வெள்ளி, 22 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 08

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 08
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

தத்துவ விளக்கம்:
மனிதனைவிட அறிவில் குறைவான உயிரினங்கள் தங்களின் இயல்பு மாறாமல் தம் கடமைகளைச் செய்கின்றன. ஆனால் இறைவனை உணர்வதற்காகவே, அறிவு கொடுக்கப்பட்ட மனிதன் அதனைப் பயன்படுத்தாது மாயைக்குள் ஆழ்ந்து கிடக்கிறான்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை


பாசுரம் : 08
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீ கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ" என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து. 

குறிப்பு : பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக