புதன், 3 ஜனவரி, 2018

மார்கழி உற்சவம் 28

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி



பாடல் எண் : 08
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் 
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் 
பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே
செந்தழல் புரை திருமேனியும் காட்டி 
திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் 
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே. 

பாடல் விளக்கம்‬:
உலகம் தோன்றுவதற்கு முந்தைய நிலை, உலகம் தோற்றம் பெற்ற இடைநிலை, உலகம் ஒடுங்கும் முடிவு நிலை ஆகிய மூன்றாகவும் ஆனவனே! மும்மூர்த்திகளே உன் திருவுருவத்தை அறிய முடியாதபோது வேறு யார் தான் உன்னை உணர முடியும். பந்து போன்ற மென்மையான விரல்களையுடைய அம்மையோடு அடியவர்களின் பழைய குடில்கள் தோறும் எழுந்து காட்சியருளும் கருணை கொண்டவனே! நெருப்பு போன்ற செம்மேனி காட்டி நித்தமும் வாசம் செய்யும் திருப்பெருந்துறைத் திருக்கோவில் காட்டி அடியவரை ஆட்கொள்ள வரும் அந்தண உருவங்காட்டி எங்களை ஆட்கொண்டாய். அருமையான அமுதம் போன்றவனே! நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 28
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட்டது போலவும் தோற்றமளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராம பட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ்ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட்டார். 

ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்து ஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர் குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக