ஞாயிறு, 31 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 18

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 18
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.

தத்துவ விளக்கம்:
எப்படி கதிரவன் முன்னால், மற்ற விண்மீன்கள் ஒளி இழக்கின்றனவோ, அது போலவே இறைவனின் முன்னால் மற்ற பொருள் வகைச் செல்வங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழக்கின்றன, இதனை மனதிற்கொண்டு, பொருளின் மீது பற்றுக் கொள்ளாமல், இறை அருளின் மீது மனதைச் செலுத்த வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை தான் முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித் தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி அவளை எழுப்புகிறது. உந்து மதகளிற்றன் என்ற சொல் கண்ணனாகிற யானைக் கன்றை உடையவன் நந்தகோபன் என்றும் கூறலாம். பெரியாழ்வார் "தொடர்ச்சங்கிலிகை" என்ற பாசுரத்தில், அணிந்துகொண்டு இருக்கும்படியான அணிகலன்கள் ஒலிக்க, யானை (வாரணம்) வருவதுபோல் அழகிய திருவடிகளால் கம்பீரமாக நடந்து வா என்று கண்ணனைக் கூறுகிறார். எனவே நந்தகோபருக்கு கண்ணனே ஒரு யானை என்றும் கூறலாம். 

பகவான் நான்கு வகை நடைகளை உடையவன். அதில் கம்பீரமாக நடந்து வருவதை "கஜகதி" (யானை போன்ற நடை) என்பர். உந்து மதகளின் என்பதற்கு மதங்கொண்ட யானையை எதிர்த்துப் போரிடுபவன் என்றும், யானையை உடையவன் என்றும் பொருள். மதங்கொண்ட யானையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான ஸ்ரீ நந்தகோபரின் மருமகளே! நறுமணம் வீசும் கேச பாசத்தை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியே! கதவைத்திற. உதயமாவதற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன, வந்துபார். மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல், குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றிபெற்ற கையிலே பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! கண்ணனின் பெயரைப் பாடுவோம். கையிலே அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க, எங்களுக்காக எழுந்து வந்து கதவைத் திறந்து உதவ வேண்டும் என்கிறார்கள். வளையொலி செவிகளுக்கும், பாடுவது வாய்க்கும், நப்பின்னையைக் காண்பது கண்ணுக்கும், அவளது கேசபாசம் மூக்குக்கும் அவளுடன் சேர்வது உடலுக்குமாக விருந்தாக இந்தப் பாசுரம் அமைகிறது.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக