மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம்.
திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து` எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார். இறைவனையே உருக வைத்த திருப்பாடல்களை நமக்குக் கொடுத்த மாணிக்கவாசக நாயனார் அருளிய திருவெம்பாவையை நாமும் பாடி இறையருள் பெறுவோம்.
பாடல் எண் 01
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
வாள் போன்ற, அகண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும், முடிவும் இல்லாத ஒளியாகிய சிவனைப் பற்றி, நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்னாலும், இன்னும் தூங்குகிறாயோ? உன் காது (கேட்காத அளவுக்கு கடினமாகி) உணர்ச்சி அற்றுப் போய்விட்டதோ? மகாதேவனின் பாதங்களை (பாதங்களில் அணிந்த அணிகலன்களை) வாழ்த்தி நாங்கள் எழுப்பிய வாழ்த்தொலி, வழி எங்கும் ஒலிப்பதைக் கேட்ட பின்னும், மலர்கள் தூவப்பட்ட படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நீ, மெய்மறந்து எழுவதும், பின்பு திரும்பப் புரண்டு படுப்பதுமாய் செய்வதறியாது தவிக்கிறாய். என் தோழியே, இது என்ன விதமான ஒரு (தவறான புதுப்) பழக்கம்? பாவையே, எழுந்திரு.!
தத்துவ விளக்கம்:
இப்பாடலில் கண் (சோதி), வாய் (வாழ்த்து), செவி (வாழ்த்தொலி), ஆகிய மூன்று புலன்களும் நேராகவும், தோல் (படுக்கை), மூக்கு (மலர்ப் படுக்கை) ஆகிய மற்ற இரண்டு புலன்களும் மறைமுகமாகவும் சுட்டப்படுகின்றன. ஐம்புலன்களின் பயன் (இலக்கு) அரனை உணர்வதே ஆகும். இந்தப் பாடல் மூலம், ஐம்புலன்களையும் இறைவனை நோக்கித் திருப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார், மாணிக்கவாசகர்.
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாவை நோன்பைப் பற்றி ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே "திருப்பாவை" என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு பூமியிலிருந்த கிடைத்த மகள் தான் கோதை என்ற ஆண்டாள். இவர் கண்ணனின் தீவிர பக்தை. அவரையே நினைத்திருந்து கடைசியில் ஸ்ரீரங்கத்தில் அவரையே மணந்து அவரால் ஆட்கொள்ளப்பட்டவர்.
பாசுரம் 01
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளி வீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே" பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106-ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
குறிப்பு : பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
குறிப்பு : பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக