மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
பாடல் எண் : 19
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும் போது சொல்லும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன்னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன?.
தத்துவ விளக்கம்:
அவனது அடியார்களுக்குத் தொண்டு செய்வதும், அவனது தாள் வணங்கியும், இரவும் பகலும் எப்போதும் அவன் நினைவாகவும், பார்க்கும் பொருளில் எல்லாம் அவன் தன்மையைப் பார்க்கும் நிலையையும் அடைவது தான் பிறவியின் பயன் ஆகும் என்பதை இப்பாடல் வழியாக உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர்மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?.
பஞ்ச சயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம். "நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து "நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கி சைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். வீரன் கொண்டு வரும் பொருளை வீரப்பத்தினி மிகவும் விரும்புவாள். அதுபோல், கம்சனால் ஏவப்பட்ட "குவலயாபீடம்" என்ற யானையோடு சண்டையிட்டு அதைக் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்து வந்தான். அந்த தந்தங்களினால் செய்யப்பட்ட கட்டிலில் நப்பின்னையும், கண்ணனும் உகந்து படுத்துள்ளனர்.
பாசுரத்தில் "கோடு" என்பது தந்தத்தைக் குறிக்கும். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் - கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து 'மாசுச" (கவலைப்படாதே) என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது.
குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக