செவ்வாய், 19 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 07

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 07
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத் தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவ சிவ" என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில் பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?.

தத்துவ விளக்கம்:
தேவரே ஆனாலும், ஊனும் உள்ளமும் உருகி வழிபட்டால் மட்டுமே இறைவன் காணக் கிடைப்பான். அவ்வாறிருக்கையில் இறைவனை அடைய எந்த முயற்சியும் செய்யாது சும்மா சோம்பிக் கிடப்பதால் பயன் ஏதும் இல்லை என்கிறார் மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 07
கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன் குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் "கேசவா" என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப் பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. "கேசவன் என்ற சொல்லுக்கே "தடைகளை நீக்குபவன்" என்று தான் பொருள்.

குறிப்பு : பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக