ஞாயிறு, 1 ஜனவரி, 2017

06 திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் 31 - 40


பாடல் எண் : 31
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பாம்
விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனே ஒண் பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடந்தாள அடற்கரியே.

பொருளுரை:
இளமையுடைய தலைவனே! மிக்க குளிர்ச்சியுள்ள நீரும், ஆகாயமும், காற்றும், நிலமும், தீயுமாக நிற்கின்ற வித்தையுடையவனே! வெண்மை நிறமுடையவனே! கருமை நிறமுடையவனே! பசுமை நிறமுடையவனே! செம்மேனியுடையவனே! அழகிய படத்தையுடைய பாம்பாகிய அரைக்கச்சினை அணிந்தவனே! பெரிய அடிகளையுடைய வலி அமைந்த யானையை வென்றவனே! விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 32
அடற்கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்க்கு அல்லால்
தொடற்கரியாய் சுடர் மாமணியே சுடு தீச்சுழலக்
கடற்கரிதாய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

பொருளுரை:
மேலாகிய அடியார்களுக்கு அல்லாது ஏனையோர்க்குப் பற்றுதற்கு அருமையானவனே! ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே! சுடும் தீயாகிய ஒரு பூதமும் நிலைகலங்க, கடலின் கண் அருமையாய் உண்டாகிய நஞ்சை அமுதாக்கிய நீலகண்டப் பெருமானே! விடுதற்கு அருமையானவனே! வலி பொருந்திய யானையைப் போன்ற ஐம்புல ஆசைக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 33
கண்டது செய்து கருணை மட்டுப் பருகிக் களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர்த்தாள்
பண்டு தந்தால் போல் பணித்து பணிசெயக் கூவித்து என்னைக்
கொண்டு என் எந்தாய் களையாய் களையாய குதுகுதுப்பே.

பொருளுரை:
எம் தந்தையே! உன் கருணையாகிய தேனைப் பருகிக் களிப்படைந்து, மனம் போனவாறு செய்து, செருக்கித் திரிகின்ற என்னை விட்டு விடுவாயோ? உனது, மணம் அமைந்த தாமரை மலர் போன்ற திருவடியை முன்னே கொடுத்து அருளினாற்போல கொடுத்தருளி, உன் திருத்தொண்டினைச் செய்ய அழைப்பித்து என்னை ஏற்றுக் கொண்டு வீடுபேற்றுக்கு இடையூறாய் உள்ள களிப்பினைக் களைவாயாக.


பாடல் எண் : 34
குதுகுதுப்பு இன்றி நின்று என் குறிப்பே செய்து நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய் விரையார்ந்து இனிய
மதுமதுப் போன்று என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து
எதிர்வது எப்போது பயில்விக் கயிலைப் பரம்பரனே.

பொருளுரை:
நிறைந்த மலர்களையுடைய கயிலையில் வாழ்கின்ற மிகமேலானவனே! உன் திருவுளக் கருத்திற்கியைய நடப்பதில் மகிழ்ச்சியின்றி நின்று என் குறிப்பின்படி செய்து, உன் குறிப்பினை அறிவதில் விரைகின்ற என்னை விட்டு விடுவாயோ? வாழைப் பழத்தைப் போல என்னை மனம் குழையச் செய்து, மணம் நிறைந்து இனிதாய் இருக்கின்ற ஓர் இனிமையில் மற்றோர் இனிமை கலந்தது போன்று நீ எதிர்ப்படுவது எக்காலம்?.


பாடல் எண் : 35
பரம்பரனே நின்பழ அடியாரொடும் என்படிறு
விரும்பரனே விட்டிடுதி கண்டாய் மென் முயற்கறையின்
அரும்பர நேர் வைத்து அணிந்தாய் பிறவியை வாயரவம்
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே.

பொருளுரை:
மெல்லிய மதிக்கொழுந்தையும், பாம்பையும் சமமாக வைத்து அணிந்தவனே! எம்பிரானே! தீவினையுடைய நான், மனம் நடுங்கிப் புகலிடம் அடையும்படி, பிறப்பாகிய ஐந்தலை நாகம் தாக்குகின்றது. மிக மேலானவனே! உன் பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடும், எனது வஞ்சத் தொண்டினையும் ஏற்றுக் கொள்ளுகின்ற சங்காரக் கடவுளே! என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 36
பொதும்புறு தீப்போல் புகைந்து எரிய புலன் தீக்கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரையார் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு
அதும்பும் கொழுந்தேன் அவிர்சடை வானத்து அடல் அரைசே.

பொருளுரை:
மனம் நிறைந்த, தேன் ததும்புகின்ற மந்தார மலரில் தாரமாகிய வல்லிசையைப் பழகி, பின் மந்தமாகிய மெல்லிசையை ஒலிக்கின்ற, வண்டுகள் அழுந்தித் திளைக்கின்ற செழுமையாகிய தேனோடு கூடி விளங்குகின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள வலிமை மிக்க அரசனே! மரப்பொந்தினை அடைந்த நெருப்புப் போல, புகைந்து எரிகின்ற அந்தப் புலன்களாகிய நெருப்புப்பற்று தலால் வெப்பமுறுகின்ற என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 37
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால்
விரைசேர் முடியாய் விடுதி கண்டாய் வெண்ணகைக் கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா
வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை தான் வந்து அடர்வனவே.

பொருளுரை:
வெண்மையான பல்லினையும், கருமையான கண்ணையும் உடைய, திருப்பாற்கடலில் தோன்றிய திருமகள் வணங்கிப் பொருந்திய அழகிய திருப்பாதங்களையுடைய, பாம்பணிந்த பெருமானே! அரசனே! மணம் பொருந்திய முடியினையுடையவனே! மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, கொடிய வினைப் பயன்கள் வந்து தாக்குகின்றன. அறிவில்லாத சிறியேனது குற்றத்திற்குத் தீர்வாக, அஞ்சற்க என்று நீ அருள் செய்தல் அல்லாது விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 38
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அஞ்சொல் நல்லார் அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே
தொடர்வு அரியாய் தமியேன் தனி நீக்கும் தனித்துணையே.

பொருளுரை:
பரந்து எரிகின்ற நெருப்பை ஒத்தவனே! சுடுகாட்டின் அரசனே! தொண்டர்க்கு அமுதமே! அணுகுதற்கு அரியவனே! தனியேனது, தனிமையை நீக்குகின்ற தனித்துணையே! வருந்துகின்ற புலன்களால் உன்னைப் பிரிந்து அஞ்சி, இன்சொற்களையுடைய மாதர்களது மயக்கினை விட்டு நீங்கும் ஆற்றல் இல்லாத என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 39
தனித்துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய
மனத்துணையே என் தன் வாழ் முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத் துணையேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே.

பொருளுரை:
வினையேனது, மனத்துக்குத் துணையே! என்னுடைய வாழ்வுக்குக் காரணமானவனே! எனக்கு இளைத்த காலத்தில் நிதியாய் இருப்பவனே! துன்பங்களுக்கு ஆதாரமாகிய உடம்பென்னும் திண்ணிய வலையிற் கிடப்பதைத் தினை அளவு நேரங்கூடப் பொறுக்கமாட்டேன். ஒப்பற்ற துணையாகிய நீ இருக்க, செருக்கடைந்து, தலையாலே நடந்த வினையைத் துணையாகவுடைய என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 40
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண்மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும்
மலைத் தலைவா மலையாள் மணவாள என் வாழ் முதலே.

பொருளுரை:
வெள்ளிய சந்திரனது ஒரு கலையைத் தலையில் அணிந்தவனே! கருணைக்கு இருப்பிடமானவனே! கயிலாயம் என்கிற மலைக்குத் தலைவனே! மலை மகளாகிய உமாதேவிக்கு மணாளனே! என் வாழ்வுக்கு மூலமே! வலையினிடத்து அகப்பட்ட மான் போன்ற கண்களை உடைய மாதரது பார்வையாகிய வலையிற்சிக்கி, மயங்கி அலைந்த என்னை விட்டு விடுவாயோ?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக