சனி, 3 டிசம்பர், 2016

நலம் தரும் திருப்பதிகம் 11 திருப்பாச்சிலாச்சிராமம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மாற்றுரைவரதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ பாலசுந்தரி

திருமுறை : முதலாம் திருமுறை 044 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூர்ச்சைநோய் (நரம்புத் தளர்ச்சி), போதைப்பொருள் அடிமை முதலிய கொடிய நோய்களிலிருந்து மீள ஓதவேண்டிய திருப்பதிகம்.


திருஞானசம்பந்தப் பெருமான் பல தலங்களையும் தரிசித்தபடி, மழநாட்டைச் சேர்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் எனும் தலத்திற்கு வந்து சேர்ந்தார். அந்நாட்டு மன்னன் கொல்லி மழவனுடைய மகள் "முயலகன்" என்னும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள். சம்பந்தப் பெருமானை வரவேற்ற மன்னன், தனது மகளின் நோயைத் தீர்க்கும்படி வேண்டிக்கொண்டான். அதன்படி சம்பந்தப் பெருமான் இத்திருப்பதிகத்தைப் பாடி, மன்னனின் மகளைப் பீடித்திருந்த நோயைக் குணமாக்கினார். இத்திருப்பதிகத்தை 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், மேற்கண்ட நோய்கள் குணமாகும் என்பது திண்ணம்.

பாடல் எண் : 01
துணி வளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணி வளர் கொள்கையர் பாரிடஞ்சூழ ஆரிடமும் பலி தேர்வர்
அணி வளர் கோலமெலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே.

பொருளுரை:
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?.


பாடல் எண் : 02
கலை புனை மானுரி தோலுடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர் தாரணி மார்பர் தம்மடிகள் இவர் என்ன
அலை புனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே.

பொருளுரை:
மான்தோலை இடையில் ஆடையாகப் புனைந்து, கனல், ஞாயிறு, திங்கள் ஆகியன கண்களாக விளங்கத் தலையோடு அணிந்த முடியினராய், மாலை அணிந்த மார்பினராய், உயிர்கட்குத் தலைவரிவர் என்று சொல்லத் தக்கவராய், நீர்வளம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற இலை வடிவமான வேலை ஏந்திய இறைவர், இம்மழவன் மகளை வாடுமாறு இடர் செய்தல் இவர் பெருமைக்குப் பொருந்துவதாமோ?.


பாடல் எண் : 03
வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே.

பொருளுரை:
உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக்காலத்து இருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவரும், தலைமாலை முதலியவற்றை விரும்புபவரும், வெண்ணூல் பூண்பவரும், நஞ்சுடைய கண்டத்தவரும், அன்போடு தம்மை நினைத்த நம்மை விரும்பி நம் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவரும், மேகங்கள் தோயும் மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து எழுந்தருளிய செந்தீவண்ணரும் ஆகிய சிவபெருமான் பைந்தொடி அணிந்த மழவன் மகளாகிய இப்பெண்ணை வருத்துவது இவர் புகழுக்குப் பொருந்துவதோ?.


பாடல் எண் : 04
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூமதிக்கண்ணி
புன மலர்மாலை அணிந்து அழகாய புனிதர் கொலாம் இவரென்ன
அனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே.

பொருளுரை:
கார்காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற மாலை திருமேனியில் விளங்க, பிரிந்தவர்க்குக் கனலைத் தரும் தூய பிறைமதியைக் கண்ணியாகச் சூடி, வனங்களில் மலர்ந்த மலர்களால் ஆகிய மாலையைச் சூடி, அழகிய புனிதர் என்று சொல்லும்படி எழிலார்ந்த வண்பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து அடியவருக்கு, மனநிறைவு தருபவராய் உறையும் சிவபெருமான், இம்மங்கையை வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ?.


பாடல் எண் : 05
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு தத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே.

பொருளுரை:
மண்ணுலகில் அடியவர்கள் ஆட்டும் பால் நறுநெய் ஆகியவற்றை விரும்பியாடி, வளர்ந்த சடைமுடிமேல் கங்கையைச் சூடி, மொந்தை, முழா, குழல், தாளம், வீணை ஆகியன முழங்க வாய்மூரி பாடி ஆந்தை போன்ற விழிகளையுடைய சிறு பூதங்கள் சூழ்ந்தவராய்த் திருப்பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சந்தனக் கலவையை அணிந்த மார்பினையுடைய சிவபிரான் இத்தையலை வாடும்படி செய்து இப்பெண்ணிடம் தம் சதுரப்பாட்டைக் காட்டல் ஏற்புடையதோ?.


பாடல் எண் : 06
நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண்ணால் உற்றுநோக்கி
ஆறது சூடி ஆடரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர் தத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே.

பொருளுரை:
திருநீற்றை உடல் முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் மறக்கருணை காட்டிப் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டு, ஐவிரல் அளவுள்ள கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?.


பாடல் எண் : 07
பொங்கிள நாகமொர் ஏகவடத்தோடு ஆமை வெண்ணூல் புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்து அழகாய குழகர்கொலாம் இவரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே.

பொருளுரை:
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன் நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?.


பாடல் எண் : 08
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன் தன்னை ஈடு அழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே.

பொருளுரை:
அம்பின் வலிமையால் விசயனோடு போரிட்டு வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி, அருள் செய்தவரும் இராவணன் பெருவீரன் என்ற புகழை அழித்தவரும், மும்மூர்த்திகளுக்கும் தலைவராய் அவர்கட்கு நடுவே நின்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைப் புரிபவராய் எல்லோராலும் துதிக்கப் பெறும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மகாதேவராய சிவபிரான் திருப்பெயரையன்றி வேறு வார்த்தைகள் பேசுவதறியாத இப்பெண்ணை வாடச் சிதைவு செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல் ஆகுமோ?.


பாடல் எண் : 09
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால்
ஆலது மாமதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே.

பொருளுரை:
மேலே உள்ள திருமுடியை நான்முகன் தேடிக் கண்டான் இல்லை: கீழே உள்ள திருவடியை நீல நிறத்தை உடைய திருமால் தேடி அடைந்ததுமில்லை என்று உலகம் புகழுமாறு ஓங்கி அழலுருவாய் நின்றவரும், பெரிய முழுமதியை ஆலமரங்கள் சென்று தோயும் பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் பால் வண்ணருமாகிய சிவபிரான் இப்பைந்தொடியாள் வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?.


பாடல் எண் : 10
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும்
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவைகொள வேண்டா
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே.

பொருளுரை:
நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?.


பாடல் எண் : 11
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்து அழகாய புனிதர் கொலாம் இவரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவையேத்தச் சாரகிலா வினை தானே.

பொருளுரை:
உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண் பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நோய் தீர்க்கும் மேன்மை மிக்கதும், உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள் சாரா.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக