சனி, 30 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 16

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நம் தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.

தத்துவ விளக்கம்:
இங்கு சிவனின் அடியவர்களுக்கு உமையானவள் எவ்வாறு கருணைகாட்டி அருள் புரிவாள் என்பதை, மழையின் உவமை கொண்டு விளக்குவதோடு, மழை எப்படி எல்லோர்க்கும் பொழிகிறதோ அவ்வாறே, இறைவனும் எல்லா உயிர்களையும் உய்விக்கும் பொருட்டு, தன் கருணையைப் பொழிகின்றான் என்கிறார் மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கலோர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. "அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின் இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.

கோபியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, கண்ணனை எழுப்புவதற்காக ஸ்ரீ நந்தகோபரின் மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று கோயில் காப்பானையும், வாயில் காப்பானையும் எழுப்புகிறார்கள். இறைவன் இருப்பிடம் கோயில். எங்களுக்கு நாயகனாய் இருக்கும் நந்தகோபருடைய கோயிலைக் காப்பவனே! எழுந்திராய்! என்று எழுப்பி உள்ளே செல்கிறார்கள். கொடிகள் கட்டியிருக்கும் வாயில் காப்பானே! நவரத்தின மணிகளால் இழைக்கப்பட்ட கதவின் தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளே விடு. நாங்கள் எல்லோரும் ஆயர் சிறுமியர்கள்! எங்களுடைய நோன்புக்குரிய பறையை நேற்றே கொடுப்பதாகக் கண்ணன் கூறியிருக்கிறான். நாங்கள் அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் வந்திருக்கிறோம். திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன் முதலில், நாங்கள் விரும்பும் கோரிக்கையை மறுத்துவிடாதே! ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் கதவுகளை நீ திறப்பாயாக! என்கிறார்கள். கோயிலுக்குப் போகும் போது ஒருவரை தடுக்கக்கூடாது.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக