ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஸ்ரீ ராம நவமி

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீ ராமர் பிறந்த போது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம். அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீ ராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும் தேவர்களும் ஸ்ரீ ராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீ ராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.

ராம நாமமானது அஷ்டாட்சரமான "ஓம் நமோ நாராயணாய" என்பதில் உள்ள "ரா" என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான "நமச்சிவாய" என்ற எழுத்தில் "ம" என்ற எழுத்தையும் சேர்த்து "ராம" என்றானது. ராவணனை அழிப்பதற்காக பூமியில் தோன்றிய ஸ்ரீராமனின் அவதார வரலாறு மகிமை வாய்ந்தது.

அயோத்தியை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. தனது புஜ, பல பராக்கிரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டிய தசரதருக்கு, நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக் குறையாக இருந்தது. இதுபற்றி தனது குலகுரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.

வசிஷ்டரின் ஆலோசனைப்படி, மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஸ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தை கொடுத்து, அதை மனைவிகளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.

பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர். தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன், வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். 

கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில், வாலியை வதம் செய்தார். பின்னர் சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.

"குலம் தரும், செல்வம் தந்திடும். அருளோடு பெரும் நிலம் அளிக்கும். பெற்ற தாயினும் ஆயினச் செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன். அது நாராயணா என்னும் நாமம்" என்று திருமங்கை ஆழ்வார் நாராயணநாம மகிமை பற்றி குறிப்பிடுவார். 

அஷ்டமியும் நவமியும் திருமாலிடம் கேட்ட வரம்: "நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை" என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.

இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீ ராமர் அவதரித்த நவமி ஸ்ரீ ராம நவமி என்றும், ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.

ஸ்ரீ ராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின்பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.

ஸ்ரீ ராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில் ஸ்ரீ ராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

ஸ்ரீ ராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீ ராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.

ராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீ ராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள். ஸ்ரீ ராம நவமியன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள்கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும். "பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும், இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும், தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும்- மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும், சான்றோர் களின் உயிர் நாடியாகவும் விளங்குவது ஸ்ரீ ராம் என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவபெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்ற யிரண்டெழுத்தினால்"
-
என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திரமாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்குகிறது. ஸ்ரீ ராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீ ராமரை வழிபடுவோர், ஸ்ரீ ராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக