சனி, 3 டிசம்பர், 2016

மனக்கவலை தீர்ப்பார் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்

வானத்தில் முழு நிலவு தனது அமுதமயமான கிரணங்களால் பூமியை வருடிக் கொண்டிருந்தது. பழமலைநாதனும் விருத்தாம்பிகையும் சற்றே கண்ணயர்ந்தது போலத் தோன்றினார்கள். அவர்களது ஆனந்தமயமான ஓய்வுக்கு இடையூறாக இருந்துவிடக் கூடாதென சலசலக்காமல் ஓடிக் கொண்டிருந்தது மணிமுத்தாறு. பிரபஞ்சத்தின் அத்தனை அசைவுகளுக்கும் காரணமான அரனும் அம்பிகையும் துயில் கொள்வார்களா என்ன? 


அதனால் அப்போது பூவுலகில் நிகழும் ஒரு சம்பவத்தைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள். தமிழகத்தில் விருத்தாசலம் நகரத்தினுள்ளே தனது வலது காலை எடுத்து வைத்தார் சிவச் சூரியனான சுந்தரர். நாடு நெடுக திருக்கூட்டத்தோடு சிவாலய தரிசனம் செய்து, அந்தந்த தல நாதனையும் தேவியையும் தமிழ் மணக்க, உள்ளம் உருகச் செய்யும் பாடல்களால் ஆராதித்த இவர் பழமலையை அடைந்தார்.

‘‘இது என்ன ஊர்?’’ - தம் கூட்டத்தாரிடம் கேட்டார். ‘‘பழமலை என்னும் விருத்தாசலம். பரமனின் திருநாமம் பழமலை நாதர். அன்னை விருத்தாம்பிகை’’ என்று பதில் வந்தது. பதில் சொன்ன சிவத் தொண்டரிடம், ‘‘ ஊரும் பழமலை. அம்பாளும் கிழவி. அரனோ தொண்டுக் கிழம். இவர்களைப் போற்றிப் பாடி ஆகப்போவது ஒன்றுமில்லை. நடையை கட்டுவோம்’’ என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். 

பிரபஞ்சத்திற்கே ஆதாரமான ஈசன், மெல்ல சிரித்தான். அன்னையோ அடுத்து நடக்கப் போவதை அறிந்து கொள்ளும் ஆவலோடு அரனின் முகம் பார்த்து நின்றாள். பழமலைநாதர் தன் ஞானக்குழந்தையான முருகனிடம், சுந்தரருக்குப் பாடம் புகட்டும்படி அருளாணை இட்டார். வேடனாய் வடிவெடுத்த வேலவன் சுந்தரர் கூட்டத்தை சுற்றி வளைத்தார். நாணேற்றி அம்பின் முனையில் நிறுத்தினார். அஞ்சி நின்ற சுந்தரர் வசமிருந்த பொன்னையும் பொருளையும் பறித்துக்கொண்டார் முருகன். அவற்றைத் திரும்பத் தரும்படி கெஞ்சினார் சுந்தரர்.

வேலவன், ‘‘பழமலை வந்து பெற்றுக்கொள்’’ என்று கம்பீரமாய் கட்டளை இட்டபோது தான், தான் ஈசனை மதிக்காமல் வந்தது தவறு என்பது பிடிபட்டது சுந்தரருக்கு.  உடனே ஓட்டமும் நடையுமாய் பழமலை வந்து ஈசனைப் பாடி துதித்தார். உடனே இறையருள் கிட்டியது அவருக்கு. அரனின் ஆணைப்படி பழமலை பதியின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாய் அமர்ந்தார் வேலவன். அதிலொருவர்தான் மணவாளநல்லூரில் கோயில் கொண்டுள்ள கொளஞ்சியப்பர். 

இவர் இங்கு கோயில் கொண்ட கதையும் சுவையானது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கொளஞ்சியப்பர் கோயில் கொண்டுள்ள மணவாளநல்லூர் அடர்ந்த காடாக இருந்தது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து கொண்டு, மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டியபடி அந்தப் பக்கம் செல்வார்கள். காலை பத்து மணி சுமாருக்கு செல்லும் அவர்கள் அந்தி சாய்வதற்குள் வீடு திரும்பி விடுவார்கள். அந்த அளவுக்கு மனித நடமாட்டம் மிகவும் குறைந்த பயமுறுத்தும் காட்டுப் பகுதி அது. 

அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கவும் குறைகளை போக்கவும் திருவுளம் கொண்டான் குமரன். ‘‘எல்லா மாடுகளும் படிப்படியா பால் தருது. ஒரு வெள்ள பசு மட்டும் நாலஞ்சி நாளாய் பொட்டு பால் கூட தர மாட்டேங்குதே. மடியில கைய வெச்சாலே எட்டி ஒதைக்குது’’ என்று மாடு மேய்ப்பவர்களில் ஒருவன் பேசிக் கொண்டிருந்த போதே, ‘‘அதோ போவுதே அந்த மாடா?’’ என்று கேட்டான் கூட இருந்தவன். 

‘‘ஆமாம்பா. இவ்ளோ வேகமா எங்க ஓடுது?’’ என்று கேட்டபடி கூட்டமாய் பின் தொடர்ந்தார்கள். ஓரிடத்தில் நின்ற பசு, தலையைத் திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தது. யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு கண்மூடி நின்றது. அதன் காம்பிலிருந்து பால் தானாய் பொழிந்தது. இதை மறைந்து நின்று பார்த்த மாடு மேய்ப்பவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். பசுவின் அருகில் சென்று ஆதூரமாய் அதைத் தொட்டார்கள். கண் திறந்து பார்த்த பசு தன் பணி முடிந்த நிறைவில் மெல்ல நகர்ந்தது. 

பால் பொழிந்த இடம் ஒரு கல் பீடமாக இருக்கக் கண்டார்கள். ஊராரிடம் நடந்ததைச் சொல்லி கூட்டி வந்து காட்டினார்கள். இவர் குமரக்கடவுள் என உணர்ந்த பெரியவர்கள், கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே தோன்றியதால் இவரை கொளஞ்சியப்பர் என வாய் நிறையப் போற்றி மகிழ்ந்தார்கள். ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து வழிபடத் தொடங்கினார்கள். அவரது அருள் மழையில் நனைந்த மக்கள் தங்களது நன்றியைத் தொடர்ந்து காட்ட, இன்று பெருங்கோயிலாய் எழுந்து நிற்கிறது கொளஞ்சியப்பர் திருக்கோயில். 

சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலின் அழகிய ராஜகோபுரம் காண்பவர் கண்களுக்கு விருந்தாகிறது. குமரனை நெஞ்சில் நிறுத்தி உள்ளே செல்கிறோம். பலி பீடம், கொடிமரம், மயில் ஆகியவற்றைக் கடந்து, துவாரபாலகர்களின் அனுமதியோடு உள்ளே செல்லும் நாம் கருவறைகளைக் காண்கிறோம். ஒன்றில் சித்தி விநாயகர். அண்ணனின் அருகே அருவமாய் சுயம்புவாய் தோன்றிய கொளஞ்சியப்பர் வீற்றிருக்கிறார். 

விநாயகருக்கும் கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் மூன்றடி உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கொளஞ்சியப்பர் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வாழும் பக்தர்களுக்கெல்லாம் மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்கிறார். நீதிபதி என்றால்? உண்மைதான், இத்தல நாதன் முருகன் ஒரு மகா நீதிபதி தான். 

இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது. கோயிலின் பிராகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நதி அருகே ஒரு இடமும் இருக்கிறது. பிராது கட்டுவது என்றால் என்ன? கோயில் அலுவலகத்தில் மனு எழுதிட தாள் கிடைக்கிறது. அதில், "மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர்  அவர்களுக்கு......." என ஆரம்பித்து, "நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.." என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு, கொளஞ்சியப்பர் சந்நதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். 

அதை, அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் அனுபவம். குழந்தைப் பேறு, கடன் தொல்லை தீர, திருடுபோன பொருள் கிடைக்க, ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, பிரிந்து இருக்கும் கணவன், மனைவி ஒன்று சேர, தீராத நோய் தீர, தொலைந்த கால்நடைகள் திரும்ப கிடைக்க, பங்காளி சண்டை, துரோகம் தொலைய, வேலை வேண்டி, வேலை மாற்றம் என பல கோரிக்கைகளை பிராது சீட்டில் எழுதி, குமரன் குறைகளைத் தீர்த்தருள்வான் என்ற நம்பிக்கையோடு கட்டுகிறார்கள்.

இவ்வாறு பிராது கட்டுவதற்குக் கட்டணம் உண்டு. பிராது கட்டணம் 4 ரூபாய். சம்மன் கட்டணம் 4 ரூபாய். தமுக்கு கட்டணம் 4 ரூபாய். இதர கட்டணம் 8 ரூபாய். இது தவிர படிப் பணமாக வழக்கு கொடுத்தவர் ஊரிலிருந்து மணவாளநல்லூர் கோயில் வரையான தூரத்திற்கு கிலோ மீட்டருக்கு 25 பைசா வீதம் தொகை செலுத்த வேண்டும். இது முதல் மாத கட்டணம். சில வழக்குகள் 90 நாள் வரை நடக்கக் கூடும். அந்த வழக்குகளுக்கு மீதி 2 மாதங்களுக்கு படி கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். வழக்கை வாபஸ் பெற விரும்பினால் 50 ரூபாய் செலுத்தி கொளஞ்சியப்பரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்! தமிழகம், இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, லண்டன், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து இந்த மகா நீதிபதியிடம் நீதி கேட்டு மனு கொடுக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது என்பது வியக்கவைக்கும் தகவல்.

இக்கோயிலில் வேப்பெண்ணெய் மருந்து தரும் வழக்கமும் இருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான வேப்பெண்ணெய் வாங்கி வந்து இத்தல அர்ச்சகரிடம் கொடுத்தால் அதை கொளஞ்சி நாதனின் திருவடியில் வைத்து அவனது அருள் பிரசாதமான விபூதியை சேர்த்து தெய்வீக மருந்தாக்கி தருவார். அதை பய பக்தியோடு பயன்படுத்தினால் தீராத சரும நோய்கள் எல்லாம் தீரும் என்பது வழிவழிவரும் நம்பிக்கை. 

இப்பகுதி விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கும் இந்த அருள் மருந்தை வாங்கி பூசி அவற்றின் நோய்களை தீர்ப்பார்கள். பல மாநிலங்களில் இருந்தும் இந்த மருந்தை பக்தர்கள் பெற்றுச் செல்வதை இன்றும் காணமுடிகிறது. இந்தக் கோயிலுக்கு சேவல், ஆடு, மாடுகள் போன்றவற்றை நேர்ந்து விடுவதும் வழக்கமாயிருக்கிறது. இத்தனை பெருமை மிக்க இத்தலம், ஒரு சித்தர் பூமி என்கிற நம்பிக்கையும் பரவலாக இருக்கிறது. பாம்பாட்டிச் சித்தரின் குருவாகிய அகப்பேய் சித்தர் இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போன்று கோரக்கர் ஜீவ சமாதி கொண்ட 12 தலங்களில் இதுவும் ஒன்றென சொல்கிறார்கள்.  

மணிமுத்தாற்றை தீர்த்தமாகவும், கொளஞ்சி மரத்தை தல விருட்சமாகவும் கொண்ட இத்தலத்தில் சித்தர்களின் அருளும், சிவனின் சாந்நித்யமும், குமரக் கடவுளின் நீதி பரிபாலனமும் நிறைந்திருக்கிறது. ஆண்டு தோறும் முருகனுக்கு உகந்த எல்லா நாட்களும் இங்கு திருநாள் தான். வைகாசி மாதத்தில் கூடுதலாய் விசேஷங்கள் நடந்தேறுகின்றன. விரைவில் கும்பாபிஷேகம் காணப்போகும் இந்த ஆலயம் ஒரு தெய்வீக நீதிமன்றம் என்றால் அது மிகையல்ல. இங்கு வீற்றிருக்கும் கொளஞ்சியப்பனின் செங்கோல், அனைவருக்கும் சமமான நீதி வழங்கி காக்கிறது என்பது சத்தியம் என்பதை ஆலயத்தில் குழுமும் பக்தர்கள் எண்ணிக்கையிலிருந்து உணர முடிகிறது. 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் திருக்கோயில். இத்தலத்திற்கு செல்ல விருத்தாசலத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதிகள் இருக்கின்றன. இங்கே இன்னொரு வசதி, மற்ற கோயில்களைப் போல மதிய வேளையில் நடை சாத்தப்படாததுதான். காலை 6 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 14 மணிநேரம் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.

நன்றி : எஸ்.ஆர். செந்தில்குமார்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக