புதன், 17 பிப்ரவரி, 2016

05 திருவாசகம் - திருச்சதகம் 02 அறிவுறுத்தல்


பாடல் எண் : 01
நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என்
ஊடு அகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே.

பாடல் விளக்கம்:
நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.


பாடல் எண் : 02
யானேதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான் எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே.

பாடல் விளக்கம்:
நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியேனாகும் காலம் எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.


பாடல் எண் : 03
வருந்துவன் நின்மலர்ப் பாதம் அவை காண்பான் நாயடியேன்
இருந்து நலமலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப்
பொருந்திய பொற்சிலை குனித்தாய் அருளமுதம் புரியாயேல்
வருந்துவன் அத்தமியேன் மற்று என்னே நான் ஆமாறே. 

பாடல் விளக்கம்:
நான் உன் திருடியைக் காணும் பொருட்டு மலர் சூட்டேன்; நாத்தழும்பு உண்டாகத் துதியேன்; இவை காரணமாக நீ உன் அருளாகிய அமிர்தத்தைத் தந்தருளாயானால், நான் வருந்துதலேயன்றி உனக்காளாகும் விதம் யாது?.


பாடல் எண் : 04
ஆமாறு உன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைக்கின்றேன் சதுராலே சார்வானே.

பாடல் விளக்கம்:
அறிஞர் அறிவுக்குப் புலப்படுவோனே! உன் திருவடிக்கு ஆளாகும் பொருட்டு மனம் உருகுதலும் அன்பு செலுத்துதலும், பூமாலை புனைந்தேத்துதலும், புகழ்ந்துரைத்தலும், திருக்கோயில் பெருக்குதலும், மெழுக்கிடுதலும் கூத்தாடுதலும் முதலியவற்றில் யாதும் செய்யேன். ஆயினும் இந்த உலக வாழ்வை நீக்கி உன் திருவடியைப் பெற விரும்புகிறேன். உன் பெருங்கருணையால் என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்.


பாடல் எண் : 05
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.

பாடல் விளக்கம்:
ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மைகளாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?.


பாடல் எண் : 06
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டிச்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாயடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே.

பாடல் விளக்கம்:
தேவர் உன்னைத் துதிப்பது, தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழ விரும்பியேயாம். வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே! நான் அப்படியின்றி என் பிறவித்தளையை அறுத்துக் கொள்ள விரும்பியே உன்னைத் துதிக்கின்றேன்.


பாடல் எண் : 07
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறுடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழலிணைகள் காண்பாரோ அரியானே. 

பாடல் விளக்கம்:
கடவுளே! உன் அருமை நோக்கித் தேவர் உன்னைப் பரவுகின்றனர். வேதங்கள் ஓதி மகிழ்கின்றன. உமாதேவி ஒரு பாகத்தை நீங்காது இருக்கின்றனள். மெய்யடியார்கள் கூடிக் காண்கின்றனர். நான் ஒன்றும் செய்திலேன். ஆயினும் என்னை உன் பெருங்கருணையால் ஆட்கொள்ள வேண்டும்.


பாடல் எண் : 08
அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரையார்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்துருகேன்
தரியேன் நான் ஆமாறு என் சாவேன் நான் சாவேனே.

பாடல் விளக்கம்:
கடவுளே! சிறியேனை ஆட்கொண்டருளின உன் திருவடியைப் பாடுதல், மலர் தூவி மகிழ்தல், வியந்து அலறல், நயந்து உருகுதல் முதலியவற்றைச் செய்து உய்யும் வகை அறியாமல் உயிர் வாழ்கின்றேன். எனவே நான் இறப்பதே தகுதியாகும். 


பாடல் எண் : 09
வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊனெலாம் நின்றுருகப் புகுந்து ஆண்டான் இன்று போய்
வானுளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 

பாடல் விளக்கம்:
மன்மத பாணத்துக்கும் காமத்துக்கும் வசப்பட்டுள்ள மனமே, நீ பாழாய்ப் போகின்றாய். உருவம் எடுத்து நம்மை ஆளவந்த ஈசன் இன்று அருவமாயிருக்கிறான். அவனைக் குறித்து முழுதும் உருகுவாயாகில் நீ உய்வு அடைவாய். காம நோய்க்கு உட்பட்டவர் ஒரு பொழுதம் பரமனை அடையார். மன்மத தகனம் செய்தவரே ஈசனை அடைவார்கள் என்னும் கோட்பாடு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு அடிகளில் மகளிரின் அழகு சித்திரிக்கப்பட்டுள்ளது.


பாடல் எண் : 10
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே.

பாடல் விளக்கம்:
நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழிபடுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்?. 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக