புதன், 17 பிப்ரவரி, 2016

05 திருவாசகம் - திருச்சதகம் 01 மெய்யுணர்தல்

"சதகம்" என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக மெய்யுணர்தல். பொய்யை விலக்கி, சிவமாகிய உண்மையை உணர்ந்து கொள்ளுதல்.


பாடல் எண் : 01
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரையார் கழற்கென்
கைதான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னை போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே.

பாடல் விளக்கம்:
எல்லாவற்றையும் உடையவனே! உனது மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய் நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக!.


பாடல் எண் : 02
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே.

பாடல் விளக்கம்:
எங்கள் மேலோனே தலைவனே! உன் திருவருளோடு கூடி இருக்கப் பெறுவேனாயின், இந்திரன், திருமால், பிரமன் ஆகிய இவர்களுடைய வாழ்வினைப் பொருளாக ஏற்கமாட்டேன். எனது குடி அழிந்தாலும் உன் அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன். நரகத்திற் புகுந்தாலும் அதனை இகழமாட்டேன். உன்னை அன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன்.


பாடல் எண் : 03
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே.

பாடல் விளக்கம்:
உத்தமனும் எமது தந்தையும், எம்மை அடிமையாக உடையவனும் ஆகிய இறைவனது திருவடியைக் கருதி உருகி, உன் மத்தம் கொண்ட மனத்துடன் கூடிய பித்தன் இவன் எனக் கண்டோர் சொல்லவும், ஊர்தோறும் திரிந்து அவரவர் மனக் கருத்துக்கு இசைந்தனவாகிய பல சொற்களைச் சொல்லவும், யாவரும் தங்கள் தங்கள் மனத்துக்கு இசைந்தவற்றைப் பேசவும் கேட்டு மனம் இறக்கப் பெறுவது எக்காலமோ?. 


பாடல் எண் : 04
சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விணாண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே.

பாடல் விளக்கம்:
முற்காலத்தில் தக்கனானவன் இறக்க, யாகத்தில் கொல்லப்பட்ட ஆட்டைத் தின்று, பாற்கடலில் தோன்றிய நஞ்சை அஞ்சி ஐயோ! எந்தையே! என்று முறையிட்ட நம்மவராகிய அவர்கள் தாமே எம்பெருமானோடு, மூவர் என்று எண்ணப்பட்டு விண்ணுலகை ஆண்டு மண்ணுலகில் தேவர் என்று சொல்லப்பட்டு, செருக்கடைந்து திரிகின்ற இறைவர்கள்? என்ன பாவமோ?.


பாடல் எண் : 05
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்காம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே.

பாடல் விளக்கம்:
தவத்தையோ செய்திலேன், குளிர்ந்த மலர்களால் அருச்சித்துக் குறைபாடின்றி வணங்க மாட்டேன், வீணாகவே பிறந்த பாதகன் நான், பக்தர்களுக்குச் சொந்தமாகிய சிவபோதம் என்னும் அரிய செல்வத்தை நான் பெற்றிலேன், உன்னை அடைவதற்கான நல்ல பிறவியை எனக்குத் தருவாயாக.


பாடல் எண் : 06
பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்கழற்கு அன்பு எனக்கு
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.

பாடல் விளக்கம்:
பரவி பலவகையாயிருக்கிற ஆராய்ந்து எடுக்கப் பெற்ற மலர்களை உன் திருவடிகளில் இட்டு, குறைபாடின்றி உன் திருவடிகளையே வணங்கி, வேண்டினவை எல்லாம் எங்களுக்கே பெறுதல் கூடும் என்று நிச்சயித்த அடியார்களுடைய மனத்தை ஒளித்து மற்றோரிடத்தில் நில்லாத கள்வா! பூரணமாக உன்னைத் துதிக்க, அடியேனுக்கும் உன் நெடிய கழலை அணிந்த திருவடிகளுக்குச் செய்ய வேண்டிய அன்பை இடையீடின்றி அருள் செய்வாயாக.


பாடல் எண் : 07
முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த்து முன்னாள்
செழுமலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதியிலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே.

பாடல் விளக்கம்:
உலகம் முழுமையும் படைத்தவனாகிய பிரமனை படைத்தவனாகிய திருமாலும், தலை வளைத்து முற்காலத்தில் செழுமையாகிய மலர்களை ஏந்திக் கொண்டு எவ்விடத்தும் தேடி நிற்க, அப்பாற்பட்டிருந்தவன்; இவ்விடத்தில் எமக்கு உபகாரியாய் சுடுகாட்டில் பேய்களோடு கூடி நடனம் செய்து கதியில்லாதவனாகி புலித்தோலைத் தரித்து உன்மத்த குணத்தை மேற்கொண்டு திரிந்து நிற்பவன். இஃது என்ன ஆச்சரியம்?.


பாடல் எண் : 08
உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும்
இழிதரு காலம் எக்காலம் வருவது வந்ததன் பின்
உழிதரு காலத்த உன்னடியேன் செய்த வல்வினையைக்
கழிதரு காலமுமாய் அவை காத்து எம்மைக் காப்பவனே.

பாடல் விளக்கம்:
சஞ்சரிக்கிற வாயுவும் அக்கினியும் நீருடன் பூமியும் ஆகாயமும் நசிக்கின்ற காலமானது எக்காலத்துண்டாவது, அவ்வாறு அக்காலமுண்டான பின்பும், நீடு வாழ்கின்ற திருவடியையுடைய எம் தந்தையே! உன் தொண்டனேன் செய்த வலிய வினைகளை நீக்கி அருளுக. கால தத்துவங்களாகிய அவைகளைக் காத்து எங்களையும் காக்கின்ற இறைவனே!. 


பாடல் எண் : 09
பவன் எம்பிரான் பனி மாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும்
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இப்பரிசே
புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.

பாடல் விளக்கம்:
பவன் என்னும் திருப்பெயர் உடையவன்; எமக்கு உபகாரகன்; குளிர்ச்சி பொருந்திய பெருமையமைந்த தலைமாலையை அணிந்தவன்; தேவர் பெருமான்; சிவன் என்னும் பெயர் உடையவன்; எமக்குபகார சீலன்; என் தாழ்வைக் கண்டு வைத்தும் என்னை ஆண்டு கொண்டருளினன். ஆதலால் இவ்வுலகத்தார் அவனே எமக்குத் தலைவன் என்றும் நான் அடியவன் என்றும் இவ்வாறே தெரியும் தன்மையைச் சொல்லுக. 


பாடல் எண் : 10
புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே
தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை எப்புன்மையரை
மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணித்தி அண்ணா அமுதே
நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே.

பாடல் விளக்கம்:
என் தொளைக்காத மாணிக்கமே! நான் உன் அடியார்களுக்கு இடையே வாழவும், தகுதி உடையவன் அல்லன். அங்ஙனமாக அடியேனை உனக்கு ஆளாக்கிக் கொண்ட தன்மையானது தகுதியோ? எவ்வகைப் புன்மையோரையும் மிகவும் உயர்வித்துத் தேவர்களைப் பணியச் செய்கிறாய். கிடைக்கலாகாத அமிர்தமே! எம்பிரானே! என்னை நீ செய்த கூத்து நகைப்பதற்கு உரியதே ஆகும்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

1 கருத்து: