திருமுறை : நான்காம் திருமுறை 18 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
"எந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல் தடுப்பதற்கு ஓத வேண்டிய திருப்பதிகம்." அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும் உயிர்ப்பித்தருள வேண்டி அப்பர் பெருமான் பாடிய பதிகம்.
திருப்பழனம் சென்ற அப்பர் பெருமான் அங்கிருந்து அருகிலிருந்த திங்களூர் என்ற தலத்திற்குச் செல்கின்றார். திருநாவுக்கரசரைத் தனது தெய்வமாக ஏற்றுக்கொண்ட அப்பூதி அடிகள் என்ற நாயனார் வாழ்ந்து வந்த தலம் திங்களூர். திங்களூர் வந்த அப்பர் பிரான் கடைத்தெருவில் திருநாவுக்கரசர் மருத்துவசாலை, திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல், திருநாவுக்கரசர் அன்னதான சாலை என்று பல இடங்களில் தனது பெயரைக் கண்டு வியப்பு அடைந்து, அவைகளை நிறுவியவர் யார் என்று வினவுகின்றார். அதற்கு அவற்றை நிறுவியவர் அப்பூதி அடிகள் என்றும் அவரது இல்லம் அருகில் உள்ளது என்றும் அங்குள்ளோர் விடையளித்தனர். அப்பூதி அடிகளின் இல்லம் சென்று அவரை சந்தித்த அப்பர் பிரான், அவர் நிறுவிய அமைப்புகளுக்கு அவரது பெயரை இடாமல் வேறு ஒருவர் பெயரை இட்டது ஏன் என்று கேட்டார்.
வந்தவர் நாவுக்கரசர் என்பது தெரியாமல், சைவ சமயம் மறுபடியும் தழைப்பதற்கு காரணமாகவும், சிவபிரானின் அருளை[ பூரணமாகப் பெற்றதால் சமணர்களின் சூழ்ச்சியிலிருந்து தப்பிய அடிகளாரை வேறு எவரோ ஒருவர் என்று கூறிய நீர், சைவர் தானா, நீர் யார் எங்கிருந்து வருகின்றீர் என்று அப்பூதி அடிகள் மிகவும் கோபமாக கேட்டார். சமண சமயத்தில் பல வருடங்கள் கழித்த பின்னர் சூலை நோய் கொடுக்கப்பட்டு சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அடியேன் யான் என்று வந்தவர் பதில் கூறினார். வந்தவர் திருநாவுக்கரசர் என்பதை அறிந்த அப்பூதி அடிகளார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவர் தமது இல்லத்தில் அமுது அருந்தவேண்டும் என்று வேண்டினார்.
அப்பர் பிரானுக்கு அமுது படைப்பதற்காக கொல்லையிலிருந்து வாழையிலை அறுக்கச் சென்ற அடிகளாரின் மூத்த மகன், பாம்பு தீண்டவே இறந்தான். மகன் இறந்த விவரம் அறிந்தால் அப்பர் பிரான் உணவு கொள்ளமாட்டார் என்று பயந்து, மகன் இறந்ததை மறைத்து, அப்பூதி அடிகள் அப்பர் பிரானுக்கு அமுது படைக்க முற்பட்டார். உணவு உட்கொள்ளும் முன்னர், இல்லத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் திருநீறு அணிவிக்கத் திருவுள்ளம் கொண்ட அப்பர் பிரான், அங்கே அடிகளாரின் மூத்த மகன் இல்லாமல் போகவே அவரையும் அழைத்து வருமாறு கோரினார். அப்பூதி அடிகளார் அவன் இப்போது உதவான் என்று மறுமொழி கூறவே அதனைக் கேட்ட அப்பர் பிரான் நடந்ததை கூறுமாறு அடிகளாரை பணித்தார். தனது மூத்த மகனுக்கு நேர்ந்ததை உள்ளவாறு அப்பூதி அடிகளார் உரைக்கவே, அப்பர் பிரான் இறந்த மகனின் உடலை திருக்கோயில் முன் கிடத்தி, இந்த பதிகத்தை பாடினார்.
இந்தப் பதிகத்தின் எந்த பாடலிலும் அப்பர் பிரான் சிவபிரானிடம் எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை. சிறுவனை பாம்பு கடித்து அவன் இறந்த செய்தியும் நேரடியாக சொல்லப் படாமல், கடைப் பாடலில் பாம்பின் பல் குறிப்பிடப்பட்டு குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. அனைத்துப் பாடல்களிலும் சிவபிரானின் அடையாளங்களும், அவனது புகழ்ச் செயல்களும் கூறப்படுகின்றன. வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ என்று மணிவாசகப் பெருமான் பாடியதற்கு ஏற்ப, நமது தேவைகளை, நாம் சொல்லாமலே அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த சிவபிரானிடம் நாம் தனியாக வேண்டுகோள் ஏதும் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை; அவனது புகழினைப் பாடினால் போதும் நமது குறைகள் தீர்க்கப் படும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் மூலம் நமக்கு உணர்த்துகின்றார் போலும் பத்து பாடல்களும் பாடி முடிக்கப்பட்ட பின்னர் அப்பர் பிரானின் உள்ளக் கிடக்கையை அறிந்து கொண்ட சிவபிரான், சிறுவனின் உடலில் இருந்த நஞ்சினை நீக்குகின்றார். இந்த பதிகத்தில் வரும் கொலாம் என்பது பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல் ஆகும்.
பாடல் எண் : 01
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே
பாடல் விளக்கம்:
சிவபிரானது உள்ளம் அவர் இருக்கும் ஒப்பற்ற கயிலை மலை போன்று மிகவும் உயர்வானது. சிவபிரானின் கருணையால் ஒப்பற்ற நிலைக்கு உயர்ந்த சந்திரனை தனது சென்னியில் சூடியவர் சிவபெருமான். தனது கையில் வெண் தலையை ஒப்பற்ற பலிப் பாத்திரமாக ஏந்தியுள்ளவர் சிவபிரான். அவரது வாகனமாகிய இடபமும் ஒப்பற்றது.
பாடல் எண் : 02
இரண்டு கொலாம் இமையோர் தொழுபாதம்
இரண்டு கொலாம் இலங்கும் குழை பெண் ஆண்
இரண்டு கொலாம் உருவம் சிறு மான்மழு
இரண்டு கொலாம் அவர் எய்தின தாமே.
பாடல் விளக்கம்:
இமையோர் தொழும் சிவபிரானின் பாதங்கள் இரண்டு. அவரது காதினில் அணிந்திருக்கும் ஆபரணம் தோடு, குழை என்று இரண்டு வகையானது. அவரது உருவம் பெண் ஆண் என்று இரண்டு தன்மையையும் கொண்டது. அவர் திருக்கைகளில் ஏந்தியிருக்கும் பொருள்கள் இரண்டு, மான் மற்றும் மழு ஆகும்.
பாடல் எண் : 03
மூன்று கொலாம் அவர் கண்ணுதல் ஆவன
மூன்று கொலாம் சூலத்தின் மொய்யிலை
மூன்று கொலாம் கணை கையது வின்னாண்
மூன்று கொலாம் புரம் எய்தன தாமே.
பாடல் விளக்கம்:
அவரது நெற்றிக்கண்ணையும் சேர்த்து சிவபிரானின் கண்கள் மூன்று. அவர் ஏந்தியிருக்கும் சூலம் மூன்று இலைகளைக் கொண்டது. அவர் கையில் திகழும் வில், மூன்று வேறு வேறு பொருட்களை (வில்லாக இருக்கும் மேருமலை, நாணாகத் திகழ்வது வாசுகி பாம்பு, அம்பாக இருப்பது திருமால் என்று மூன்று பொருட்களை) தனது அங்கங்களாக உடையது. அந்த வில்லில் உள்ள அம்பு எய்யப்பட்டது மூன்று புரங்களை நோக்கி. .
பாடல் எண் : 04
நாலு கொலாம் அவர் தம் முகமாவன
நாலு கொலாம் சனனம் முதல் தோற்றமும்
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடின தாமே.
பாடல் விளக்கம்:
எம்பெருமானுடைய திருமுகங்கள் நான்கு. அவரால் படைக்கப்பட்ட படைப்பு - நிலம், கருப்பை, முட்டை, வியர்வை, இவற்றிலிருந்து தோன்றும் நால்வகையது. அவர் வாகனமாகிய காளையின் பாதங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவர் பாடிய வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்ற நான்கு போலும்.
பாடல் எண் : 05
அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சு கொலாம் அவர் வெல் புலன் ஆவன
அஞ்சு கொலாம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு கொலாம் அவர் ஆடின தாமே.
பாடல் விளக்கம்:
சிவபிரான் தன் திருமேனியில் ஆபரணமாக அணிந்திருக்கும் நாகத்தின் படங்கள் ஐந்து. சிவபிரான் வென்ற புலன்கள், மெய், வாய், கண் மூக்கு செவி என்று ஐந்தாவன. சிவபிரானால் காயப்பட்ட மன்மதன் பயன்படுத்தும் பூங்கணைகள், தாமரை, அசோகு, மா, முல்லை மற்றும் கருங்குவளை ஆகிய ஐந்து பூக்கள். சிவபிரான் விரும்பி நீராடுவது, பசுக்களிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம் மற்றும் கோமியம் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சகவியம் ஆகும்.
பாடல் எண் : 06
ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கின தாமே.
பாடல் விளக்கம்:
சிவபிரான் படைத்த வேதத்தின் அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகிய ஆறு. அவரது மகனார் முருகனின் முகங்கள் ஆறு. அவர் சூடியிருக்கும் மாலையைச் சூழும் வண்டுகளின் கால்கள் ஆறு. அவரால் ஏற்படுத்தப்பட்ட சுவைகள், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என்னும் ஆறு வகையில் அடங்குவன.
பாடல் எண் : 07
ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழு கொலாம் ஆளும் உலகங்கள்
ஏழு கொலாம் இசை ஆக்கின தாமே.
பாடல் விளக்கம்:
ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள் ஏழு வகைப் பட்டன. அவர் படைத்தவை ஏழு கடல்கள், அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள். அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவங்கள் உடையவை.
பாடல் எண் : 08
எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டு கொலாம் அவர் சூடும் இனமலர்
எட்டு கொலாம் தோள் இணையாவன
எட்டு கொலாம் திசை ஆக்கின தாமே.
பாடல் விளக்கம்:
சிவபிரானின் அழிவில்லாத குணங்கள் எட்டு. அவர் விரும்பி சூடும் மலர்கள் எட்டு. ஒன்றுக்கொன்று இணையாக காணப்படும் அவரது தோள்கள் எட்டு. அவர் ஆக்கிய திசைகள் எட்டு.
பாடல் எண் : 09
ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடம் தானே.
பாடல் விளக்கம்:
இவ்வுடம்பில் அவர் வகுத்த துவாரங்கள் ஒன்பது. அவர் மார்பில் அணிந்த பூணூலின் இழைகள் ஒன்பது. அவருடைய அழகிய சுருண்ட சடை ஒன்பதாக வகுக்கப்பட்டது. அவர் படைத்த நிலவுலகம் ஒன்பது கண்டங்களை உடையது போலும்.
பாடல் எண் : 10
பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை
பத்து கொலாம் அடியார் செய்கை தானே.
பாடல் விளக்கம்:
அவர் அணிந்த ஐந்தலைப் பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து. அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து. அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து. அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்துப் போலும்.
இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், உடலில் இருந்த விடம் நீங்கவே அப்பூதி அடிகளாரின் மூத்த மகன் உறக்கம் கலைந்து எழுபவன் போல் எழவே, அப்பர் பிரான் அவனுக்கும் திருநீறு அணிவித்து பின்னர் அமுது அருந்தினார். பாம்பு கடித்து இறந்த தனது மகன் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததற்கு மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக அப்பூதி அடிகள் வருத்தம் அடைகின்றார். அவரது வருத்தத்திற்கு காரணம், மூத்த மகனின் இறப்பினால் அப்பர் பிரான் அமுது அருந்துவது தாமதப்பட்டது என்பதே ஆகும்.
நன்றி : திரு வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக