திங்கள், 8 பிப்ரவரி, 2016

திருநீலகண்டத் திருப்பதிகம் - பொது

திருமுறை : முதல் திருமுறை 116 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

"நோய்களும் துன்பங்களும் நீங்க ஓதவேண்டிய திருப்பதிகம்."

திருஞானசம்பந்தர் தன் அடியாருடன் திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த போது கொங்கு நாட்டில் விஷக்காய்ச்சல் பரவியிருந்தது. அந்த விஷ ஜூரம் அடியார்களையும் பற்றிக் கொண்டது.

"விஷ ஜூரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அடியார்களையும் காத்தருள வேண்டி அருளிய திருப்பதிகம் இது."

"செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்...!"

ஒவ்வொரு திருப்பாடலின் இறுதியிலும் ஆணையிட்டருளி கொங்கு நாடு முழுவதும் பிணி தீர்த்தார். மக்களை வாட்டிய விஷ ஜூரம் நாட்டை விட்டே ஒழிந்தது.


பாடல் எண் : 01
அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம் என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 02
காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு "கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே" என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 03
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்! 
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்!
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை "எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே"முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 04
விண்ணுலகு ஆள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
“புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!
கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் "புண்ணிய வடிவமானவர்" என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 05
மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே!. எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம் குறையைக் கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?. இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம் முற்பிறவிகளில் செய்த தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 06
மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி
பிறப்பில் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக் கொண்டு பூசித்து "உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள்" எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 08
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று


பாடல் எண் : 08
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!
திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் "தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே!" என உருகிப் போற்றுவோமாயின் சிவனடி வழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப் பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 09
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்ற அது ஆம் வினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத்தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத் தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.


பாடல் எண் : 10
சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.


பாடல் எண் : 11
பிறந்த பிறவியில் பேணி எம்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயின் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.

பாடல் விளக்கம்:
மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக