செவ்வாய், 2 ஜனவரி, 2018

மார்கழி உற்சவம் 22

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி



பாடல் எண் : 02
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் 
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர மற்று அண்ணல் அம்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் 
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பாடல் விளக்கம்‬:
இந்திரனுக்கு உரிய கிழக்குத் திசையில் சூரியன் தோன்றினான். இருள் விலகியது. எம்பெருமானே, சூரியன் மேலே எழ எழ, உலகில் வெளிச்சம் பரவுகிறது. உனது  மலர்த் திருமுகத்தில் தோன்றும் கருணையைப்போல, அது எங்களை வாழ வைக்கிறது. ஒருபக்கம் உன்னுடைய கண்களைப் போன்ற மலர்கள் நறுமணத்துடன்  மலர்கின்றன. இன்னொரு பக்கம் உன்னுடைய கண்களைப்போன்ற வண்டுகள் கூட்டமாகத் திரண்டு வந்து ஓசையிடுகின்றன. இத்தகைய திருப்பெருந்துறையில்  எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, அருள்நிதியைத் தருவதற்காக வரும் ஆனந்த மலையே, அலைகடலே, பள்ளி எழுந்தருள்வாய்!.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 22
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுகச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!.

இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை... அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.

இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கோபியர்களே! நீங்கள் எல்லோரும் வந்த காரணம் என்ன? என்று கண்ணன் கேட்கிறான். உன்னை விட்டுப் பிரிந்திருந்த சாபம் நீங்கவேண்டும். இனியும் அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது. அழகு, விசாலம், போகப் பொருள்கள் நிறைந்த இந்த பூமியில் வாழும் அரசர்கள் தங்களது அபிமானம் இழந்து, உன்னுடைய அருள் நோக்கே வேண்டும் என்று கூட்டங் கூட்டமாக திருப்பள்ளி அறையின் வாசலில் நிற்பதுபோல், நாங்களும் ஸ்த்ரீத்வ அபிமானம் இழந்து வந்து நிற்கிறோம். உன்னை வந்து அடைவோமோ என்று எண்ணினோம், அடைந்துவிட்டோம். 

கிண்கிணியைப் போன்று இருக்கும் அழகிய தாமரைக் கண்ணால் எங்களை மெல்ல கடாக்ஷிக்க வேண்டும். வாடிய பயிரின் மேல் ஒரு பாட்டம் பெருமழை பொழிவதுபோல் இல்லாமல், மாத உபவாசிக்குப் புறச்சோறு இடுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடாக்ஷிக்க வேண்டும். ஒருவன், ஒருமாத காலம் பட்டினி இருந்தால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவனுடைய உடலுக்கு உணவுச்சத்து பிடிப்பதற்கு, சோற்றை நன்கு அரைத்து உடம்பில் பூசுவார்களாம். இது முற்காலத்தில் செய்யும் வைத்தியம். இதனால் உடம்பில் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக வரும். அதுபோல் நீ சிறிது சிறிதாகப் பார்த்தால், உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் பிரிவாற்றாமை என்னும் நோய் நீங்கும். சூரியனையும் சந்திரனையும் போன்ற கண்களால் எங்களைக் கடாக்ஷித்தால் எங்கள் மீது இருக்கும் சாபமும் நீங்கும்.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக