வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

05 திருவாசகம் - திருச்சதகம் 04 ஆத்மசுத்தி


பாடல் எண் : 01
ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பு இலை என்புருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணையிலி பிண நெஞ்சே
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே.

பாடல் விளக்கம்:
எவ்விதச் செயலுமின்றி பிணம் போல் கிடக்கிற நெஞ்சே உனக்குத் தில்லைக் கூத்தன் திருவடிமீது ஒரு சிறிதும் அன்பில்லை. அன்பு மேலிட்டு நீ ஆடுவதுமில்லை, எலும்புருகப் பாடுவதுமில்லை. உணர்ச்சி மிகுந்தவனாய் பதைபதைப்படைவதுமில்லை. இறைவனை வணங்குவதில்லை. அவனுடைய செங்கமலத் திருவடிகளைச் சிரமீது தரிப்பதில்லை. அந்த திருவடிகளை மலர்த்தூவி அலங்கரிப்பதும் இல்லை. அவனுது நாமங்களை இசைத்தபடி வீதிகளில் போவதில்லை. இறைவனிடம் நாட்டமில்லாத உன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது. இறைவுணர்வு இல்லாத மனம் பிணத்துக்குச் சமம். அது இறைவனின் துணையின்றி உயர்நிலையை எட்ட முடியாது.


பாடல் எண் : 02
அறிவிலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
நெறியெலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப்பானைப்
பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் மாறாடுதி பிண நெஞ்சே
கிறியெலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.

பாடல் விளக்கம்:
நான் அறியத் தக்கவைகவைகளை அறியும் அறிவில்லாதிருந்தபோது ஈசன் என் உள்ளத்தில் எழுந்தருளி அறியத்தக்கவை இவையென அறிவித்து எனக்கு ஞானத்தை வழங்கினான். மேலான நெறிகளை எல்லாம் எனக்கு தெளிவாக்கினான். என் தந்தை அவன், பிறவித் தளையை அகற்றிய பெருமான். அப்பெருமானை விட்டுப் பிரியாத விபூதிகள் பல இருக்கின்றன. இவை உனக்கு சொந்தமாயிருந்தும் அற்ப மனமே, நீ கீழ்மையில் தடுமாற்றம் அடைகின்றாய். பொய் நடைகள் உன்னிடம் மிகுந்திருக்கின்றன. கெடுவதற்கான உத்திகளால் என்னைக் கெடுத்துக் கீழ்மையில் ஆழ்த்துகின்றாய்.

மனிதர்கள் தங்கள் தோல்விக்கும், துன்பத்திற்கும் அடுத்தவர்களைத்தான் காரணம் காட்டுவார்கள். மனம் மாயையின்பாற் செல்வது. அது அறிவுரைகளை ஏற்காது. மாயை மனத்தை வெல்வதே அறிவின் பயன். மாயையின்பாற் செல்கிற மனம் தன்னை எவ்வெவ்வகையில் கெட்டழிக்க முயல்கிறது என்பதை அறிவு விழிப்புடனிருந்து கண்காணிக்க வேண்டும். இதனால், ஞானம் பெற்ற பின்பும் அதன் வழியே ஒழுகா விடில் கேடும் இழிவும் உண்டாகும் என்பது கூறப்பட்டது.


பாடல் எண் : 03
மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மதியிலி மடநெஞ்சே
தேறுகின்றிலம் இனியுனைச் சிக்கனெச் சிவனவன் திரள் தோள்மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே.  

பாடல் விளக்கம்:
எமது அறிவற்ற மூட மனமே, நீ என்னுள் இருந்துகொண்டே என்னை கெடுக்கிறாய். ஒருபோதும் இனியுன்னை நம்புவதற்கில்லை. திருநீறணிந்த சிவனார்தோள் கண்டும் உனக்கு உள்ளக் கசிவு உண்டாகவில்லை. உடற்பற்று நீங்கவில்லை. அழிவை நோக்கிச் செல்வது உன் போக்கு. இது கேட்கச் சகிக்காத ஒன்று. 

மனம் நீர் போன்றது, நீரானது சேர்கின்ற மண்ணின் நிறத்தை அடைகிற மாதிரி, தன்னுடன் சேர்கிற பொருளின் தன்மையைப் பெறுகிற மாதிரி மனமும் உலக விஷயங்களைச் சார்ந்து தன் வலிமை இழக்கிறது. அது சிவத்தை அடையுமேல் சிவமயமாகும். தீயிற் சுட்ட பொருள் அனைத்தும் சாம்பலாகிவிடும். அது முடிவான பொருள். அதன் தன்மை மாறாது. அது தான் திருநீறாய் அணியப்படுவது. அதுவே சிவனது சின்னம். கீழ்மையில் கிடக்கிற மனது கேடுசெய்யும், கெட்டழியும், அது நல்லதில் சேர்ந்திட நன்மை விளையும், ஆத்மா தூய்மைப்படும்.


பாடல் எண் : 04
கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை
விற்றெலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர்த் திருப்பாதம்
முற்றிலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன்
அற்றவாறும் நின்னறிவும் நின்பெருமையும் அளவறுக் கில்லேனே.

பாடல் விளக்கம்:
ஏ மனமே! நீ உலக சுகங்களைத் துய்ப்பதிலேயே எப்போதும் நாட்டம் கொண்டு இருக்கிறாய். அதனால் நீ அழிந்துபட்டுப் போவாய். என்றும் இளமை மாறாதிருக்கும் இறைவனது திருவடிக்கே நான் ஆளாகியிருக்கிறேன். அவன் என்னை எது வேண்டுமாயினும் செய்து கொள்ளலாம். நான் அவனுக்கே சொந்தம். ஆனால் நீயோ அந்த இறைவனைப் புறக்கணித்துவிட்டு சிற்றின்ப நுகர்ச்சியில் ஈடுபாடு கொண்டுள்ளாய். அவ்வகையில் இவ்வுடலைக் கொண்டு எண்ணற்ற இன்பங்களை நீ அனுபவித்து இருக்கிறாய். அதற்கேற்ற சிற்றறிவு தான் உன்னிடம் இருக்கிறது. அச்சிற்றறிவு நீ அனுபவித்த உலகியல் சுகங்களை பற்றிப் பெருமையாய் பேசவைக்கிறது. உன் பெருமைகள் மாயமாய் மறைவதை எண்ணிப்பார்.

இறைவனிடத்தில் இருந்து வரும் இன்பம் பேரின்பம். அது சாசுவதமானது. ஆனால் புலன்வழிப் பெறுகிற இன்பமே சிற்றின்பம் நிலையற்றது. உடனடியாய் மறைந்துபோவது. விவேகத்தால் இதனை ஆராய்ந்து மெய்விளக்கம் பெறவேண்டும். அப்போது தான் ஆன்மா தூய்மை அடையும்.


பாடல் எண் : 05
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெருங்களன் செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. 

பாடல் விளக்கம்:
மனமே, உனக்கொரு உண்மை சொல்வேன். சிவபெருமான் தேவர்களாலும் அறியப்படாதவன், ஆனால் தனது அடியார்களுக்கு எளியவன். அவன் நமபால் கொண்ட பரிவு காரணமாய் நமது தீமைகளை அகற்றி நம்மை ஆட்கொள்ள சித்தம் கொண்டுள்ளான். அவனது கருணையை எண்ணி நீ கசிந்துருகியிருக்க வேண்டும். இந்திரியங்களுக்கு இலக்காயுள்ள சிற்றின்பங்களை நீ வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டும். உன்னிடமுள்ள குற்றங்களை நீக்கி இறைவனது திருவடியை வணங்கியிருத்தல் வேண்டும். ஆனால் நீ அவ்வாறெல்லாம் செய்யவில்லை. உன் பேதமையை என்னவென்பது?.

இந்திரிய சுகங்களில் சிக்கியுள்ள மனவிகாரத்தைப் போக்கி அவற்றின் மீது ஒரு வெறுப்பே உண்டாகும்படி செய்வான் இறைவன். தன் மீது அளவற்ற அன்பு வைத்து கண்ணீர் மல்கி தன்னை வாழ்த்தி வணங்குவோருக்கு அதனைச் செய்கிறான். பக்தி என்பது புறவொழுக்கம் மட்டுமல்ல. தனது உள்ளத்து மாசுக்களைத் துடைத்துத் தூய மனத்துடன் இறைவனை வழிபட வேண்டும். 

மோட்ச வீட்டின் தலைவனாகிய இறைவனை அடையவும் அவனருள் வேண்டும். இறையருள் பெற்று இன்புறுவதே மனித வாழ்வின் பயனாகும். இதனைப் "பரகதி புகுவானே" என்னும் சொற்களால் அறிவுறித்தியுள்ளார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 06
புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்கு
உகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை ஆண்டவன் கழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற்கு என்செய்கேன் வினையேனே. 

பாடல் விளக்கம்:
சென்று அடைதற்கு உரியதும், சென்றால் மீளுதலில்லாததும் ஆகிய சிவலோகம், புகுதற் பொருட்டுச் செல்லுவதற்குத் தடையான பற்றுக் கழல்வதும் எம் தந்தையும், எம் தலைவனும், என்னை ஆண்டருளினவனும் ஆகிய இறைவனது திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் உருகுதலும் நாள் தோறும், அமுதத்துடன் தேன் பால் கற்கண்டினும் மேற்பட்ட பேரின்பம் விளைவதும் இல்லையாயின் இதற்குத் தீவினையுடையேன் யாது செய்ய வல்லேன்?

தேவலோகம் முதலியவற்றுக்குச் சென்றால் மீளவும் பிறப்பு உண்டு. சிவலோகம் சென்றால் பிறப்பு இல்லை; ஆதலின், புகத்தக்கது சிவலோகமே என்பார். இறைவன் திருவடி மலருக்கு அன்பு செய்தற்கும், அம்மலரிலுள்ள தேனை உண்டு இன்பம் அனுபவித்தற்கும் தவம் செய்திருக்க வேண்டும்.


பாடல் எண் : 07
வினை என்போல் உடையார் பிறரார் உடையான் அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே
முனைவன் பாத நன்மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் இன்னது என்று அறியேனே.

பாடல் விளக்கம்:
என்னைப் போலத் தீவினை உடையவர் பிறர் யாருளர்? என் முதல்வன் நாய் போன்ற அடியேனைத் தினையளவும் நீங்கியிருப்பது அவனது திருக்குறிப்பு அன்று; ஆதலால் இறைவனது திருவடியாகிய நல்ல மலரை, நானே நீங்கியிருந்தும் தலையைக் கல் முதலியவற்றில் முட்டிக் கொள்கிலேன், பிளந்து கொள்ளேன், இத் தன்மையேனாகிய என்னுடைய பாவனை இரும்பாகும், மனமானது கல்லாகும், காது இன்ன பொருள் என்று அறியேன்?.

உலகத்தில் தலைவனைப் பிரிதலுற்றார் தலையை மோதிக் கொள்ளுவதையும், மண்டையை உடைத்துக்கொள்வதையும் காண்கிறோம்; இறைவனாகிய தலைவனைப் பிரிதலுற்றார் இச்செயல்களை மிகவும் செய்ய வேண்டும் அன்றோ! அவ்வாறு செய்யவில்லையே என்பார், "பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன்" என்றார். கருத்துப் பண்பட வேண்டும். அதன் பிறகே அன்பை மனம் ஏற்றுக்கொள்ளும். கருத்தும் பண்படவில்லை, அதனால் மனமும் உருகவில்லை என்பார், "பாவனை இரும்பு, கல் மனம்" என்றார். கருத்து, மனம் இவற்றைக்காட்டிலும் செவி மிகவும் வன்மையுடையதாய் இருக்கின்றது என்பதற்கு, "செவி இன்னதென்று அறியேன்" என்றார். செவி முதலிய பொறிகளும், மனம் முதலிய அந்தக்கரணங்களும் தம்மோடு ஒத்துழைக்கவில்லை என்று வருந்துகிறார் அடிகள். இதனால், இறைவன் ஆட்கொண்ட பின்னர்ப் பிரிந்து வாழ்வது பெருந்துன்பமானது என்பது கூறப்பட்டது.


பாடல் எண் : 08
ஏனை யாவரும் எய்திடல் உற்று மற்று இன்னது என்று அறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனை என் சிவலோகக்
கோனை மான் அன நோக்கி தன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே.

பாடல் விளக்கம்:
மற்றையோர் எல்லாரும் இன்னது என்று அறியப்படாத தேன் போல்வானும், பசுவின் நெய் போல்வானும், கரும்பின் இனிமையான சாறு போல்வானும், சிவனும் எனது சிவலோகத் தரசனும், பெண்மானின் நோக்கம் போன்ற திருநோக்கத்தை உடையவளாகிய உமாதேவியின் ஒரு பாகத்தை உடையவனும் ஆகிய இறைவனை அணுகிலேன். நீண்ட நாள்கள் இருந்து உடம்பை வளர்க்கின்றேன். கெடுவேனாகிய எனது உயிர் ஒழியவில்லையே!. இதனால் சிவபோகத்தை விரும்புவார் உலக இன்பத்தை விரும்பமாட்டார் என்பது கூறப்பட்டது.


பாடல் எண் : 09
ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித்
தாயில் ஆகிய இன்னருள் புரிந்த என் தலைவனை நனி காணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.

பாடல் விளக்கம்:
அழிவற்றவைகளை, ஒப்புவமையில்லாதவைகளை, ஞானவெளி வீசும் செங்கமலத் திருவடிகளை இறைவன் எனக்கு வழங்கியருளினான். கீழ்மையுற்ற எனக்கு மேலான வழியை அவன் காட்டியருளினான். தாய்மை நிறைந்த மனதால் என்னை ஆண்டு கொண்டான். அவனைக் காணப்பெறாத நிலையில் நான் அனலில் விழுந்தோ, மலையிலிருந்து உருண்டோ, அழ்கடலில் மூழ்கியோ உயிரை மாய்த்து கொள்ளாதிருக்கிறேனே. இதனால், சிவபோகத்தை விரும்புவார் உலகத்தைத் துறந்து உயிரை விடத் துடிப்பர் என்பது கூறப்பட்டது.


பாடல் எண் : 10
வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டினும் உண்டு உடுத்து இருந்தேனே.

பாடல் விளக்கம்:
மாதர் மயக்கத்தில் சிக்கி, உழன்ற என்னை ஆட்கொண்டருளின இறைவனது சிவபுரத்தை அடையாமல், உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் பொருட்டு இன்னமும் உண்டும் உடுத்தும் இருந்தேன். என்னே என் நிலை?. இதனால், உலக போகங்களைத் துய்ப்பதற்கான செயல்களை விடுத்த உயிருக்கு உறுதி தரும் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

1 கருத்து:

  1. அருமையான பொருளுரை. மனதை பக்குவப்படுத்தி இறைவன் பால் சிந்தனையை செலுத்த உறுதுணையாக பாடல் வரிகள்.

    பதிலளிநீக்கு