மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
பாடல் எண் : 12
ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, "சிவாயநம" என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.
தத்துவ விளக்கம்:
நீர், ஆகாயம் (வானம்), நிலம் (குவலயம்), தீ, காற்று (ஒலி) ஆகிய ஐம்பூதங்களையும் தன்னுள் அடக்கி, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகக் கொண்டுள்ள அந்த இறைவனின் திருவடிகளைப் பற்றி நிற்க வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?.
எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்புகிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக