மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
பாடல் எண் : 20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற்பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக் காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர் நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.
தத்துவ விளக்கம்:
இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் வழிகளை இவ்வாறு 20 பாடல்களின் மூலம் உணர்த்தும் மாணிக்கவாசகர், முத்தாய்ப்பாக, "தான்" என்னும் ஆணவம் ஒழித்து, அவனுடைய பாதங்களை முழுமையாகச் சரணடைந்து விடுவதே எல்லா வழிகளிலும் ஏற்ற வழியென்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார்.
குறிப்பு : மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பதிகம் நிறைவுற்றது அடுத்த பதிவில் திருப்பள்ளியெழுச்சி திருப்பதிகம் தொடரும்.....
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!.
கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர்கள். அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்ரர்கள், துவாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இரட்டையர்கள் இவர்கள் தலைமையில் முப்பத்து முக்கோடி தேவர்கள். கோஷ்டி என்பதை கோ(ட்)டி என்பர். இவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அதனால் இவர்கள் "அமரர்கள்" எனப்படுவர். நீ தேவர்களுக்குத் தலைவனாகிய இவர்களுக்கு ஆபத்து வருவதற்கு முன், முன்னே இருந்துகொண்டு, பகைவர்களால் ஏற்படும் ஆபத்தை நீக்கி, இவர்களுடைய நடுக்கத்தைப் போக்கும் மிடுக்கு உடையவனே எழுந்திராய்! (பாரதப்போரில் பக்தன் அர்ஜுனன் மீது குறிவைத்து போடப்பட்ட ஒரு சக்தி மிக்க ஆயுதத்தை தேரோட்டியான கண்ணன், தேரிலிருந்து எழுந்திருந்து தன் மார்பில் வாங்கிக் கொண்டான். பீஷ்மர் போட்ட அஸ்த்ர சஸ்திரங்களை எல்லாம் தான் ஏற்றுக்கொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றினான்).
நேர்மையும் திறமையும் கொண்டவனே! பகைவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணுபவனே! மிகவும் தூய்மையானவனே! என்று கண்ணனை எழுப்பினார்கள். ஆனால், அவன் எழுந்திருக்கவில்லை. கீழ்ப்பாசுரத்தில், நப்பின்னையை "தத்துவமன்று தகவுமன்று" என்று பேசிவிட்டார்கள் என்று கண்ணனுக்கு எண்ணம். அதனால் நப்பின்னையின் திருமேனி அழகைக் கூறுகிறார்கள். சாமுத்திரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டபடி, அழகிய திருமேனியைக்கொண்ட மகாலட்சுமியைப் போன்ற நப்பின்னையே எழுந்திரு. எங்கள் கோஷ்டிக்கு விசிறியும், கண்ணாடியும் கொடுத்து எங்களை கண்ணனோடு இப்போதே சேர்க்கவேண்டும் என்கிறார்கள்.
குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||