசிவு ஒன்றிலாச்
சேட்டைகட்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப, கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும், பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி அவற்றால் வரும் செல்வங்களைக்கவரும் கீழோர்கட்கும் இரக்கமில்லாத குறும்பர்கட்கும் யான் எளியேனல்லேன். திருஆலவாய் அரன் என்றும் நின்று அருள்புரிவார்.


பாடல் எண் : 06
கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா
சுனக நந்தியும் குனக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா
அனக நந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
கனக நந்தி, புட்ப நந்தி, பவண நந்தி, குமணமா சுனக நந்தி, குனக நந்தி, திவண நந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய் மது உண்பதை ஒழித்து, அவமாகிய நிலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன், திருஆலவாய் அரன் என்னுள் நிற்பதால்.


பாடல் எண் : 07
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசக
மந்தணம் பலபேசி மாசுறு சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே. 

பொருளுரை:
சுற்றமும், பற்றும் இல்லை என்று கூறியும், இரகசியமான வாசகங்களைப் பேசியும், குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும், நியாயமற்ற நெறி நின்று, ஆருகத சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் சமணர்கட்கும், புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் புத்தர்கட்கும், அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் திருஆலவாய் அரன் என்றும் துணை நிற்றலால் யான் எளியவன் அல்லேன்.


பாடல் எண் : 08
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்றதீப்
போலியைப் பணியக்கிலாது ஒரு பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின்செலும்
சீலிகட்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
தனக்கு மேலானவரும், எதிரானவரும் இல்லை என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த, தீயைப்போன்று செந்நிற மேனியுடைய சிவபெருமானைப் பணிந்து, ஏத்தாது பொய்த்தவம் பூண்டு, குண்டிகை, மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு, பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால் சிற்றுயிர்க்கு ஊறுநேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவர்பின் ஒருவராய்ச் செல்வதைச் சீலம் எனக்கொள்ளும் சமணர்கட்கு, யான் திருஆலவாய் அரன் என்னுள் துணை நிற்றலால் எளியவனல்லேன்.


பாடல் எண் : 09
பூமகற்கும் அரிக்கும் ஓர்வரு புண்ணியன் அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல் தலையைப் பறித்து ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி மெய்ப்பொடி அட்டி வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
பிரமனும், திருமாலும் அறியவொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது, இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து, பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி, பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன் என்னுள் துணை நிற்றலால்.


பாடல் எண் : 10
தங்களுக்கும் அச்சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நற்சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய்த்தவம்
பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரியவராகிய, நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய சிவபெருமானை வழிபடுதலைவிட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான் திருஆலவாய் அரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன்.


பாடல் எண் : 11
எக்கராம் அமண் கையருக்கு எளியேன் அலேன் திருஆலவாய்ச்
சொக்கன் என்னுள் இருக்கவே துளங்கும் முடித் தென்னன் முன்னிவை
தக்கசீர்ப் புகலிக்கு மன்தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

பொருளுரை:
திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை. 

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக