செவ்வாய், 2 ஜனவரி, 2018

மார்கழி உற்சவம் 21

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி


மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி என்பது, "சுப்ரபாதம்" என வடமொழியில் வழங்கும். வைகறையில் அதிகாலைப் பொழுதில் இருள் நீங்கீ ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.

பக்தி இலக்கியங்களில் ஓர் அழகான, நேசவடிவான உட்பிரிவு, திருப்பள்ளியெழுச்சி. பள்ளி என்றால் படுக்கை என்பது பொருள். துயின்று கொண்டிருக்கும்  இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. திருமாலுக்குத் தொண்டரடிப்பொடியாழ்வாரும், சிவபெருமானுக்கு மாணிக்கவாசகரும் திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார்கள்.


பாடல் எண் : 01
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே 
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் 
எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ் 
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எமை உடையாய் 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பாடல் விளக்கம்‬:
என் வாழ்வில் அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் சிவபெருமானே, உன்னைப் போற்றுகிறேன். பொழுது புலர்ந்துவிட்டது. உன்னுடைய பூப்போன்ற  திருவடிகளில் மலர்களைத் தூவி வணங்குகிறோம். உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலரும் அழகிய புன்னகையைக் கண்டு உன்னுடைய திருவடியைத் தொழுகிறோம். சேற்றில் தாமரைகள் மலர்கின்ற குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, இடபக்கொடியை  உடையவனே, எங்களை அடிமையாகக் கொண்டவனே, எம்பெருமானே, பள்ளி எழுந்தருள்வாய்!.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பாசுர விளக்கம்:
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்... ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து. 

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக