ஞாயிறு, 1 ஜனவரி, 2017

06 திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் 41 - 50


பாடல் எண் : 41
முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன்மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
திதலைச் செய் பூண்முலை மங்கை பங்கா என் சிவகதியே.

பொருளுரை:
தேமல் படர்ந்த அணி பூண்ட கொங்கைகளையுடைய உமை பாகனே! என் இன்ப நெறியே! சிவபெருமானே! முதலை போன்ற கொடுமையையுடைய, சிவந்த வாயைக் கொண்டுள்ள மாதரது ஆசையாகிய வெப்பம் மிகுந்த நீரில் ஆழ முழுகி, நடுக்கம் உறுகின்ற என்னை, விட்டு விடுவாயோ? புலால் நாற்றமுடைய தசை நிறைந்த, நோய்க்கு இடமாகிய உடம்பைத் தாங்க மாட்டேன். இந்நிலை தகுமோ? தகுமோ?.


பாடல் எண் : 42
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண்தலை முழையில்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி
மதிநெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே.

பொருளுரை:
வெண்மையான தலையாகிய வளையை இருப்பிடமாக உடைய ஒளியையுடைய பாம்பானது, நோக்கிச் சற்றுப் படமெடுத்து அதனைச் சுருக்கிக் கொள்ளவும், பிறைச்சந்திரன், அதனைக் கண்டு பயந்து, கங்கையாகிய பெரிய நீர் நிலையில் மூழ்கி மறைந்து கொள்ளும் சடையையுடைய தலைவனே! அடியேனுக்கு உயர் ஞான நெறியை உன் திருவடிகள் கொடுத்தருளவும், உடல் நீங்கப் பெறவில்லை. ஊழ்வினையுடைய அடியேனை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 43
மன்னவனே ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல்
சொன்னவனே சொல் கழிந்தவனே கழியாத் தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனே இம் முழுதையுமே.

பொருளுரை:
மேலான வேதமாகிய உண்மை நூலினைச் சொன்னவனே! சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே! நீங்காத அடியார்க்கு முன் நிற்பவனே! அவர்க்கு ஆதரவாகப் பின் நிற்பவனும், இவ்வெல்லாமும் ஆனவனே! தலைவனே! உன்னை வந்து கலக்கும் விதத்தை அறியாத சிறியேனுக்கு இன்ப விளக்கமாய்த் திகழ்பவனே! விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 44
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரித் தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய் நின்வெறி மலர்த்தாள்
தொழுது செல்வானத் தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான்
பழுது செய்வேனை விடேல் உடையாய் உன்னைப் பாடுவனே.

பொருளுரை:
எம்பெருமானே! உடையவனே! முழுக் கூர்மையை உடைய வேற்படை போன்ற கண்களையுடைய மாதரார் என்கிற பெரு நெருப்பில் முழுகுகின்ற வெண்ணெய் போன்ற என்னை விட்டு விடுவாயோ? உன்னை நான் புகழ்ந்து பாடுவேன். உனது மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடியை வணங்கிச் செல்லுகின்ற பரவெளித் தொண்டரோடு சேர்ப்பாயாக. குற்றம் செய்யும் என்னைக் கைவிடாதே! வணக்கம்.


பாடல் எண் : 45
பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன் சிவன் எவ்விடத்தான் எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன் கிடந்து உள் உருகேன் நின்று உழைத்தனனே.

பொருளுரை:
மாணிக்கமே! நின் புகழைப் பாடமாட்டேன். நின்னை வணங்கேன். எனக்கு ஒளித்துக் கொண்ட உன் பொருட்டே, பசிய ஊனுடம்பைத் தொலைத்திடாத என்னை விட்டு விடுவாயோ? வியப்படைந்து அவ்விடத்தே, அலறித் தேடிற்றிலேன்; சிவபெருமான் எவ்விடத்திலுள்ளான்? யார் அவனைக் கண்டனர்? என்று கேட்டு ஓடிற்றிலேன். மனம் கசிந்து அன்பு செய்யேன்; வீணே நின்று வருந்தினேன்.


பாடல் எண் : 46
உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழைதருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்று என்று அறைவன் பழிப்பினையே.

பொருளுரை:
மான் போன்ற பார்வையையுடைய பெண்டிரது, கொங்கையின்கண் பலாக்கனியில் மொய்க்கும் ஈயை ஒத்து விரும்புகின்ற என்னை விட்டு விடுவாயோ? விட்டு விடுவாயாயின், கடல் விடமுண்ட மேகம் போன்ற கருமையான கழுத்தை உடையவன்; குணம் இல்லாதவன்; மானிடன்; குறைந்த அறிவுடையவன்; பழைய பெரிய பரதேசி; என்று அடிக்கடி உன் இகழ்ச்சியை எடுத்துச் சொல்வேன்.


பாடல் எண் : 47
பழிப்பில் நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண்மணிப் பணிலம்
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்தப் பெருமை
தழிச்சிறை நீரில் பிறைக்கலம் சேர்தரு தாரவனே.

பொருளுரை:
ஆகாய கங்கை, வெண்மையான மணியாகிய முத்தினையும், சங்கினையும், ஒதுக்கி மந்தார மலர்களைத் தள்ளுகின்ற அணையாகிய பெருமையைப் பொருந்திய சிறைப்பட்ட அந்நீரில், பிறையாகிய தோணி சேர்தற்கிடமாகிய, கொன்றை மாலையை யுடையவனே! பழிப்பற்ற உன் திருவடியின் பழம் தொண்டினை அடைந்து, அது நழுவி விழ, உன்னை நிந்தித்துக் கொண்டு, திகைத் திருந்த என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 48
தாரகை போலும் தலைத்தலை மாலை தழல் அரப் பூண்
வீர என் தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார்
ஆரடியான் என்னின் உத்தரகோச மங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான் என்று நின்னைச் சிரிப்பிப்பனே.

பொருளுரை:
நட்சத்திரம் போல, தலையில் தலைமாலையையும், நெருப்புப் போற்கொடிய பாம்பாகிய ஆபரணத்தையும் அணிந்த வீரனே! என்னை விட்டு விடுவாயோ? விட்டுவிடில் மேலோர் என்னை நோக்கி, யாருடைய அடியான் என்று கேட்டால், திருவுத்தரகோச மங்கைக்கு வேந்தனாகிய சிவபிரானது சிறப்புடைய அடியாருக்கு அடியவன் என்று சொல்லி, அவர்கள் உன்னைச் சிரிக்கும்படி செய்வேன்.


பாடல் எண் : 49
சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கு என்று
விரிப்பிப்பன் என்னை விடுதி கண்டாய் விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர்ச் சுடுகாட்டு
எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன் என்று ஏசுவனே.

பொருளுரை:
என்னை நீ விட்டு விடுவாயோ? விட்டுவிட்டால், என்னை நீ சினந்து தள்ளிய குற்றத்தை, பிறர் நகையாடும்படி செய்வேன். எனது தொண்டையும் ஈசனுக்கே என்று எல்லோரும் சொல்லும்படி செய்வேன். கொடிய யானையின் தோலைப் பூண்ட பித்தன்; புலித்தோல் ஆடையணிந்த பித்தன்; விடத்தை உண்ட பித்தன்; ஊர்ச் சுடுகாட்டு நெருப்போடு ஆடும் பித்தன்; என்னையும் அடிமையாகக் கொண்ட பித்தன்; என்று உன்னை இகழ்ந்து உரைப்பேன்.


பாடல் எண் : 30
ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய் செம்பவள வெற்பின்
தேசுடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கிக்
காய்சின ஆலம் உண்டாய் அமுது உண்ணக் கடையவனே.

பொருளுரை:
செந்நிறமுடைய பவள மலை போன்ற ஒளியுடைய திருமேனியனே! என்னை அடிமையாக உடையவனே! சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய தேவர்களுக்கு இரங்கி, அவர்கள் அமுதம் உண்ணுதற் பொருட்டு, கொல்லும் வேகத்தோடு எழுந்த ஆல கால விடத்தை உண்டவனே! கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், வாழ்த்தினாலும், எனது குற்றத்தின் பொருட்டே மனம் வாடி, துக்கப்படுவேன்; அவ்வாறுள்ள என்னை விட்டு விடுவாயோ?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் திருப்பதிகம் முற்றிற்று --- ||

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

1 கருத்து: