சனி, 20 பிப்ரவரி, 2016

கஷ்டங்களை தீர்க்கும் பஞ்சபுராணம்

பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. அவற்றில் தேவாரம் (7 திருமுறைகள்), திருவாசகம் (திருக்கோவையார்), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்ச புராணம் பாடுதல் எனப்படுகிறது. 

சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்த புராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை. 

சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள். அவர்கள் முடித்த பிறகு திராவிட வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்ச புராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.


விநாயகர் வணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே 

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.


01. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - முதல் திருமுறை


தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் 
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. 

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, தூய வெண்மையான பிறையை சூடி, காட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன் இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ! 


02. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - இரண்டாம் திருமுறை


என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே. 

முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்?.


03. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - மூன்றாம் திருமுறை


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே. 

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் "நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தாகும்.


04. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - நான்காம் திருமுறை


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே. 

புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.


05. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - ஐந்தாம் திருமுறை


அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே. 

நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றான். அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ?.


06. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - ஆறாம் திருமுறை


அரியானை அந்தணர்தம் சிந்தை யானை 
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழ் ஒளியைத் தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 


07. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை


பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை 
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் 
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, "அருட்டுறை" என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய், அதனால் எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி இப்பொழுது, "உனக்கு அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.


08. மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம் - எட்டாம் திருமுறை


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.

பாலை காலமறிந்து கொடுக்கின்ற தாயைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு புறங்களிலும் உடன் திரிந்த அருட்செல்வமே! சிவபிரானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதியாகப் பற்றியுள்ளேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.


09. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு - ஒன்பதாம் திருமுறை 


பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

பாலை உண்பதற்கு வியாக்கிர பாதமுனிவர் புதல்வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால் பெறாது அழுது வருந்த அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெருமானாய், ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள் செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத் திருப்பதியிலே வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாக்கொண்டு அருளை வழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமானுக்கு பல்லான்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.


10. திருமூலர் அருளிய திருமந்திரம் - பத்தாம் திருமுறை 


சிந்தையது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.

அரசனைத் தாங்கும் அரசு கட்டில் அரசனெனவே மதிக்கப்படும். அதுபோல் கொற்றந்தரும் முரசு கட்டில் கொற்றவை எனவே மதிக்கப்படும். இம்முறையே சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிந்தை சிவனெனவே மதிக்கப்படும். அக்குறிப்புத் தோன்றச் "சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை" என ஓதினர். பால் கலமும் பால் போல் மதிக்கப்படும். மேலும் உயிருள்ள உடலும் உயிர்போன்றே மதிக்கப்படுமல்லவா? அஃதும் ஒப்பாகும். நீங்கா நினைவுடன் திருவைந்தெழுத்தினை நினைவார் ஓங்கும் செந்நெறிச் செல்வராவர். அத்தகையார் திருவுள்ளத்தின்கண் சிவனும் வெளிப்பட்டருள்வன். திருவருளால் உள்ளந்தெளியக் 'கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகிளத்தல்' என்னும் முறையான் தெளியவல்ல நற்றவத்தார்க்குச் "சிந்தையினுள்ளே சிவன்" எழுந்தருளி வெளிப்பட்டு வீற்றிருந்தருள்கின்றனன்.


11. சேரமான் அருளிய பொன்வண்ண அந்தாதி  - பதினொன்றாம் திருமுறை


பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.

தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே. தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே. பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே. 


12. சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் - பன்னிரண்டாம் திருமுறை 


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். 

எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம் அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 


ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம் தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம் தான். உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பது உன் ஒரு முகம் தான். கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதி காத்ததும் உன் ஒரு முகம் தான். உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம் தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம் தான். அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மை வாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.


கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்


வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும், வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசன் நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும், உயிரகள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும், நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட தர்மஙகள் வளர வேண்டும், தன்னலமற்ற நல்ல வழிபாடுகள் பெருக வேண்டும், பெருமை மிக்க சைவ நீதி உலகமெல்லாம் பரவ வேண்டும்.


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.

முருகனின் பரந்த தோள்கள் பன்னிரண்டும் வாழ்க. ஆறுமுகமும், மலையைப் பிளக்கும் சிறந்த வேலும் வாழ்க. சேவலும், அவன் வலம் வரும் மயிலும் வாழ்க. தெய்வானையும், வள்ளியும் வாழ்வார்களாக. அடியவர்களும் நல்வாழ்வு வாழட்டும். 


திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளியது 


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க. அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க. வேள்வி, வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக் கூட்டங்கள் வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக. சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடு விளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க. உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக. இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


3 கருத்துகள்: